கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் – ஆளும் கூட்டணிக்குள் கருத்து மோதல்?
கிழக்கு கொள்கலன் முனையப் பாவனையை இந்திய-யப்பான் நாடுகளுக்கு கொடுப்பது தொடர்பான விடயத்தில் ஆளும் கூட்டணிக் கட்சிகளிடையே பலத்த கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பாக 2019 இல் செய்யப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதாக, தற்போதய அரசின் அமைச்சரவையினால் மூன்று மாதங்களுக்கு முன்னர், வாக்குறுதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சிங்களக் கடும்போக்காளர், தொழிற்சங்கங்கள் ஆகியோரின் எதிர்ப்பின் மத்தியில் அவ்வொப்பந்தத்திலிருந்து இலங்கை ஒருதலைப்பட்சமாக விலகுவதென்று மூன்று நாட்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
இவ் விடயத்தில், சமீபத்தில் இலங்கை வந்திருந்த, இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெயசங்கருக்கு ஜனாதிபதி ராஜபக்ச மீண்டும் உத்தரவாதத்தை வழங்கியிருந்தார். அப்படியிருந்தும், தற்போது ஏற்பட்டுள்ள நாடுதழுவிய எதிர்ப்பின் காரணமாக ஜனாதிபதி தனது வாக்குறுதியிலிருந்து மீற வேண்டி ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணியாக ஆளும் கூட்டணியில் இருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச என ஜனாதிபதி தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.
முக்கியமாக, இவ்விடயத்தில் அமைச்சரவை எடுத்த இன்னுமொரு முடிவான, கிழக்கு முனையத்திற்குப் பதிலாக, மேற்கு கொள்கலன் முனையத்தை இந்திய-யப்பான்-அதானி குழுமத்துக்கு வழங்குவதென்ற தீர்மானத்தை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவிப்பதற்கு முன்னதாகவே வீரவன்ச ஊடகங்கள் மூலம் அதை அறிவித்திருந்தார்.
இது குறித்து அவரது கொழும்பு இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து அவர் அச் செய்தியை வெளியிட்டிருந்தார். இதனால் ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா மற்றும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர்கள் பலரும் வீரவன்ச மீது கடும் அதிருப்தி கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. சிரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவாசம் வீரவன்சவைப் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
திங்களன்று (01) அவர் ஊடகங்களுடன் மேற்கொண்ட சந்திப்பின்போது, “சிறீலங்கா பொதுஜன பெரமுன இப்படியான கீழ்த்தர அரசியலைச் செய்வதில்லை. சகல மந்திரிசபைக் கூட்டங்களிலும் , சகல குழுக்கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் அமைச்சர் வீரவன்சாவுக்கு அமைச்சரவையின் தீர்மானங்கள் அனைத்தும் தெரியும். இருப்பினும் தனது சுய தேஐகளுக்காக அவர் இப்படி நடந்துகொள்கிறார். அவரது நடத்தை குறித்து நாம் மிகவும் வருத்தமடைகிறோம்” எனக் காரியவாசம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததன்படி, “ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ மற்றவர்களின் அழுத்தத்துக்காக இறங்கிப் போகப் போவதில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியும், அரசாங்கமும் இந் நாட்டையும் மக்களையும் நேசிக்கிறார்கள். அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் நிறைவு செய்து வருகிறோம். நாடு அபிவிருத்தி செய்யப்படும். அது வேறொரு நாட்டின் ஆதிக்கத்தில் இல்லை. அது சரியான வழியிலேயே செயற்படுகிறது. கட்சி அதைச் செய்கிறது எனபதை நான் உறுதியாகக் கூறுவேன்”
கட்சிக்குள் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு அடிமைகளாகச் செயற்பட வேண்டுமென்பதில்லை – வீரவன்ச
இதே வேளை, காரிவாசத்தின் கருத்துக்களுக்குப் பதிலளித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வீரவன்ச, “ஆளும் கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் எந்தவொரு குழுவுக்கும் அடிமைகள் போல் செயற்படாமல் தங்களுக்குரிய கடமைகளைச் செய்யவேண்டும். இவ்வரசாங்கத்துக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களே தனது நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் 10 கட்சிகளின் தலைவர்கள் நேற்று வீரவன்சவின் கொழும்பு இல்லத்தில் சந்தித்த பின்னர் கூட்டாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்போது வீரவன்ச இதைத் தெரிவித்தார்.
“அரசாங்கத்திற்கு உள்ளேயே, வெளியேயோ எழுகின்ற தடைகளை எதிர்கொள்ள நாம் அச்சப்படக்கூடாது. ஜனாதிபதிக்கு ஏற்படும் இப்படியான தடைகளை அகற்றி, 69 இலட்சம் மக்களின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டும். கிழக்கு கொள்கலன் முனையம் ஏற்படுத்திவரும் பிரச்சினைகள் இவ்வரசாங்கம் மீது மக்கள் வைத்திருக்கும் அபிப்பிராயத்தைத் தீர்மானிக்கப்போகும் விடயமாக மாறிவருகிறது” என அவர் எச்சரித்தார்.
கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள மூன்று முனையங்களில், கிழக்கு முனையம் மட்டுமே ஆழமான கடலைக் கொண்டுள்ளது. இதனால் அம் முனையத்துக்கு சரக்குகளைக் கொண்டுவரும் வெளிநாட்டுக்கப்பல்கள் அதிகம். இதனால் அரசாங்கத்துக்கு அதிக வருமானமீட்டித்தரும் முனையாமாக அது இருக்கிறது. இது இந்தியாவின் கைகளில் போவது இலங்கையின் வருமானத்தைப் பாதிக்கும் விடயமானாலும், அதன் 100% உரிமையும், 51% வருமானமும் இலங்கைக்கே செல்கிறது. அதே வேளை ஏனைய இரண்டு முனையங்களின் வருமானத்தில் 15% மே இலங்கைக்குக் கிடைக்கும்.
அத்தோடு இதன் கேந்திர முக்கியத்துவத்தால் அங்கு போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள் தளம் கட்டுவதற்கும் வசிதையாகப் போகிறது.
எனவே வீரவன்ச அணியின் எதிர்ப்பின் பின்னால் இந்திய எதிர்ப்பே முனைப்புடன் இருக்கிறது எனவும் அதற்கு சீனாவின் பின்னணி இருக்கிறது எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.
வீரவன்ச அணியின் கூட்டத்தில் வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, அத்துரலிய ரத்தின தேரோ, திச விதாரண உட்படப் 10 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். அதே வேளை புத்த மகா சங்கங்களின் தலைவர்கள், தொழிற்சங்கங்கள் ஆகியோரது ஆதர்வும் இவ்வணிக்குக் கிடைத்துள்ளது எனவும் இதனால் ஆளும் கூட்டணிக்குள் இவ்வணியின் பலம் அதிகரித்துவருவதாகவும் அறியப்படுகிறது.
இதே வேளை கிழக்கு முனையம் தொடர்பாக இந்தியா இன்னும் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை எனவும் முத்தரப்பு ஒப்பந்தத்தை அமுற்படுத்தும்படி அது இலங்கைக்குத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இதனால் ராஜபக்ச அரசு இருதலைக்கொள்ளி எறும்பாக மாட்டிக்கொண்டுள்ளது எனவும் பேசப்படுகிறது.
இதே வேளை, இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஜேக்கப், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கிமுடன் நேற்று மேற்கொண்ட சந்திப்பின்போது இலங்கைத் தமிழர் விடயத்தில் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.