Sri LankaVolunteer Orgs.

கிழக்கு: பறங்கியாமடு கிராமத்தில் வாழ்வாதார மேம்பாடு

கடந்த வருடம் இக்குடும்பங்களிலிருந்து இரண்டு மாணவிகள், கிராமத்தின் வரலாற்றில் முதல் தடவையாக பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.

பறங்கியாமடு மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குக் கரையிலுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேசம். மறுவாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் உட்பட 126 குடும்பங்கள் இங்கு வாழ்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான கழிவறைகள், கிணறுகள், உறைவிடங்கள், வாழ்வாதாரங்கள் இல்லாது மிகவும் சிரமங்களுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். தாம் சொந்தமாக மீன் பிடித்து வாழ்க்கையை நடத்துவதற்கு வலைகள், படகுகள் போன்ற உபகரணங்கள் இல்லாமையால் இக்கிராமத்திலுள்ள ஏறத்தாழ அனைத்து ஆண்களும் மேற்குக் கரையிலிருக்கும் புத்தளத்திற்கு அருகிலுள்ள உடப்பு என்னும் கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மீனவர்களுக்கு பணிபுரிந்து வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.இவர்கள் தாம் வாழும் கிராமத்திலேயே மீனவத் தொழில்களை ஆரம்பித்து தமது குடும்பங்களை வாழவைக்க முடியும். அதற்காக அவர்கள் மிகவும் ஆவலோடு இருக்கிறார்கள். இதன் மூலம் இவ்வாண்கள் தமது குடும்பங்களைப் பிரியாது தமது வீடுகளிலேயே இருந்து கிராமத்தையும் மேம்படுத்தலாம்.

Assist RR எனும் பிரித்தானியாவைச் சேர்ந்த அமைப்பு வடக்கு கிழக்கில் போருக்குப் பின்னான காலங்களில் மக்களின் தேவைகள் போன்றவற்றை ஆராய்ந்து எங்கெங்கு தேவைகள் அத்தியாவசியம் என்பதை அறிந்து இதர புலம் பெயர் தமிழர் அமைப்புக்களிடம் இவ்வுதவிகளுக்கான கோரிக்கைகளை முன்வைக்கிறது. இதன் பிரகாரம் மலேசியாவிலிருந்து அலக அறக்கட்டளை (Alaka Foundation, Malaysia), தமிழ் மன்றம் (Tamil Forum, Malaysia) ஆகிய அமைப்புக்களும், அமெரிக்காவிலிருந்து அனைத்துலக மருத்துவ நல அமைப்பும் (IMHO USA), Assis RR அமைப்புடன் சேர்ந்து பறங்கியாமடு கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளை வழங்க முன்வந்தன. இதன் பேறாக இலங்கை ரூ.30.3 மில்லியன் செலவில் இம்மக்களுக்கு உறைவிடங்கள், கழிவறைகள், படகுகள், இயந்திரங்கள் ஆகியன வழங்கப்பட்டன. இதில் 50% மான செலவை மலேசிய அமைப்புக்கள் பொறுப்பெடுத்திருந்தன. 2021 இல் நிறைவேற்றப்பட்ட இத்திட்டத்தின் பயனாக 45 குடும்பங்களுக்கு உறைவிடங்களும், 90 குடும்பங்களுக்கு கழிவறைகளும், 80 குடும்பங்களின் பகிர்ந்த பாவனைக்காக 16 படகுகள், இயந்திரங்கள், வலைகள் ஆகியனவும் வழங்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே சொந்தமாகப் படகுகளை வைத்திருந்த 40 குடும்பங்களுக்கு வலைகள் வழங்கப்பட்டிருந்தன.

2021 இல் நிறைவேற்றப்பட்ட இத்திட்டத்தின் பலாபலன்களை அறிவதற்காக Assist RR சமீபத்தில் இக்கிராமத்தவரிடையே ஆய்வொன்றை நடத்தியிருந்தது. 118 குடும்பங்கள் பங்குபற்றிய இக்கேள்விக் கொத்தில் பின்வரும் கேள்விகள் இடம்பெற்றிருந்தன:

  • 1. குடும்ப விபரங்கள்
  • 2. எப்படியான உதவிகளைப் பெற்றிருந்தார்கள் (வீடு/படகு/வலை/இயந்திரம்/கழிவறை/கிணறு)
  • 3. உதவிகளைப் பெறுவதற்கு முன்னரும் பின்னரும் பெற்ற வருமானம்
  • 4. உதவிகளைப் பெற்றபின் பெற்ற வாழ்வாதார மேம்பாடு
  • 5. அவர்களது நிதி நிலைமையில் ஏற்பட்ட முன்னேற்றம்
  • 6. குழந்தைகளின் கல்வியில் அடைந்த முன்னேற்றம்

இக்கேள்விகளுக்குக் கிடைத்த பதில்கள்:

செயற்பாடுகள் / நன்மைகள் / முன்னேற்றம்முன்னர்பின்னர்
சராசரி வருமானம்ரூ. 19769.23ரூ.43871.79
அதியுச்ச வருமானம்ரூ. 35,000.00ரூ. 80,000.00
வாழ்வில் திருப்தி, மகிழ்ச்சி பெற்ற குடும்பங்கள்117
குழந்தைகளின் கல்வியில் மேம்பாடு54
குடும்பங்களோடு அதிக நேரம் செலவிடுதல்19
வீடு புனரமைப்பு, விரிவாக்கம்24
புதிய தளபாடம், வீட்டுக்குத் தேவையான பண்டங்கள்30
வங்கியில் சேமிப்பு / நகை வாங்குதல்36
புதிய வாகனம்15
வியாபார முதலீடு / புதிய வியாபார முயற்சிகள்23
கடன் தீர்ப்பு13
Assis RR அமைப்பின் ஆய்வு முடிவுகள்

இவ்வாய்வின் அனுமானமாக, மேற்படி குடும்பங்கள் மிகழ்வும் மகிழ்ச்சிகரமாக இருப்பதோடு கடந்த வருடம் இக்குடும்பங்களிலிருந்து இரண்டு மாணவிகள், கிராமத்தின் வரலாற்றில் முதல் தடவையாக பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. பல குடும்பங்கள் தமது குழந்தைகளை மாலை பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்புகிறார்கள். 118 குடும்பங்களில் 117 தமது மகிழ்ச்சியையும், திருப்தியையும், நன்றிக்கடனையும் தெரிவிக்கிறார்கள். ஏறத்தாழ அரைவாசிக் குடும்பங்கள், தந்தைமாரின் வருமான முன்னேற்றம், குடும்ப பிரசன்னம் காரணமாகத் தமது குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 24 குடும்பங்கள் தமது வீடுகளை முன்னேற்றவும், விஸ்தரிக்கவும் ஆரம்பித்துள்ளார்கள். 15 குடும்பங்கள் பைசிக்கிள்கள், ஆட்டோ றிக்‌ஷோக்கள், மோட்டர் சைக்கிள்கள் ஆகியவற்றை முதன்முதலாக கொள்முதல் செய்துள்ளனர். இவயெல்லாம் கடந்த இரண்டு வருடங்களில் கண்ட முன்னேற்றங்கள். தாமே தமக்கு முதலாளிகள் எனப் பெருமையோடு இவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்கு ஒரு கிராமத்தையே மாற்றியமைக்க உங்கள் பண உதவியும், தாராள நன் மனங்களுமே உதவி செய்தன. ஆயிரம் கோடி நன்றிகள்! என வாழ்த்துகின்றன இவ்வமைப்புகள்.