Spread the love

43 சீன இராணுவம் பலி – பிறெஸ் ட்றஸ்ட் ஒஃப் இண்டியா

காஷ்மீர் ஜூன் 16, 2020: காஷ்மீரின் லடாக் பிரதேசத்திலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன எல்லப்படைகளுக்கிடையே நேற்றிரவு (ஜூன் 15) மூண்ட சண்டையின் போது மூன்று இந்திய வீரர் கொல்லப்பட்டிருந்தனர். அப்போது காயப்பட்டிருந்த மேலும் 17 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

காஷ்மீர் | சீன-இந்திய எல்லையில் சண்டை மூண்டது, 20 இந்திய வீரர்கள் பலி! 1
இந்திய- சீன எல்லை – லடாக் பிரதேசம்

உயரமான இப் பிரதேசத்தில் வெப்பநிலை பூச்சியத்துக்குக் கீழே செல்வதால் உயிர் தப்பிப் பிழைப்பது மிகுந்த சிரமம் எனவும் அறியப்படுகிறது.

இருப்பினும், இந்தியப் பிரதேசத்தையும், அதன் இறைமையயும் பாதுகாப்பதற்கு இந்திய இராணுவம் உறுதிபூண்டுள்ளது என இந்திய இராணுவத்தின் பேச்சாளர் ஷிவ் அரூர் தெரிவித்துள்ளார்.

இம் மோதல், 45 வருடங்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கிடையேயும் ஏற்பட்ட முதலாவதாகும். இந்திய வீரர்களில் 45 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர் எனவும் அவர்களில் 25 பேர் விடுவிக்கப்பட்டதாகவும் முன்னய உறுதிப்படாத செய்திகள் குறிப்பிட்டிருந்தன. இன்னுமொரு செய்தியின்படி 135 இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது. இந்திய இராணுவம் இவைபற்றி எந்த செய்திகளையும் வெளிவிடவில்லை.

இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையின்படி, ஜூன் 15 இரவு, சீன இராணுவம் எல்லைக் கோட்டைத் தாண்டி (LAC) இந்தியப் பிரதேசத்துள் புகுந்ததாகவும் அதைத் தொடர்ந்து இரு பகுதிகளுக்குமிடையில் எழுந்த சண்டையின்போது இரு தரப்பினரும் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது.



பிறெஸ் ட்றஸ்ட் ஒஃப் இண்டியா செய்திகளின்படி, சீன இராணுவத்தின் தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. சீன தரப்பு இச் செய்தியை உறுதிப்படுத்தவில்லை.

இந்திய நேரப்படி, செவ்வாய் காலை இந்திய இராணுவம் வெளியிட்ட செய்திகளின்படி, 16 பீஹார் றெஜிமெண்ட் கட்டளை அதிகாரி, கேணல் பி. சந்தோஷ் பாபு உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டிருந்ததாக தெரியவந்திருந்தது. சந்தோஷ் பாபு, தெலங்கானா மாநிலத்தின் சூரியப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இறந்த மற்றைய வீரர்களில் ஒருவர் தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டத்தின் கடுக்காலர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஹவில்தார் பழனி என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வீரர் பற்றிய தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.


Print Friendly, PDF & Email
Related:  தமிழ்நாட்டில் இன்னுமொருவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்!