Sri Lanka

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி விநோபா சீனாவின் கையாள்?

வடக்கு கிழக்கில் துரிதப்படுத்தப்படும் கடலட்டைப் பண்ணைகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பிரிவில் மூத்த விரிவுரையாளராகக் கடமையாற்றிய கலாநிதி விநோபா அவர்களை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார் எனவும் அவரை ஜூன் 12 அன்று கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசிய நீர்வள ஆராய்ச்சி ஆணையத்தின் (National Aquatic Resources Research and Development Agency (NARA)) பணிப்பாளராக நியமித்திருக்கிறார் எனவும் இன் நியமனத்தின் பின்னால் சீன அரசின் தலையீடு இருக்கிறது எனவும் முறையீடுகள் எழுந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் சீன பல்கலைக்கழகம் ஒன்றிற்கும் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குமிடையில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கியதில் கலாநிதி விநோபா முன்னின்று பணியாற்றியவர் என்பதனால் சீனா இவரைத் தமக்குச் சாதகமாகக் கையாளலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தை அண்டியுள்ள கடல் மண்ணில் எலெக்ட்றோணிக் சிப்ஸ் (chips) மற்றும் மின்வாகனங்களின் கலங்களைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலகங்கள் (Rare earth minerals) இருக்கின்றன எனவும் உலகில் இம்மூலகங்களிற்கான தட்டுப்பாடு உள்ளதுடன் சீனா தனது மின்வாகனத் தயாரிப்பை முடுக்கிவிட்டிருப்பதன் காரணத்தால் இலங்கையிலிருந்து மூலகச் செறிவுள்ள மட் படிமங்களை மலிவாக இறக்குமதி செய்ய முனைகின்றது. கடந்த சில வருடங்களில் ஆறுகளைத் தூர்வாரும் முயற்சி, கடலட்டை வளர்ப்பு முயற்சி எனப் பலவழிகளிலும் மட்படிமங்களை அள்ளி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குக் கொண்டு சென்றமை பற்றி புகார்கள் எழுந்திருந்தன. அதே வேளை மட்டக்களப்புக் கடலில் சீனக் கப்பல்கள் நீண்ட காலமாக நங்கூரமிட்டிருந்தமை பற்றியும் புகார் செய்யப்பட்டிருந்தது. இப்பின்னணியில் கலாநிதி விநோபாவின் நியமனம் சந்தேகத்தை எழுப்புவதாகப் பல்கலைக்கழக வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்துவருகின்றன.

இதே வேளை முல்லைத்தீவு பிரதேசத்தில் கடலட்டை வளர்ப்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடலை ஜூன் 13 அன்று அமைச்சர் தேவாநந்தா ‘நாரா’ அதிகாரிகரிகளோடு மேற்கொண்டிருந்தார் எனவும் இத் தேவைக்காக சூழலியல் அறிக்கையைத் தயாரிப்பதில் கலாநிதி விநோபாவின் பங்கு இருக்குமென்பதால் அவரது நியமனம் தேவை கருதி சீனாவின் அனுகூலங்களை மேற்கொண்டே வழங்கப்பட்டது எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுவரை யாழ்ப்பாணத்தில் 268, கிளிநொச்சியில் 277, மன்னாரில் 123 கடலட்டைப் பண்ணைகள் செயற்பட்டு வருகின்றன. இக்கடலட்டைப் பண்ணைகளினால் சூழல் வெகுவாகப் பாதிப்படைகிறது என விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருந்தும் முல்லைத்தீவில் பண்ணைகளை நிறுவ சீன நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. கடலட்டைகள், கடல் தாழைகள் போன்றவை சீனரின் உணவில் முக்கிய பங்காற்றுபவை ஆகையால் இப்பண்ணைகளின் விளைபொருட்கள் அனைத்தும் ஏற்றுமதிக்கே போகின்றன. இதனால் வடமாகாண மீனவர் எதுவித பலனையும் பெறுவதில்லை.

யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திலும் சீனாவின் தலையீடு அதிகரித்து வருகிறது. ஜூன் 21 அன்று சீன யுன்னான் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த யோகாசன நாள் நிகழ்வில் பங்குகொள்ளும்படி யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அத்தோடு மே 29 இற்கு முன்னர் அவரது வரவிற்கான பதிலைத் தருமாறு யுன்னான் பல்கலைக்கழகம் கோரியுமிருந்தது. இருந்தும் மே 22 வரை துணைவேந்தர் அதற்குப் பதிலளிக்காமல் இருந்த காரணத்தால் மே 23 அன்று அமைச்சர் தேவாநந்தாவின் செயலாளர் தலையிட்டு துணைவேந்தரைப் பதிலளிக்குமாறு பணித்ததோடு குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டுமென வற்புறுத்தியுமிருந்தார். அப்படியிருந்தும் துணைவேந்தர் சீனாவுக்குப் போகாமல் யப்பானுக்குச் சென்றுவிட்டார்.

இதன் காரணமாக கலாநிதி விநோபாவை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்க சீனா முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவ்விடயம் தற்போது சீன-இந்திய முறுகல் நிலைக்கு வந்திருக்கிறது எனக்கூறப்படுகிறது. (படங்கள்: தி நியூஸ் வெப்)