Sports

கிரிக்கெட்: கபில் தேவ் ஏன் ஒதுக்கப்பட்டார்?

கிரிக்கெட் ஒரு ‘ஜெண்டில்மென்’ விளையாட்டு என ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்டது. இந்த ‘ஜெண்டில்மென்’ பதத்திற்கும் அகராதியில் கூறப்படும் gentlemen இற்கும் நிரம்ப வித்தியாசம். லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் துரைமார் வெள்ளை ஆடைகளுடன் சாமானியர்களைத் தள்ளிவைத்து ஆடி மகிழ்ந்தபோது அதற்கு ‘ஜெண்டில்மென் கேம்’ எனப் பெயரிட்டார்கள். ஆடி முடிந்து மது அருந்தும் கிளப்பில் சாமானியர்கள் அடுக்கப்படமாட்டார்கள். ‘லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென்’ என அழைக்கும் வழக்கம் பெண்கள் ஆண்களை அழைப்பதாக நாம் புளகாங்கிதமடைந்துகொண்டாலும் அது அந்த மேற்தட்டு வர்க்கத்துக்குரிய ஒன்றாகவே இருந்து வந்தது. இவ்விளையாட்டு பின்னர் வருமானம் சம்பாதிக்குமொன்றாக மாறியபோது தான் அவர்களுக்கு சாமானியர்கள் தேவைப்பட்டார்கள். அதுவரை து ஒரு ‘துரைமார்’ விளையாட்டாகவே இருந்தது.

இந்தியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகளில் இத்துரைமாருடன் ஆடுவதற்கெனப் பழக்கப்பட்டவர்கள் ( இவர்களில் பலர் தாமும் துரைமார்களாகப் பின்னர் மாறிவிட்டார்கள்) படிப்படியாக இவ்விளையாட்டைச் சாமானியவர்களது கைகளில் பெற்றுக்கொண்டதும் அதன் தரமும் சமானியமாக ஆகிவிட்டது. அதாவது காலனி நாடுகளின் குணாதிசயங்கள் அதன் மீதும் தொற்றிக்கொண்டது. இன்று அது அந்தந்த நாடுகளில் (இங்கிலாந்து தவிர) ஆதிக்கம் செலுத்தும் நபர்களின் விருப்பு வெறுப்புக்களைப் பிரதிபலிக்கும் ஒன்றாக மாறிவிட்டது. அது கிரிக்கெட் ‘பொலிட்டிக்ஸ்’ என்று நாகரிகமாகக் கடந்துபோய் காசு கொடுத்து மைதானத்தில் கொடியாட்டி ஏமாந்து வீடுவர சாமானியர்கள் பழகிக்கொண்டு விட்டார்கள்.

சரி கபில் தேவைப் பற்றி கிசு கிசுப்பதற்கு முன்னர் இந்த வருட T20 உலகக்கிண்ணத்தை றோஹிட் ஷர்மா தலைமையில் இந்திய அணி தென்னாபிரிக்க அணியை 7 ஓட்டங்களில் வெற்றி கொண்டிருக்கிறது. இதற்கு முதற்கண் வாழ்த்துக்கள். 17 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது தடவையாக கிண்ணம் இந்தியாவுக்கு வந்திருக்கிறது. பாவம் மோடிஜி. மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் இப்போட்டி நடைபெற்றிருந்தால் இதையும் தனது சாதனையாக்கி இன்னும் கொஞ்சம் அதிக ஆசனங்களைப் பெற்றிருப்பார். இப்போது மட்டுமென்ன “நான் அரசியலிலிருந்து ஒதுங்குவதற்கு முதல் கிண்ணத்தைக் கொண்டுவந்துவிட்டுத்தான் போகிறேன்” எனச் சிங்கன் மார்தட்டிக்கொண்டு போகலாம்.

ஆனால் இந்திய கிரிக்கெட் இந்த நிலைக்கு வருவதற்கு காரணமாகவிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் வியர்வையால் நனைந்த இந்திய மண்ணில் (இலங்கையும் தான்) இன்னும் அதிகார சக்திகள் அவர்களைக் கணக்கிலேயே எடுக்காமல் விடுவது எத்துணை அநியாயம்? இவர்களில் ஒருவர் தான் கபில் தேவ்.

2008 இல் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிகளில் எங்கேயாவது இந்திய ஆட்டா நாயகன் கபில் தேவைக் கண்டிருக்கிறீர்களா? குழு சொந்தக்காரராகவோ, தூதுவராகவோ அல்லது சிறப்பு அழைப்பாளராகவோ அவரைக் கண்டிருந்தால் சொல்லுங்கள். இத்தனைக்கும் இந்திய அணிக்காக உலகக் கிண்ணத்தை முதன் முதலில் பெற்றுத் தந்தவர்.

அதை விடுங்கள். இந்த IPL என்ற விடயம் உருவாகுவதற்கே அவர் தான் காரணம். இருந்தாலும் அவர் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

2000 ஆண்டுகளின் ஆரம்பத்திலிருந்து இந்திய கிரிக்கெட் அணி உலக அரங்கில் தடுமாறிக்கொண்டிருந்தபோது சச்சின் ரெண்டுல்காருக்கு பக்கபலமாக பல இளைஞர்களைக் கபில் தேவ் பரிந்துரைக்கிறார். ஆனால் இந்திய கிரிக்கெட் அதிகார சபை (Board of Control for Cricket in India (BCCI) அரசியல் காரணங்களுக்காக அதை நிராகரிக்கிறது. இதனால் பொறுமையிழந்த கபில் தேவ் தான் பரிந்துரைத்த இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க ஒரு புதிய முயற்சியை மேற்கொள்கிறார். அதுவே இந்தியன் கிரிக்கெட் லீக் (Indian Cricket League (ICL)). இந்திய அதிகார சபையால் வாய்ப்புகள் பறுக்கப்பட்டவர்களையும் உலக கிரிக்கெட் நாயகர்களையும் இணைத்து இந்தியாவில் கிரிக்கெட் விழாவை அவர் ஆரம்பித்து வைத்தார். ஆனால் வாய்ப்புகளுக்குப் பதிலாக அவர் எதிர்கொண்டது இந்திய அதிகார சபையின் வஞ்சகத்தனத்தையே. அதிகார சபையின் நரித்தனத்தால் பல மைதானங்கள் அவரது ஆட்டங்களுக்கு அனுமதி தர மறுத்தன. அப்படியிருந்துங்கூட பல போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த அவர் 2006 முதல் 2009 வரை பல சம்பியன்களையும் உருவாக்கினார்.

கடுப்படைந்த அதிகாரசபை கபில் தேவிற்குப் போட்டியாக ஒரு அமைப்பை உருவாக்குகிறது. அதுதான் IPL.

அது மட்டுமல்ல ICL இல் ஆடும் ஆட்டக்காரகளை உடனடியாக விலகுமாறு அதிகாரசபை நயவஞ்சகமாக அறிவுறுத்தியது. ICL இல் விளையாடுபவர்களுக்கு IPL இல் ஆடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என சபை எச்சரித்தது. இத்தோடு கபில் தேவும் ICL உம் அதிகாரசபையினால் காணாமலாக்கப்படுகிறார்கள்.

இன்று உலகம் கண்டு களிக்கும் IPL ஆட்டங்களுக்கு வித்திட்ட உலக நாயகன் கபில் தேவின் தேவை இன்றும் இருக்கிறது. இந்த T20 வெற்றிக்கு அவரும் ஒரு காரணம்.