EnvironmentIndiaLIFE

கிராமத்துக்கு தண்ணீர் கொண்டுவர 30 வருடங்களாக வாய்க்கால் வெட்டிய ‘பைத்தியம்’


லோங்கி பூயா, இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள வரண்ட ஒதுக்குப்புறமான கிராமமான கோதில்வாவைச் சேர்ந்த வறியதொரு குடிமகன். இக் கிராமத்தில் வாழும் 750 பேரும் தலித் மக்கள். மட்குடிசைகளில் வாழும் இவர்களுக்கு இரண்டே கிணறுகள் தான் இருக்கின்றன. அவையும் தண்ணீர் பற்றாக்குறையால் பெரும்பாலும் வரண்டுபோய்விடும்.

லோங்கி பூயா

இவர்களின் குறையைத் தீர்க்கத் தனி ஒரு மனிதனாகப் புறப்பட்டவர் தான் லோங்கி பூயா. மூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள பங்கீதா மலையிலிருந்து தண்ணீரைக் கால்வாய் மூலம் தன் கிராமத்துக்குத் திருப்பும் முயற்சியில் இறங்கினார். கையில் கிடைத்த உளியும், சுத்தியலும், மண்வெட்டியுமே அவரது ஆயுதங்கள். அதிகாலை எழுந்து மலையை உடைக்கப் போய்விடுவார். மாலைதான் வீடு திரும்புவார்.

அவரது மனைவி உட்பட, இதர கிராமத்தவரும் அவரை ஒரு ‘பைத்தியம்’ எனக்கூறி ஒதுக்கி விட்டனர். வீட்டில் பிள்ளைகளைக்கூட அவர் கவனிப்பதில்லை. அவரால் எந்தவித உழைப்பும் வீட்டுக்கு வருவதில்லை என அவரது மனைவி ராம்ரதி தேவி குறைபட்டுக்க்கொள்வார். பல தடவைகளில் கணவனுக்கு உணவே கொடுக்கமாட்டார். அவருக்குப் பேய் பிடித்துவிட்டதென்று குடும்பத்தினர் அவரை மந்திரவாதிகளிடம் அழைத்துச்சென்றனர். வியாதி தீரவில்லை என்பதால் விட்டுவிட்டனர்.

இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது பூயா தனது நோக்கத்தில் இருந்து தளராது தினமும் மலையை உடைக்கக் கிளம்பிவிடுவார். கடந்த 30 வருடங்களாக அவர் இப்பணியில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு இப்போ வயது 70.பூயாவின் கிராமத்திலிருந்து 80 கி.மீட்டர் தூரத்திலிருக்கும் காயா நகரின் மலையொன்றை இதே போன்று ஒருவர் வெட்டித் தன் கிராமத்துக்குத் தண்ணீர் கொண்டுபோன விடயத்தை பூயா கேள்விப்பட்டிருந்தார். இதில் தசரத் மஞ்சி என்பவர் 15 கி.மீ. தூரத்துக்குக் கால்வாயை வெட்டித் தன் கிராமத்துக்குத் தண்ணீரைக் கொண்டுவந்திருந்தார். 1982 இல் தொடங்கிய அவரது முயற்சி கைகூட 22 வருடங்கள் பிடித்தது. அச் சாதனைக்காக அரசாங்கம் அவருக்கு ‘மலை மனிதன்’ (Mountain Man) எனப்பட்டமும் சூட்டி, அவர் பெயரில் ஒரு தபால் தலையையும் வெளியிட்டிருந்தது. 2016 இல் பொலிவூட் அவரைப் பற்றிய ‘பயோப்பிக்’ படமொன்றையும் தயாரித்திருந்தது.

“மஞ்சியைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரால் அதைச் செய்ய முடியுமானால் என்னால் ஏன் செய்யமுடியாது என நானும் இவ்விடயத்தை ஆரம்பித்தேன். எல்லோரும் என்னக்குப் பைத்தியம் என ஏளனம் செய்கிறார்கள்” என்கிறார் பூயா.

சென்ற மாதம் ஜய பிரகாஷ் என்னும் ஒரு ஊடகவியலாளர் பூயாவின் கிராமத்தில் நடைபெறும் புதிய வீதியமைப்பைப் பார்வையிடச் சென்றபோது பூயா அவரை அணுகித் தான் 30 வருடங்களாக அமைத்துக்கொண்டிருக்கும் கால்வாயையும் பார்த்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். பூயாவை ஏற்றிக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் பிரகாஷ் அவரது கால்வாயைப் பார்வையிட்டார். 3 கி.மீட்டர்கள் வரை வெட்டிய காலவாயைக் கடைசி 1 கி.மீட்டருக்கு பூயாவால் முடிக்க முடியாமற் போய்விட்டது. காரணம் பூயாவின் கிராமம் சற்று உயரத்தில் இருந்தது.பூயாவின் முயற்சியைக் கேள்விப்பட்ட பீகார் மாநில நீர்வள அமைச்சர் சஞ்சாய் ஜா தனது திணைக்களத்தின் மூலம் மீதியையும் முடித்துக்கொடுத்து விட்டார். இப்போ பூயாவின் கிராமம் மிகவும் செழிப்பாக இருக்கிறது. கிராமது மக்கள் மகிழ்ச்சியோடு விவசாயம் செய்கிறார்கள்.

எவராலும் கவனிக்கப்படாது ஒதுக்கப்படிருந்த கோதில்வா கிராமம் இப்போது அரசியல்வாதிகளினாலும், ஊடகங்களினாலும், சமூகசேவையாளர்களினாலும் நிரம்பி வழிகிறது. இந்திய மருந்தக நிறுவனமொன்று அவருக்கு 1 இலட்சம் ரூபாய்களை வழங்கிக் கெளரவித்திருக்கிறது. பிரபல உழவு இயந்திர தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா குரூப்பின் நிர்வாகி ஆணந்த் மஹிந்த்ரா தனது நன்கொடையாக பூயாவுக்கு ஒரு உழவு இயந்திரத்தை வழங்கியுள்ளார்.

பீஹாரின் முன்னாள் முதலமைச்சர் ஜித்தான் ராம் மஞ்சி பூயாவின் கிராமத்துக்கு வருகை தந்து இந்திய ஜனாதிபதியைக் கொண்டு பூயாவைக் கெளரவப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார். தமது கிராமத்துக்கு ஒரு வீதியையும், ஒரு மருத்துவமனையையும் அமைத்துத் தரவேண்டுமெனவும் அவற்றுக்குகு பூயாவின் பெயரைச் சூட்ட வேண்டுமெனவும் அவரிடம் கிராமத்தவர்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர்.

பேய் பிடித்துவிட்டது என நாங்கள் நினைத்துக்கொண்டிருந்த எனது அப்பாவினால் எங்கள் குடும்பத்துக்குக் கொஞ்சம் பணம் கிடைத்திருக்கிறது என்கிறார் பூயாவின் மகன்.

தனது கணவரை ‘தண்ணீர் மனிதன்’ (Water Man), ‘நதி மனிதன்’ (River Man) என உலகம் புகழப் புறப்பட்டிருக்கிறது எனப் பெருமைப்பட்டுக்கொள்கிறார் பூயாவின் மனைவி ராம்ரதி தேவி.