AnalysisIndia

காஷ்மீரில் இந்தியாவின் படை குவிப்பு | பலவந்த இணைப்புக்கான முயற்சியா?

காஷ்மீர் பிரச்சினை புதிய திருப்பத்தை எடுத்திருக்கிறது. இந்திய அரசினதும் படைகளினதும் நகர்வுகள் பெரியதொரு நடவடிக்கைக்குத் தயாராவதாகவே படுகிறது.

நாஷனல் கான்பரன்ஸ் தலைவர் ஒமார் அப்துல்லாவும் பிடிபி தலைவர் மெஹ்பூபா மப்டியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். சிறிநகரில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் கைத் தொலைபேசி மற்றும் இணையத் தொடுப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. விடிந்ததும் பள்ளத்தாக்கு முழுவதிலும் கடுமையான அவசரகாலப் பிரகடனம் செய்யப்படவிருக்கிறது.

“என்ன நடக்கிறது என்று எனக்கே தெரியவில்லை. நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக நம்புகிறேன். காஷ்மீரிய மக்களாகிய எங்களுக்கு என்ன காத்திருக்கிறது எனத் தெரியவில்லை. அமைதியாக இருங்கள். அல்லா எங்களுக்கு ஒரு வழியைக் காட்டுவார்” என ஒமார் அப்துல்லாவின் இறுதி ‘கீச்சல்’ செய்தி தெரிவித்திருந்தது.

“ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளாகிய எங்களுக்கு ஜனநாயக இந்தியாவிலேயே இப்படி நடக்கிறது என்பதை உலகம் பார்த்துக்கொண்டு இருக்கிறது என்பதை நம்ப முடியாமல் இருக்கிறது. இந்தியாவே விழித்தெழு!” என்று மெஹ்பூபா மப்டி குரலெழுப்பியிருக்கிறார்.

பீப்ப்பிள்ஸ் கான்பரன்ஸ் தலைவர் சஜாட் லோனி, காங்கிரஸ் தலைவர் உஸ்மான் மஜித், சி.பி.ஐ.(M) சட்டமன்ற உறுப்பினர் ரறிகாமி ஆகியோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆகஸ்ட் 5ம் திகதி அதி காலை 12:00 மணிக்கு சிறீநகரெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி மாலை பெருமளவு பொதிவண்டிகள் படைகளுக்குத் தேவையான சரக்குகளைக் கொண்டுவந்து இறக்கியதாகவும் அடுத்த 24 மணித்தியாலத்தில் பள்ளத்தாக்கு முழுவதும் பாரிய இராணுவ நடவடிக்கைக்குள்ளாகும் எனவும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 30,000 இந்தியப் படைகள் இதுவரை குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

காரணம் என்ன?

இந்திய அரசியலின் அரசமைப்புச் சட்டத்தின் கட்டளை 35A மற்றும் கட்டளை 370 பிரகாரம் காஷ்மீரின் ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்துக்குக் கொடுக்கப்படவிருந்த தற்காலிக சுய ஆட்சியை மீளப் பெறுவதற்கான திட்டமொன்றை இந்திய அரசு நடைமுறைப்படுத்தப் போவதாகவும் இதனால் காஷ்மீரில் போராட்டம் வெடிக்கும் என்பதை உணர்ந்து முன்னேற்பாடாக அது தனது படைகளைக் குவிப்பதுடன் ஊரடங்கு உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.

கட்டளை 35, ஜம்மு-கஷ்மீர் மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் காணி உடைமை விடயங்களில் பிரத்தியேக உரிமைகளை வழங்குகின்றது.

1954 இல் ஜனாதிபதியின் கட்டளைப்படி இணைக்கப்பட்ட கட்டளை 35A, ஜம்மு-கஷ்மீர் பிரதேசத்தில் அந்த மானிலத்துக்கு வெளியேயுள்ளவர்களால் அசையாச் சொத்துக்களை வாங்க முடியாது எனவும் அந்த மாநிலத்தின் நிரந்தர குடிமக்களுக்கே அச் சலுகை உண்டெனவும் உறுதி செய்கிறது. அதே வேளை தற்காலிக குடிமக்கள் காணிகள் வாங்குவதையோ, அரச் வேலைகளுக்கு விண்ணப்பிப்பதையோ, புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதையோ, மானியங்களுக்கு விண்ணப்பிப்பதையோ தடை செய்கிறது. அதே வேளை ஜம்மு-காஷ்மீர் பெண்கள் மாநிலத்துக்கு வெளியிலுள்ளோரைத் திருமணம் செய்தால் அவர்கள் பல சலுகைகளை இழந்துவிடுவர் என்பதால் இச் சட்டம் பெண்களுக்கு எதிரானது என்று பல எதிப்புகளையும் அது சம்பாத்தித்திருந்தது.

பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம்

உலகத்தின் நந்தவனம் என்று புகழ் பெற்றிருக்கும் ஜம்மு-காஷ்மீரில் வெளி மாநிலத்தவர் நிலங்களை வாங்க முடியாது என்பதை வரையறுக்கும் அரசியலமைப்புச் சாதனங்களான 35A, 370 போன்றவற்றை மீளப் பெறுவோம் என பாரதிய ஜனதா கட்சி தன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சூழுரைத்திருந்தது. தற்போது ஆட்சிக்கு வந்த படியால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அது இந்த நடவடிக்கையை எடுக்கிறது. இருப்பினும் சட்டப்படி அது சாத்தியமாகாது எனச் சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள். இப்படியான முயற்சிகள் அக்டோபர் 1947 இல் அப்போதய ஜம்மு-கஷ்மீர் மஹாராஜா ஹரி சிங் தனது நாட்டை இந்தியாவுடன் இணைத்துக்கொள்வதற்காக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முறித்துவிடக்கூடிய ஆபத்தும் உண்டு என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இச் சூழ்நிலையில் பா.ஜ.க அரசின் இம் முயற்சிகள் காஷ்மீரின் பிரச்சினைகளை மேலும் ஊதிப் பெருப்பிக்கவே உதவி செய்யும். இதுவரையில் இந்தியா ஜம்மு-காஷ்மீரில் ஓரளவு அமைதியை அனுபவித்து வருகிறதென்றால் அதற்கு காரணம் பரூக் அப்துல்லா போன்ற தாராளவாதிகளின் நிலைப்பாடுகளினால்தான். இந்தியாவின் தற்போதய நடவடிக்கைகள் இப்படியான தாராளவாதிகளையும் தீவிரவாதிகளிடம் தள்ளிவிடப் போகிறது.

காஷ்மீர் இந்தியாவின் இதர மானிலங்களின் ஆட்சியாளர்கள் போல் இளிச்சவாயர்கள் அல்ல.