• Post category:HEALTH
  • Post published:November 24, 2020
Spread the love

அகத்தியன்

கிரமமான அப்பியாசம் எங்கள் உடலின் அமைப்பில் பல சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. கொழுப்புச் சேமிப்பைக் குறைப்பது முதல், தசைகளின் செறிவை அதிகரிப்பது வரை எமக்குத் தெரிந்தவை. மூளையின் அமைப்பையும் அதன் தொழிற்பாட்டையும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உடற்பயிற்சி உதவுகிறது என்பது பலரும் அறியாத ஒன்று.

கோவிட் தொற்றுடன் எம்மில் பலரது பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் முறையான உணவு பராமரிப்பின்றிப் பட்டினியாலும் நோய்த்தொற்றுகளினாலும் இறந்துபோன பின்னர் தான் அவர்களை அவ்வில்லங்களில் சேர்த்தது பற்றிக் கவலைப் படுகிறோம்.

அவர்கள் நம்மோடு இருக்கும்போது அவர்களது ஆரோக்கியத்தில் நாம் கொஞ்சம் கூட அக்கறை எடுத்திருப்போமானால் அவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பியிருக்கவே தேவையில்லை.

பெரும்பாலான எமது பெற்றோர்கள், முதியவர்கள், முதுமை மறதி போன்ற காரணங்களுக்காகவே இல்லங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் நம்மோடு இருக்கும்போது கிரமமான உடற்பயிற்சிகளைச் செய்து வந்திருப்பார்களானால் இன்னும் கொஞ்சம் கூடக் காலம் அவர்கள் எம்மோடு இருந்து பேரப்பிள்ளைகளுக்கும் தமிழ் கற்பித்துவிட்டு ஒரு நாள் நிரந்தரமான தூக்கத்திற்கு நிம்மதியாகச் சென்றிருப்பார்கள்.ஒழுங்கான, கிரமமான உடற்பயிற்சி மூளையின் செயற்பாட்டை ஒழுங்காக வைத்திருக்க உதவுகிறது என சமீபத்திய ஆய்வொன்று கூறுகிறது. நமது மூளை பல அங்கங்களைக் கொண்டிருக்கிறது. அவை ஒவ்வொன்றும் உடலின் ஒவ்வொரு செயற்பாட்டையும் கண்காணித்து கட்டுப்படுத்தி வருகிறது. உடற்பயிற்சி – பயிற்சிகளுக்கேற்றபடி – ஒவ்வொரு அங்கமும் தமது அமைப்பையும், செயற்பாட்டையும் மிகச் சிறப்பான முறையில் நிர்வகிக்க உதவுகிறது என்கிறது இந்த ஆய்வு. அவற்றில் சில பற்றி இங்கே தரப்படுகிறது:

ஞாபக சக்தி (Memory)

வயது அதிகரிக்கும்போது மூளையின் செயலிழப்பும் அதிகரிக்கிறது என இத் தளத்தில் வெளியான டாக்டர் கனக சேனாவின் பல கட்டுரைகள் மூலம் அறிந்திருப்பீர்கள். உடலின் ஏனைய உறுப்புகளைப் போலவே உடற்பயிற்சி செய்யாதவர்களின் மூளையும் சுருக்கமடைகிறது. மூளை எவ்வளவுகெவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அந்தளவுக்கு ஞாபகசக்தியைப் பேணும் கலங்களும் இழையங்களும் செறிவாக இருக்கும். இதனால் ஒருவரது புலனாட்சியும் (ஐம்புலன்களின் தொழிற்பாடு) கூர்மையாக இருக்குமெனெக் கூறுகிறது இந்த ஆய்வு. 6 மாதங்கள் ஒழுங்காக உடற்பயிற்சி செய்த முதியவர்களின் மூளையை MRI ஸ்காந் செய்தபோது அவர்களின் மூளையின் அளவு அதிகரித்திருந்த்மை அவதானிக்கப்பட்டது என்கிறது இந்த ஆய்வு.

கற்றலையும், ஞாபகசக்தியையும் நிர்வகிக்கும் மூளையின் உறுப்பு ஹிப்போகாம்பஸ் (hippocampus) எனப்படுகிறது. இதன் தொழிற்பாடு குறைந்துபோன முதியவர்கள் கிரமமான நடைப்பயிற்சியின் மூலம் குறைந்த தொழிற்பாடு மீண்டும் பெறப்பட்டது என்கிறது இன்னுமொரு ஆய்வு. இவர்களின் இரத்தோட்டத்தில் மூளையால் உற்பத்திசெய்யப்படும் புரதமொன்று (brain-derived neutropic factor (BDNF) அதிகமாக இருந்தது அவதானிக்கப்பட்டது. இது மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

எமது மூளை தேவைகள், சூழல், அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்து தன் அமைப்பையும் தொழிற்பாட்டையும் மாற்றக்கூடிய வல்லமை கொண்டது. இதை நெகிழும் மூளை (neuro plasticity) என அழைக்கிறார்கள். அதாவது உடலின் ஒரு குறிப்பிட்ட தொழிற்பாட்டுக்குப் பொறுப்பான மூளையின் கலங்கள் இறக்கும்போதோ அல்லது செயற்பாட்டை இழக்கும்போதோ அயலிலுள்ள இதர கலங்கள் இழந்துபோன செயற்பாட்டைத் தத்தெடுக்கின்றன. இச் செயற்பாட்டுக்கு முக்கிய காரணம் நாம் மேலே கூறிய BDNF என்ற புரதம். உடற்பயிற்சியின்போது அதிகரிக்கும் இந்த புரதம் ஞாபகசக்திக்குப் பொறுப்பான கலங்களையும் உற்பத்தி ( neurogenesis) செய்கிறது. இது இளையவர், முதியவர் என்று பாரபட்சம் காட்டாமல் எல்லோரது மூளைகளிலும் இயல்பாக நடைபெறுகிறது.இந்த புதிய ஞாபகக் கலங்களின் உற்பத்தி மூளையின் சில உறுப்புகளில் மட்டுமே நடைபெறுகிறது. அதில் ஒன்றுதான் ஹிப்போகாம்பஸ். இதுவே கற்றலிலுக்கும் ஞாபகசக்தியைத் தக்கவைத்தலுக்கும் பொறுப்பான உறுப்பு. கிரமமான உடற்பயிற்சி இந்த ஹிப்போகாம்பஸை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் புதிய நரம்புக் கலங்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கிரமான உடற்பயிசி மூலம் அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் வியாதிகள் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்க முடியுமா எனப் பல ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

பாகம் 2 இல் உடற்பயிற்சியும் குருதிச் சுற்றோட்டமும்…

Print Friendly, PDF & Email