கிண்ணியா மிதவை விபத்து – குழந்தைகள் உட்பட 6 பேர் மரணம்


கிண்ணியா ஏரியின் குறிஞ்சன்கேணி பாலத்துக்கு அருகே நடைபெற்ற மிதவை (பாதை) விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் சிக்கிய 26 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிகிறது.

இறந்தவர்களில் 30 வயதுப் பெண், அவரது 6 வயது மகன், 3 வயது மகள் ஆகியோருடன் 70 வயது ஆண் ஒருவரும் அடங்குவர்.

கிண்ணியா மிதவை விபத்து

ஏரியைக் கடக்கும் குறிஞ்சான்கேணிப் பாலம் தற்போது திருத்தப்பட்டு வருகின்ற படியால் தற்காலிக பயணத்துக்காக இப் பாதை பாவிக்கப்பட்டு வந்தது எனவும் ஆனால் அத் திருத்த வேலைகளை உரிய காலத்தில் முடித்து வைக்காமையால் பொதுமக்கள் தம் பயணத்தின்போது பல சிரமங்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது எனக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு முயற்சிகளில் பொதுமக்களோடு இலங்கை கடற்படையினரும் ஈடுபட்டனர் எனினும் நேற்று மாலை 7:30 இற்கு கடற்படை தனது பணிகளை முடித்துக்கொண்டது.

இவ் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யோகம்பாத், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ் விபத்தினால் பாதிக்கப்பட்ட சில உள்ளூர் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் அவர்களில் சிலர் சிறீலங்க முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தெளஃபீக் அவர்களின் இல்லத்தின்மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அறியப்படுகிறது (Colombo Page, Colombo Gazette, @Kavinthans)