கின்னஸ் சாதனையை உடைத்தார் இலான் மஸ்க்!

2021 இலிருந்து இதுவரை $200 பில்லியன் பெறுமதி இழப்பு

உலகின் இரண்டாவது அதி பெரிய பணக்காரரும் ரெஸ்லா நிறுவனத்தின் அதிபருமாகிய இலான் மஸ்க் இதுவரை குவித்துவரும் சாதனைகளுடன் இன்னுமொன்றையும் சேர்க்கிறார். வரலாற்றில் இதுவரை மிக மோசமான சொத்து இழப்பைக் காண்பவர் என்ற கின்னஸ் சாதனை அவருக்கு வழங்கப்படுகிறது.

வெள்ளியன்று (ஜனவரி 06) கின்னஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் 2021 இலிருந்து இதுவரை சுமார் $ 200 பில்லியன் சொத்திழப்பை மஸ்க் சந்தித்துள்ளார் எனவும் இதன் மூலம் அவர் கின்னஸ் சாதனையாளராகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளது. 2000 ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட டொட்.கொம் வீழ்ச்சியின்போது சுமார் $60 பில்லியன்களை இழந்து கொரிய-யப்பானிய தொழிலதிபர் மஸயோஷி சன் கின்னஸ் சாதனையைப் பெற்றிருந்தார். தற்போது $200 பில்லியன் இழப்பின் மூலம் இலான் மஸ்க் முதலாம் இடத்தைத் தட்டிப் பறித்திருக்கிறார்.

நவம்பர் 2021 இல் வியாபார சஞ்சிகையான ஃபோர்ப்ஸ் இன் கணிப்பின்படி மஸ்க் $182 பில்லியன்களை இழந்திருந்தார். இவ்விழப்பின் பெரும்பகுதி ரெஸ்லா மின்வாகனத் தயாரிப்பினாலேயே ஏற்பட்டது என அறியப்படுகிறது. ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவதிலும் அதை நிர்வகிப்பதிலும் இலான் மஸ்க் அதிக நேரத்தைச் செலவழித்ததனால் ரெஸ்லா நிறுவனத்தில் அவரது கவனம் குவிக்கப்படவில்லை என ஏற்கெனவே முறையீடுகள் வந்திருந்தன. ஏனைய தொழிலதிபர்களைப் போலல்லாது மஸ்க் தொழில்நுட்ப ரீதியில் ஒரு மேதாவி என்பது பலரும் அறிந்ததே. ஆனால் ருவிட்டர் நிறுவனமும் அதைச் சூழ்ந்திருக்கும் அரசியலும் வியாபாரத்தில் அவரது கவனக் குவிப்பைக் குறைத்துவிட்டன எனக் கூறப்படுகிறது.

எப்படி இருந்தாலும் அவர் இன்னும் உலகின் இரண்டாவது அதி பெரிய பணக்காரர் என்ற இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். பிரஞ்ச் தொழிலதிபரும் LVMH நிறுவனத்தின் உரிமையாளருமான பேர்ணார்ட் ஆற்ணோல்ற் $190 பில்லியன் சொத்துக்களோடு உலகின் அதி பெரிய பணக்காரராக இருக்கிறார்.

கடந்த வருடம் மட்டும் ரெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 65% பெறுமதியை இழந்திருந்தன. ருவிட்டர் நிறுவனத்தை வாங்க அவருக்குத் தேவைப்பட்ட $44 பில்லியன்களைத் திரட்டுவதற்கு அவர் கணிசமான ரெஸ்லா பங்குகளை விற்கவேண்டி ஏற்பட்டது. இதனால் ரெஸ்லாவின் பங்குதாரர்கள் தமது பங்குகளைப் பெருவாரியாக விற்கத் தொடங்கினர். 2010 இல் ரெஸ்லா தனது பங்குகளை விற்கத் தொடங்கி பொது நிறுவனமாக ஆகியதிலிருந்து இதுவே மிகப் பெரிய வீழ்ச்சியென சந்தை அவதானிகள் கூறியிருந்தார்கள்.

இருப்பினும் தனது நிறுவனத்தின் எதிர்காலம் பற்றி மஸ்க் பூரண நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தனது ருவிட்டர் செய்தி மூலம் கூறிவருகிறார்.