கிளர்ந்தெளும் தென்கிழக்காசியாவின் இணையப் பொருளாதாரம் -

கிளர்ந்தெளும் தென்கிழக்காசியாவின் இணையப் பொருளாதாரம்

உலகில் அதிகம் ‘இணைக்கப்பட்டவர்கள்’ தென்னாசிய மக்கள்
தென்கிழக்காசியாவின் இணையப் பொருளாதாரம்

கூகிள் மற்றும் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான ரெமாசெக் (Temasek), பெய்ன்அண்ட் கோ (Bain & Co) ஆகியவற்றின் அறிக்கையின்படி, இணையம் தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதாரத்தை அதி வேகமாக மாற்றி வருகிறது என அறியப்படுகிறது.

சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்கொக், மனிலா, ஜாகர்த்தா என்று எந்த நகரங்களிலுமுள்ள மெற்றோ ரயில்களை எடுத்தாலும் கைகளில் மொபைல்களைத் துளாவிக்கொண்டிருக்காத மனிதர்களைக் காண்பதரிது. வலையுலகம் அந்தளவுக்கு வாழ்வெங்கும் பரிணமித்திருக்கிறது.

தென்னாசியர்களே இன் று உலகத்தில் அதிகம் இணைக்கப்பட்டவர்கள் எனக் கூறுகிறது அந்த அறிக்கை. தென்னாசியாவின் இன்றைய இணையப் பொருளாதாரம் $100 பில்லியன். 2025 இல் இது மூன்று மடங்கு அதிகரிக்கும் என எதிர்வு கூறுகிறது இந்த அறிக்கை.

பயணத் தொடுப்புகள் (online travel), பயணப் பகிர்வுகள் (ride-sharing), ஊடக உலகம் என்று பல துறைகளும் இன்று வலையுலகத்திலேயே வணிகம் செய்கின்றன. உலகின் 50 வீதமான டிஜிட்டல் பண மாற்றம் இந்தப் பிராந்தியத்திலேயே நிகழ்கிறது. 2025 இல் இது 1 ட்ரில்லியனை எட்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

பகிர்வுப் – பயண நிறுவனங்கள்

தென்னாசியாவில் 360 மில்லியன் இணையப் பாவனையாளர் இருக்கிறார்கள். இது இப் பிராந்திய சனத் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு. இவர்களில் 90 வீதமானோர் மொபைல் ஃபோன்கள் வழியாகவே இணைந்துகொள்கிறார்கள்.

குடும்பங்கள், நண்பர்கள், சகாக்கள், சுய பொழுதுபோக்கு, புதியன கற்றல் என்று பல தொடர்புகளுக்கும் அவர்கள் இணையத்தைப் பாவிப்பதன் மூலம் அவர்கள் தமது காரியங்களுக்கான பலன்களைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.

பண்டங்களை வாங்குவது முதல், பயணங்களைத் திட்டமிடுவது வரை, உணவுகளுக்கு அழைப்பு விடுவது முதல் உறவுகளிடம் அன்பைத் தெரிவிப்பது வரை இணையமே அவர்கள் பிரபஞ்சம்.

நகரவாசிகள் இணையத்தின் மூலம் பண்டங்களைக் கொள்முதல் செய்வது கிராமங்களை விட ஆறு மடங்கௌ அதிகம். வலையமைப்புகள் விஸ்தரிக்கப்படும்போது கிராமங்களில் இணையப் பொருளாதாரம் வீறுகொண்டெழும் என எதிர்பார்க்கிறார்கள்.

இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகள் இப் பிராந்தியத்தின் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கின்றன. இவர்களது வருடாந்த வளர்ச்சி 40%. மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகள் 20 முதல் 30 வீதம் வளர்ச்சியைக் கொண்டுள்ளன. பிரந்தியத்தின் சராசரி வருடாந்த வளர்ச்சி 33%. 2025 இல் இந்தோனேசியா இப் பிராந்தியத்திலேயே முன்னோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த நான்கு வருடங்களாக இந்தப் பிராந்தியத்தில் முதலீடு செய்யப்பட்ட 37 பில்லியன் டாலர்களில் பெரும்பங்கு பகிர்-பயண நிறுவனங்களான, சிங்கப்பூரின் கிராப் (Grab), இந்தோனேசியாவின் கோஜெக் (Gojek) மற்றும் இணைய வணிக நிறுவனங்களான லசாடா (Lazada), ரோகோபீடியா (Tokopedia) ஆகியவற்றுக்கே சென்றிருக்கின்றன. இப் பிராந்தியத்தில் 3000 நிறுவன ஆரம்பத்துக்காக (startups) முதலீட்டை எதிர்பார்த்து இருக்கின்றன.

Related:  ஒன்ராறியோவில் முதலீடு செய்தல் பற்றிய அறிமுகம்

2015 இல் 8 மில்லியன்களாக இருந்த கிர்-பயணப் பாவனையாளர் இன்று 40 மில்லியன்களாகப் பெருகியிருக்கிறார்கள். இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு, இணைய வலையமைப்பின் விஸ்தரிப்பு, அதிகரிக்கும் வருமானம் எனப் பல காரணிகள் இப் பிராந்தியத்தின் பொருளாதரத்தின் வளர்ச்சியைத் துலாம்பரமாகக் காட்டி நிற்கின்றன என கூகிள், ரமாசெக், பெய்ன் அண்ட் கோ ஆகிய நிறுவனங்களின் அறிக்கை தொட்டுக் காட்டுகிறது.

முதலீட்டாளர்களா? இணையத் தொழில்நுட்பவியலாளர்களா? தொழில் முகவர்களா? தென்கிழக்கை நோக்கிப் படையெடுங்கள் எனச் சொல்லாமல் சொல்கிறது இந்த அறிக்கை.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
error

Enjoy this blog? Please spread the word :)