சூடேறும் காஷ்மீர் விவகாரம்: இந்திய தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்

370 வது கட்டளையை மீளப்பெற்று ஜம்ம-காஷ்மீரையும் லடாக் பிரதேசங்களையும் பிரித்து இந்தியா தன்னிச்சையாக இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கியமை இந்திய-பாக்கிஸ்தான் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தூதுவரை வெளியேற்றி, தனது தூதுவரை மீளப் பெற்றதோடு இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தையும் பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று, புதன் கிழமை, தேசிய பாதுகாப்புச் சபையுடன் நடததிய பேச்சுவார்த்தையை அடுத்தே இம் முடிவு எடுக்கப்பட்டது.

இரண்டு நாடுகளுக்குமிடையேயான உறவுகளை மீள் பரிசீலனை செய்வதோடு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைகளுக்கு எடுத்துச் செல்வது பற்றியும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14 ஐ காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கு ஒற்றுமையைத் தெரிவிக்கும் நாளாகவும் ஆகஸ்ட் 15ம் திகதியைக் கருப்பு நாளாகவும் அனுஷ்டிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘இந்தியா ஒரு மனித உரிமைகளை மதிக்காத இனவாத நாடு’ எனத் தெரிவித்த பிரதமர் இம்ரான் கான் எல்லையிலிருக்கும் பாகிஸ்தானிய படைகளைத் தொடர்ந்தும் விழிப்போடு இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தானின் தற்போதய நடவடிக்கை பற்றிக் கருத்துக்கூறிய இந்திய முந்நாள் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் “பாகிஸ்தானின் (இத்) தீர்மானம் இந்தியாவை எதுவிதத்திலும் பாதிக்கப் போவதில்லை. அது ஒரு குறுகிய பார்வையுள்ள தீர்மானம், அது அவர்களையே அதிகம் பாதிக்கும், எங்களையல்ல” என்றார்.

370 வது கட்டளையை மீளப்பெறுவது குறித்த இந்தியாவின் நடவடிக்கையை எதிர்கொள்வது பற்றி ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒரு உயர் மட்டக் குழுவைப் பிரதமர் இம்ரான் கான் நியமித்திருக்கிறார்.