கிளிநொச்சியில் முதல்நிலை மருத்துவத் திட்டம் அறிமுகம்
அனைத்துலக மருத்துவநல அமைப்பு (IMHO USA) ஏற்பாடு
இலங்கையின் மருத்துவ நலத் திட்டங்களில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவருமளவுக்குக் கனதியான முதல்நிலை மருத்துவத் திட்டமொன்றை கிளிநொச்சி மாவட்டத்தில் அறிமுகப்படுத்த அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்துலக மருத்துவநல அமைப்பு (IMHO USA) முன்வந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சுமார் 2 லட்சம் மக்களுக்கும் பயந்தரவல்ல முதல்நிலை, சிகிச்சை, தடுப்பு மருத்துவத் திட்டத்தை குடும்பநல மருத்துவரும் யாழ். பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் மூத்த விரிவுரையாளருமான எஸ்.குமரன் M.B.B.S.,M.D. அவர்களின் மேற்பார்வையில் நடைபெறவுள்ளதென அனைத்துலக மருத்துவநல அமைப்பு அறிவித்துள்ளது. பிரதேச செயலகம், பிரதேச மருத்துவமனை, சுகாதார வைத்திய அதிகாரி, முதல்நிலை மருத்துவப் பிரிவு ஆகியோர் இத்திட்டத்தின் பயன்பெறுனர்களாக இருப்பர்.
சமூகத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சமூக சுகாதார உதவியாளர்களை அடியாதாரமாகக் கொண்டு செயற்படும் இத்திட்டத்தின் பிரகாரம் குடும்பக் கட்டுப்பாட்டு பிரிவுகள் (Family Planning Clincs), நோய்த்தடுப்பு பிரிவுகள் (Immunization Clinics), வீடுகளுக்குச் சென்று நோயாளிகளைப் பராமரிப்பு (Rehabilitation), இறுதிக்காலப் பராமரிப்பு (Palliative) போன்றவற்றை வழங்குதல், ஆரோக்கியமான வாழ்வியல் தேர்வு (Healthy Lifestyle Choices), சுகாதார முன்னேற்றம் (Health Empowerment), பாடசாலைகளை மையமாகக் கொண்ட பருவ வயது சுகாதார முன்னெடுப்புத் திட்டங்கள் (adolescent health promotion programs) ஆகியவை சமூகத்தில் முன்னெடுக்கப்படும்.
முன்கூட்டிய பாரிய திட்டமிடலுடன் முன்னெடுக்கப்படும், சமூக சுகாதார ஊக்குவிப்புத் திட்டம் (Community Health Empowerment Project) என்னும் பெயருடன் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் இத் திட்டம் பயிற்றப்பட்ட சமூக சுகாதார உதவியாளர்களால் பொதுமக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுமென அறியப்படுகிறது. தாய்மார் சங்கங்கள், பாடசாலை சுகாதார சங்கங்கள், மூத்தோர் நலன்புரிச் சங்கங்கள் போன்ற அமைப்புகள் மூலம் பொதுமக்களின் பங்களிப்பு இத்திட்டத்துக்கு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே நடைமுறையிலிருக்கும் அரசாங்க வைத்திய நடைமுறைகளினூடாக முன்னெடுக்கப்படவிருக்கும் இச் சமூக சுகாதார முன்னேற்றத் திட்டத்தில் பொதுமக்களையும் பங்காளிகளாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும். குறைந்த செலவில் நிறைந்த பலாபலனைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத் திட்டம் ஒரு தனிமனிதனை மையப்படுத்தியதாகவும் (person-centered), குழுக்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் (team based), சமூகத்தைத் தழுவியதாகவும் (community alligned) இருக்கும்.
இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்துலக மருத்துவநல அமைப்பு முதல் வருடத்துக்கென US$32,250 டாலர்களை ஒதுக்கியுள்ளது. இத் திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் இதை வடமாகாணம் முழுவதற்கும் விரிவாக்க இவ்வமைப்பு உத்தேசித்துள்ளது.
இத்திட்டத்துக்கு உதவிசெய்ய விரும்புவோர் உங்கள் நன்கொடைகளை அனைத்துலக மருத்துவநல அமைப்பு (அமெரிக்கா) வுக்கு பின்வரும் இணைப்பின் மூலம் அனுப்பி வைக்கலாம். https://theimho.org/donation/