காஷ்மீர் எதிரொலி? | ஐ.ஏ.எஸ். அதிகாரி பதவியைத் துறந்தார் -

காஷ்மீர் எதிரொலி? | ஐ.ஏ.எஸ். அதிகாரி பதவியைத் துறந்தார்

Spread the love

கண்ணன் கோபிநாதன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. 2018 கேரள வெள்ளப் பெருக்கின்போது அவர் வழங்கிய சேவைகளை நாடே போற்றியது. அவர் நேரடியாகவே பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதுகாப்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர். நிவாரணப் பொருட்களைத் தன் முதுகில் சுமந்து சென்று முகாம்களிற் சேர்த்தவர். முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாவைத் தானமாகக் கொடுத்தவர். தற்போது அவர் தனது பதவியைத் தூக்கி எறிந்திருக்கிறார். அவரது செயலைக் கண்டு நாடே அதிசயிக்கிறது.

நாடு குழப்பத்தில் மூழ்கிவரும்போது நான் என்ன செய்தேன் என்று யாராவது கேட்டால், ‘நான் விடுப்பு எடுத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்காகச் சென்றுவிட்டேன்’ என்று நான் சொல்ல விரும்பவில்லை. அதை விட வேலையைத் துறந்துவிடுவது நல்லது

கண்ணன் கோபிநாதன்

அவரது பதவி துறப்புக்குக் காரணம் மத்திய அரசு. ஒரு மாதத்துக்கு முன்னர் உள்ளக அமைச்சிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. பணிவின்மை, கடமை தவிர்ப்பு என்பன அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில.

” நான் சிவில் சேவையில் சேர்ந்ததற்குக் காரணம் குரல் மறுக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கவேண்டுமென்பதற்காக. ஆனால் இங்கு நான் எனது குரலையே இழந்து விட்டேன்” என்கிறார் கண்ணன்.

” நாடு குழப்பத்தில் மூழ்கிவரும்போது நான் என்ன செய்தேன் என்று யாராவது கேட்டால், ‘நான் விடுப்பு எடுத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்காகச் சென்றுவிட்டேன்’ என்று நான் சொல்ல விரும்பவில்லை. அதை விட வேலையைத் துறந்துவிடுவது நல்லது” என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டில் நடப்பதையிட்டு அவர் மிகவும் சஞ்சலத்துடன் இருந்ததாகவும் நாட்டின் ஒரு பகுதியிலுள்ள மக்களுடைய அடிப்படை உரிமைகள் ஒத்திவைக்கப்பட்டது மற்றும் காஷ்மீரில் உள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பைசால் அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது குறித்து எல்லோரும் மெளனம் காத்தார்கள் என்பது பற்றியும் அவர் மிகுந்த கவலை கொண்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.

கண்ணன் பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டம் பெற்ற ஒரு மின் பொறியியலாளர். சேமிப்பு என்று எதுவுமில்லை. சொந்த வீடு இல்லை. அரசு வழங்கிய வீட்டில் தான் வசிக்கிறார். இனி என்ன செய்வதென்று தெரியாதென்றும் மனைவி தன் நிலைப்பாட்டைப் புரிந்து ஆதரவு தருகிறார் எனக் கூறுகிறார். அவரது இச் செயலுக்கு சமூக வலைத் தளங்களில் பலர் ஆதரவு தந்தும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தும் பதிவிடுகின்றனர். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அவரது செயல் குறித்துப் பெருமிதமடைவதாகவும் கூறியிருக்கிறார்.

” ஒரு சிஸ்டத்தை மாற்ற வேண்டுமானால் அந்த சிஸ்டத்தில் இருந்துகொண்டுதான் மாற்றவேண்டுமென்று நாங்கள் சொல்வதுண்டு. நான் பல முயற்சிகளை எடுத்துப் பார்த்துவிட்டேன். சிஸ்டத்தைத் திருத்த முடியுமென்ற நம்பிக்கை எனக்கில்லை. நான் எவ்வளவைச் செய்திருக்கிறேன் என்பது மக்களுக்குத் தெரியும். ஆனால் அது போதாது. என்னிடம் சேமிப்பென்று எதுவுமில்லை. அரச விடுதியில் தான் வாழ்கிறேன். இனி எங்கு போவேனோ தெரியாது. மனைவி வேலை செய்கிறாள். எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறாள். அது எனக்கு மிகவும் துணிச்சலைத் தருகிறது என்கிறார் கண்ணன்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  புதுச்சேரி | 350 வருடங்களுக்குப் பிறகு புத்துயிர் பெறும் அலம்பறைக் கோட்டை