காஷ்மீர் விவகாரம் | சிதம்பரத்தின் கருத்து இனவாதச் சாயலுடையது – பா.ஜ.க.
“ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்துக்களைப் பெரும்பானமையாகக் கொண்டிருந்தால் அதன் விசேட அந்தஸ்தை அரசு மீளப்பெற்றிருக்காது” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உள்ளக அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது தொடர்பாக பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் கடும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசும்போது மத்திய அரசின் நடவடிக்கையை சிதம்பரம் சாடியிருந்தார்.
சிதம்பரத்தின் கருத்துக்கள் பொறுப்பற்ற முறையில் ஆத்திரமூட்டும் வகையில் இனவாத நோக்குடன் தெரிவிக்கப்பட்டவை என மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியிருந்தார். பா.ஜ.க. தலைவர்களான முக்தார் அப்பாஸ் நக்வி, ஷிவ்ராஜ் சிங் சோஹான் ஆகியோரும் காங்கிரஸ் கட்சி இனவாதத்தைத் தூண்டுவது போல் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டினர்.
“ஜம்மு-காஷ்மீர் மக்களின் நன்மைக்காகவும் அவர்களின் அபிவிருத்திக்காகவுமே மத்திய அரசு இத் தீர்மானத்தை எடுத்தது” என திரு. பிரசாத் கூறினார்.
“காங்கிரஸ் கட்சியினால் பல தசாப்தங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட தவறைச் சரிசெய்யவே நாம் 370 வது கட்டளையை மீளப் பெற்றோம்” என்று திரு.நக்வி தனது கருத்தைத் தெரிவித்தார்.