IndiaSports

கிரிக்கெட் | 2வது டெஸ்ட் – இங்கிலாந்தைத் தோற்கடித்த அஷ்வின் ரவிச்சந்திரன்!


இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான உலகக் கிண்ண இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோற்றுப்போகும் நிலையிலிருந்த இந்தியாவை இழுத்துவந்து வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள் ரவிசந்திரன் அஷ்வின், றோஹிட் சர்மா ஆகிய இருவரும்.

சென்னை சேம்பாக்கத்திலுள்ள சிதம்பரம் ஸ்ரேடியத்தில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றுவந்த இந்த இரண்டாவது போட்டியில் ஆல்ரவுண்டராகப் பிரவேசித்து ஒரு சென்சுரியையும் 8 விக்கெட்டுகளையும் எடுத்து விராட் கோலிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததில் அஷ்வினுக்குப் பாரிய பங்குண்டு.

இதே ஸ்ரேடியத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இந்தியாவைத் தோற்கடித்திருந்தது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வென்றால் மட்டுமே இந்தியா தொடர்ந்தும் இந்த டூர்ணமெண்டில் இருக்க முடியும். இது அந்த இரண்டில் ஒன்று.

இந்த நிலையில் பாரிய சுமைகளுடன் ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் அணித்தலைவர் விராட் கோலியை இங்கிலாந்தின் மோவீன் அலி பூச்சியத்துடன் வீட்டுக்கு அனுப்பியதோடு இந்தியாவின் கனவு சரியத் தொடங்கியிருந்தது. மூன்று விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்த பின்னர் றோஹிட் சர்மாவின், அஜிங்க்யா றஹேனுடனான கூட்டு – 161&67 ஓட்டங்களுடன் – இந்தியாவை இழுத்துவந்து நிறுத்தியது. முதலாவது இன்னிங்ஸில் இந்தியா 329 ஓட்டங்களையும், இங்கிலாந்து 134 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.



இரண்டாவது இன்னிங்ஸில் (3வது நாள்) இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்தவுடன் இந்திய வெற்றி உறுதியென்பது ஓரளவு உணரப்பட்டதென்றுதான் சொல்லவேண்டும். இதில் 14 பவுண்டறிகள், ஒரு சிக்சருடன் – 134 பந்துகளில் 100 ஓட்டங்களை அஷ்வின் பெற்றிருந்தது மட்டுமல்லாது இங்கிலாந்தின் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

அணித் தலைவர் விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் 149 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்று, இரண்டாவது தடவையும் மோவீன் அலியின் பந்துக்கு இரையாகிப் போனார். கோலி மிகவும் அவதானமாக ஆடித் தவறாக வரும் பந்துகளைக் குறிவைத்து தனது ஓட்டங்களைச் சேர்த்தார். அதே வேளை அஷ்வின் துணிச்சலாக வேகமாக வரும் பந்துகளை வழித்தெடுத்து எல்லைகளை நோக்கி அனுப்புவதன் மூலம் வேகமாக ஓட்டங்களைக் குவித்துக்கொண்டார். இந்த இரண்டுபேரின் கூட்டும் நீண்ட நேரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அஷ்வினின் இரண்டு பந்துகளைப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்தின் பென் ஃபோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் கோட்டை விட்டமையும் இந்தியாவுக்கு அதிர்ஷ்டமாக முடிந்தது. பல விக்கெட்டுகள் இழப்பிற்குப் பிறகு, கோலி-அஷ்வின் கூட்டு இந்தியாவை ஓரளவு ஸ்திரப்படுத்தியிருந்தது. மதிய உணவின்போது ஸ்கோர் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ஆக இருந்தது. பின்னர் வந்தவர்கள் மேலும் 120 ஓட்டங்களைச் சேர்த்து இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தம் 286 ஓட்டங்களை இந்தியா பெற்று 317 ஓட்டங்களினால் இங்கிலாந்தை தோற்கடித்தது.

அடுத்த இரண்டு போட்டிகளும் அஹ்மெதாபாத்தில் ஆடப்படும்.