Arts & EntertainmentIndia

கிரியா ராமகிருஷ்ணன் மறைவு


கிரியா தமிழ் அகராதி மற்றும் பல தமிழ்ப் படைப்புகளைப் பதித்துவரும் கிரியா பதிப்பகத்தின் உரிமையாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவரகள் இன்று காலமானார்.

கோவிட் தொற்றுக் காரணமாக ஓமந்தூரர் அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 வயதுடைய ராமகிருஷ்ணன் சிகிச்சை பலனற்ற நிலையில் செவ்வாயன்று உயிரிழந்தார்.

Cre-A என்னும் பெயரில் நவீன தமிழ் அகராதியை, கடந்த 30 வருடங்களாகப் பதிப்பித்து வரும் ராமகிருஷ்ணன் அவர்கள் மருத்துவமனையில் இருக்கும்போது அகராதியின் 3வது பதிப்பு மருத்துவமனையில் வைத்து வெளியிடப்பட்டது.

ராமகிருஷ்ணனது தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்த காரணத்தால் அவர் தன்னை ஒரு தமிழர் என்றே கூறிக்கொள்வார். லயோலா கல்லூரியில் கல்வி கற்று சமூக சேவையில் முதுமாணிப் பட்டத்தை அவர் பெற்றிருந்தார்.

1974 இல் கிரியா (Cre-A) என்ற தமிழ்ப் பதிப்பகத்தை உருவாக்கி தீவிர இலக்கிய, விஞ்ஞான, தத்துவ புத்தகங்களைப் பதிப்பித்தார். பிரபல எழுத்தாளர்களான மெளனி, அசீகமித்திரன், சா கந்தசாமி, சுந்தர ராமசாமி, நா. முத்துசாமி, எஸ்.வி.ராஜதுரை போன்றோரது பல நூல்களைப் பதிப்பித்தும் பலரது நூல்களை இந்தி, வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பதிபித்தும் பல சேவைகளை ஆற்றி வந்தார்.

ஆனாலும், அவரது கிரியா அகராதி தான் தமிழுலகில் அவருக்குப் பெயரை ஈட்டித் தந்தது. 1992 இல் முதலாவது பதிப்பாக வெளியிடப்பட்ட இவ்வகராதி 2012 இல் கட்புலனை இழந்தவர்களுக்கான ‘பிறெய்ல்’ வடிவத்தில் 2011 இல் வெளியானது. இதைவிட, ‘மொழி’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை, ‘கூத்துப் பட்டறை’ என்றொரு ஆடற்குழு, றோஜா முத்தையா நூலகம் ஆகிய செயற்திட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இருப்பினும், மறைந்த ஐராவதம் மகாதேவனின் Early Tamil Epigraphy: From the Earliest Times to Sixth Century A.D. என்ற கிரியா – ஹார்வார்ட் பல்கலைக்கழக இணை வெளியீடே அவரது முத்திரை என எழுத்தாளரும் நாடக விமர்சகருமான இந்திரா பார்த்தசாரதி அவர்கள் கூறுவார்கள். தமிழ் எழுத்துக்களின் மேம்பாட்டுக்கென அவர் ‘கசடதபற’ என்னும் ஒரு இலக்கிய சஞ்சிகையையும் பதிப்பித்து வந்தார்.