கிழக்கு முனையம்: முத்தரப்பு ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – இந்தியா
2019 இல் கையெழுத்திடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்தை காலதாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்றும்படி இந்தியா இலங்கைக்கு கூறியுள்ளது.
இலங்கையின் தொழிற்சங்கங்கள், சிங்கள பெளத்த தேசியவாதிகளின் எதிர்ப்பினால் இவ்வொப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான தீர்மானத்துக்கு அமைச்சரவை ஏற்கெனவே அங்கீகாரம் வழங்கிய நிலையில் இம் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு தற்போது முற்று முழுதாகத் துறைமுக நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றுத் திட்டமாக துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் இதர பங்காளிகளுடன் இணைந்து செயற்படுமாறு இலங்கை கேட்டுக்கொண்டதெனவும் அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மறுத்துவிட்டன எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இம் முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை அமைச்சரவை சம்மதம் தெரிவித்திருந்ததுமல்லாமல் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஜயசங்கரிடம் ஜனாதிபதி ராஜபக்ச இது குறித்த உத்தரவாதத்தையும் அளித்திருந்தார்.
துறைமுக, கப்பல் போக்குவரத்து அமைச்சர் நேற்று சமர்ப்பித்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை கிழக்கு முனைய நிர்வாகத்தின் 100% உரிமையையும் மீண்டும் துறைமுக நிர்வாகத்திடம் வழங்குயிருக்கிறது. இதனால் நாடுதழுவிய ரீதியில் நடைபெறவிருந்த எதிர்ப்புப் போராட்டத்தைத் தொழிற்சங்கங்கள் கைவிட்டுள்ளன.
ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக இந்தியாவுக்கு இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னர் அதை முழுமையாக நிறைவேற்றும்படி இந்தியா கேட்டுள்ளது. இதன் எதிரொலியாக அடுத்து இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது பற்றிச் சில செய்திகள் கசிந்துள்ளன எனினும் அவை இந்தியாவின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தியாவின் இவ்வுத்தேச நடவடிக்கைகளில் ஒன்று மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக (இலங்கைக்கு எதிராக) வாக்களிப்பது. கடந்த காலங்களில் பெரும்பாலான வாக்களிப்புகளின்போது இந்தியா இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவந்திருந்தது.
இரண்டாவது நடவடிக்கையாக, இலங்கை – இந்திய ஒப்பந்தங்களை இலங்கை ஒருபக்கமாக முறித்துக்கொள்வதனால், சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தந்தத்தை இந்தியா ஒருபக்கமாக முறித்துக்கொள்வதன்மூலம் கச்சதீவை மீண்டும் தன்னகப்படுத்திக்கொள்வது.
அதே வேளை ஜெனிவாவில்…
இதே வேளை ஜெனிவா விவகாரங்கள் இலங்கைக்கு மேலும் தலையிடிகளை அள்ளிக் குவித்துக்கொண்டு வருகின்றன.
கோதாபய ராஜபக்ச பதவியேற்றபோது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், போர்க்குற்றங்கள் சாட்டப்பட்டுள்ள கமல் குணரத்தன, ஷவேந்திர சில்வா போன்றோருக்கு பதவிகள் எதையும் வழங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். இப்படி நடக்கும்போது ஜெனிவா போன்ற அரங்குகளில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது என அவர் அப்போது கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த கோதாபய, தான் அப்படிச் செய்யமாட்டேன் என உறுதியளித்திருந்தார். ஆனால் அவ்வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. முத்தரப்பு ஒப்பந்தத்துக்கும், இதே போன்று, கோதாபய டாக்டர் ஜயசங்கருக்கு உத்தரவாதம் கொடுத்திருந்தார். அதையும் இப்போது அவரால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
அதே வேளை மனித உரிமை ஆணையாளர் மிஷெல் பக்கெலெயின் அறிக்கை பலரும் எதிர்ப்பார்த்ததைவிட மிகவும் காட்டமாக இருக்கிறது எனப் பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தால் இலங்கைக்கு ஆதரவாக அது நிறைவேறும் என்பதைப் பலரும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதையும் மனதில்கொண்டுதான் ஆணையாளர் தனது அறிக்கையையைத் தயாரித்திருக்கிறார். சர்வதேச் குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்தல், சர்வதேச சட்டவரம்புத் தத்துவத்தைப் பிரயோகித்து போர்க்குற்றவாளிகள் மீது எவரும் எங்கும் வழக்குப் பதியலாம் என்ற விடயம் ஆகியன இலங்கை ஆட்சியாளரை அச்சப்படுத்தும் விடயங்களாகும். அமெரிக்க ஜனாதிபதிகள் நிக்சன், ஃபோர்ட் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கிய ஹென்றி கீசிங்கர் மீது இப்படியான வழக்கொன்று இருப்பதால் அவர் வெளிநாடுகளுக்கு அதிகம் பயணம் செய்வதில்லை.
இப்படியான வேளைகளில் இலங்கையைத் தொடர்ந்து காப்பாற்றிவந்த இந்தியாவை ஓரங்கட்டிய இலங்கை இந்தத் தடவை பெரும் இன்னல்களுக்கு உள்ளாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.