கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் பேரா. யோகா ராசநாயகம் மறைவு
கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் பேரா. யோகா ராசநாயகம் மறைவு
இலங்கையின் பல்கலைக்கழக வேந்தராக நியமனம் பெற்ற முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனையைப் படைத்த, முன்னாள் பேராசிரியர் யோகா ராசநாயகம் அவர்கள் ஏப்ரல் 26, 2021 அன்று காலமானார்.
நான்கு தசாப்தங்களாக இலங்கைத் தமிழ் கல்வியாளர் மத்தியில் முன்னோடியாகத் திகழ்ந்த பேராசிரியர் ராசநாயகம் தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டு மரபுகோடல் எல்லைகளையும் தாண்டி, குடும்பம், கல்வி, தொழில், வழிகாட்டல ஆகிய சகல திசைகளிலும் துணிச்சலோடு சென்று தமிழ்ப் பெண்களுக்கான பல கதவுகளைத் திறந்துவிட்டவர்.
1970 களில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில், புவியியலில் தனது இளமானிப் பட்டத்தை முடித்துக்கொண்ட பேரா. ராசநாயகம், பின்னர் இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். புவியியலில் மட்டுமல்லாது, கர்நாடக இசையிலும் அவர் ஒரு கை தேர்ந்த விற்பன்னராவார்.
தனது இதயம் காட்டிய பாதையில் சென்று கல்வியின் சிகரத்தைத் தொட ஊக்குவித்தது மட்டுமல்லாது வீட்டில் சமையல் தொடக்கம் பிள்ளைகளைப் பராமரிப்பதுவரை தனக்கு உறுதுணையாக இருந்த கணவர் ராசநாயகத்திற்கே தனது சாதனைகள் அனைத்தையும் அர்ப்பணித்தவர் பேரா. ராசநாயகம்.
கல்வித் துறையில் தான் சாதித்த, திறந்துவிட்ட பாதைகளில் பெண்கள் வீறுநடை போடவேண்டுமென்பதற்காக இறுதிவரை அவர் கடுமையாக உழைத்திருந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெண் கல்விக்கெனத் தனியான முதுமாணிக் கற்கைநெறியை ஸ்தாபித்தவர்களில் பேரா.ராசநாயகமும் ஒருவர். சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவனத்தின் ஆலோசகராக இருந்த அவர், பாலின சமத்துவ விடயங்கள் பற்றிக் குறிப்பிடும்போது “இந்தியாவுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் பெண்களது நிலைமை அவ்வளவு மோசமில்லை எனினும் ஆணாதிக்க மரபு இங்கும் அதிகம் மாற்றம்பெற்றதாகக் கருதமுடியாது” என்கிறார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைபீடாதிபதியாகவும், பின்னர் பல தடவைகள் அதன் துணைவேந்தராகவும் இறுதியாக இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பதவியுயர்த்தப்பட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையுடனும் அவர் இவ்வுலகை நீத்திருக்கிறார்.
“எனது பல்கலைக்கழக வேந்தர் பதவி என் தனியான உழைப்புக்குக் கிடைத்த சன்மானம் அல்ல. அது தமிழ்ப் பெண்மைக்குக் கிடைத்த சன்மானம்” எனக் குறிப்பிடும் பேராசிரியர் பெண்களுக்கு விடுக்கும் அறைகூவல் ” கல்வியாலும், பயிற்சியாலும் உங்களை வலுப்படுத்துங்கள்; சுயத்தில் தங்கியிருங்கள்; துணையுடன் பேரம்பேசுவதற்காக உங்கள் உரிமைகள் என்னவென்பதை அறிந்து வைத்திருங்கள்”
இந்நூற்றாண்டின் மகத்தான ஒரு தமிழ்க் கல்வியாளரை, பெண்குலத்தின் வழிகாட்டியை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் தமிழ்க் கல்வியுலகத்துக்கும் எமது சிரம் தாழ்ந்த அனுதாபம். (தகவல் மூலம்: ஆரணி ரகுராஜ், அடிதா திசநாயக்கா, டெய்லி நியூஸ்)
