காஷ்மீர் | இதுவரையில், 4000 பேர் வரையில் கைது!
இந்திய அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்டு வந்த காஷ்மீர் பிரதேசத்தின் மீதான இந்திய அரசிலமைப்பு சட்டத்தின் 370வது கட்டளை 70 வருடங்களின் பின்னர் இந்திய அரசினால் மீளப்பெறப்பட்ட நாளிலிருந்து இதுவரையில் சுமார் 4000 காஷ்மீரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிறீநகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் பலர் காயமுற்றிருப்பதாகவும் அதிகாரிகளும், பொதுமக்களும் கூறியதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இப் பிரதேசங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு இந்தியா மீண்டும் தடைவிதித்திருக்கிறது.
ஜம்மு பிரதேசத்தில் தளர்த்தப்பட்டிருந்த இணைய, கைத்தொலைபேசிப் பாவனைகள் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்த இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அதிகாரிகள் தெரிவித்ததாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (Public Safety Act (PSA)) கைது செய்யப்பட்டவர்களை அரசு குறைந்தது 2 வருடங்களுக்கு, வழக்கோ அபராதமோ இல்லாமல் சிறையில் வைத்திருக்கலாம்.
இங்குள்ள சிறைகளில் இடம் போதாத காரணத்தால் பல கைதிகள் காஷ்மீருக்கு வெளியிலுள்ள சிறைகளுக்குக் கொண்டுசெல்லப்படுகிறார்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.