“கிழக்கிந்திய கம்பனிக்குப் பின் இப்போது நாம் வடக்கிந்திய கம்பனியுடன் போராடவேண்டியிருக்கிறது” – கமல்ஹாசன் பா.ஜ.க. மீது சாடல்!

“பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனிக்கு எதிராக நாம் எப்படிப் போராடவேண்டி இருந்ததோ அதே போல நாம் இப்போது “வடக்கிந்திய கம்பனியுடனும்” போராடவேண்டியிருக்கிறது” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் கூட்ட்மொன்றில் பேசும்போது கமல் இப்படித் தெரிவித்தார்.

“கிழக்கிந்திக் கம்பனி என அழைக்கப்பட்ட ஒன்றை நாம் பெருமுயற்சியின் பயனாகத் துரத்திவிட்டோம். இதே போன்று இப்போது “வடக்கிந்திய கம்பனி’ வந்திருக்கிறது. இது புதியதொரு சவாலாக முளைத்திருக்கிறது. அதற்கெதிராகவும் நாம் போராட வேண்டும்” என பெப்ரவரி 19 அன்று ஈரோட்டில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன் பா.ஜ.க.வைக் குறிவத்து பூடகமாகக் குறிப்பிட்டார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக அ.இ.அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. ஆகியவற்றின் வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.

பெப். 27 அன்று கருங்கல்பாளையத்திலுள்ள காந்தி சிலையருகில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய நடிகர் கமல்ஹாசன் ” முதல் தடவையாக நான் இன்னுமொரு சின்னத்தின் கீழுள்ள ஒரு கட்சிக்காக வாக்குகளைக் கேட்டுப் பேசுகிறேன். இதில் எனக்கொரு நன்மையுமில்லை. இந்நாட்டை பிறிதோருக்கு அடகுவைக்க முயலும் ஒரு கட்சியிடமிருந்து எமது நாட்டைக் காப்பதற்காகவே நான் இம்முயற்சியில் இறங்கியிருக்கிறேன்” என பா.ஜ.க. வைச் சாடும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“இளங்கோவனைப் போலவே நானும் பகுத்தறிவுத் தலைவர் பெரியாரின் ஒரு பேரன். இளங்கோவனும் அவருடைய கொள்கையில் வளர்ந்த ஒருவர். நான் 2013 இல் ‘விஸ்வரூபம்’ படத்தைத் திரையிட முற்பட்டபோது ஒரு பெண் தலைவரிடமிருந்து (ஜெயலலிதா) கடும் சவால்களை எதிர்கொள்ளவேண்டி இருந்தது. அப்போது கலைஞர் டாக்டர் கருணாநிதி தனாகவே என்னைக் கூப்பிட்டு தனது உதவிகளைத் தருவதாகத் தெரிவித்தார். அவற்றை நான் அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை. கலைஞர் பதவியிலிருந்தபோது அவரது மனப்பான்மை எப்படி இருந்ததோ அப்படித்தான் முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினும் மிகுந்த பெருந்தன்மையுடன் மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, உதவிசெய்துவருகிறார்” என கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

திரு இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா வின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மகனின் இழப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்காக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.