கிரீன்லாந்து மலைச்சிகரத்தில் மழை – வரலாற்றில் முதல் தடவையாகப் பெய்தது
கிரீன்லாந்து நாட்டின் மலையுச்சியில் வரலாற்றில் முதல் தடவையாக மழை பெய்திருப்பது குறித்து சூழலியலாளர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கிரீன்லாந்து சிகரத்தை மூடியிருக்கும் பனிப்பாறையில் வழமையாகப் பனிப் பொழிவு நிகழ்வதும் அதன் வெப்பநிலை பூச்சியத்துக்குக் கீழே இருப்பதுவே வழக்கம். தரவுகள் பேணத் தொடங்கியதிலிருந்து இதுவரை மூன்று தடவைகளே வெப்பநிலை பூச்சியத்துக்கு மேலே சென்றிருக்கிறது. ஆனால் இதுவரை ஒருபோதும் மழை பெய்ததில்லை.
ஆனால் ஆகஸ்ட் 14, 15 ம் திகதிகளில் தொடர்ந்து பெய்த மழையின்போது 7 பில்லியன் தொன்கள் மழைநீர் இப் பனிமூடியில் விழுந்திருக்கிறது எனவும், 337,000 சதுர மைல்கள் பனிப்பரப்பு உருகியிருக்கிறது எனவும் தேசிய விஞ்ஞான அமைப்பின் மலையுச்சி ஆய்வுகூடத்தினால் சேகரிக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இச்சிகரத்தின் உச்சி நிலத்திலிருந்து 10,551 அடிகள் உயரத்தில் இருக்கிறது.
தென் துருவத்திலுள்ள பனி மூடியும் கிரீன்லாந்தின் பனிமூடியும் சேர்ந்து உலகின் 99% மான நல்ல தண்ணீர் ஊற்றுக்களுக்குக் காரணமாகவுள்ளன. சூழல் வெப்பமாகும் காரணத்தால் கிரீன்லாந்து பனிமூடி உருகவாரம்பிக்கலாம் என இந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆராய்ச்சியாளர் எதிர்வுகூறியிருந்தனர். ஜூலை 2021 இல் திடீரென்று வெப்பநிலை அதிகரித்ததால் இப் பனிமூடி நாளொன்றுக்கு 9.37 பில்லியன் தொன்கள் பனியை இழந்திருந்தது. ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி நடந்திருந்தது.
கிரீன்லாந்து பனிமூடி முற்றாக உருகினால் கடல் நீர் 20 அடிகளால் உயரும் எனச் சூழலியலாளர் எச்ச்சரிக்கின்றனர். இதே வேளை, அடுத்த 20 வருடங்களில் பூமியின் சூழல் வெப்பநிலை 1.5 பாகை செல்சியஸ் உயருமென ஐ.நாவின் அரசாங்கங்களுக்கிடையேயான சூழல் மாற்றக் குழு (IPCC) கூறியுள்ளது.
இனிவரும் காலங்களில் அனல் காற்று, வரட்சி, வெள்ளம் ஆகிய தீவிரமான பருவநிலை மாற்றங்கள் அடிக்கடி நிகழும் சம்பவங்களாக இருக்குமென ஐ.நா. பாதுகாப்புச் சபை செயலாளர் அன்ரோனியோ குத்தேரெஸ் எச்சரித்துள்ளார்.