ArticlesColumnsIndia

காஷ்மீரின் கதை | பாராத பக்கம்

” இராணுவப் பிணக்குகளில் இரண்டு வகையுண்டு. ஒன்று பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படுவது. மற்றது வன்முறையினால் தீர்க்கப்படுவது. முதலாவது மனிதரின் குணாதிசயம், இரண்டாவது விலங்குகளின் குணாதிசயம். முதலாவது தோல்வியில் முடிந்தால் தான் இரண்டாவது பற்றிச் சிந்திக்க வேண்டும்” – Tullius Cicero

கிறிஸ்து நாதர் பிறப்பதற்கு 63 வருடங்களுக்கு முன்னர் தூளியஸ் சிசேறு சொன்ன வாக்கியம் இப்போது பொருந்துமோ தெரியாது. காரணம் இக்காலத்தில் பிணக்குகள் போருக்காகவே உருவாக்கப்படுவன, பெரும்பாலும்.

காஷ்மீரிய பிரச்சினை பொதுவாக எங்களுக்கு நீண்ட காலமாக அந்நியமான ஒன்றாக இருந்தாலும் ஈழ விவகாரத்தில் இந்தியா எதிரியாகியதற்குப் பின்னர் காஷ்மீரும், சில வேளைகளில் பாக்கிஸ்தானும் அணைத்துக் கொள்ளக்கூடிய நண்பர்களாக நமது சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் காட்டுகின்றனர். காஷ்மீரிலான காதல் எதிரியால் ஏற்பட்டதா அல்லது நட்பினால் ஏற்பட்டதா என்பது கொஞ்சம் உதைக்கும் கருப்பொருள். எனவே அதன் பின்னணி.

ஷம்மி கபூர், ஷர்மிலா தாகூர் நடித்த ‘கஷ்மிர் கி காலி’ (1964) முதல் சாருக் கான், மனிஷ கொய்ராலா நடித்த ‘டில் செ’ (1998) வரை, வட இந்திய திரைப்படங்கள் காட்டிய அழகிய இந்திய பூந்தோட்டம் என்ற காஷ்மீர் தான் என் போன்ற பலருக்குத் தெரிந்திருந்த காஷ்மீர்.  எங்களுக்கு வேண்டுமென்றே காட்டப்பட்ட காட்சிகள் வடக்கில் காஷ்மீரும் தெற்கில் கூவமும் அரசியல் காரணங்களுக்காக என்பது இப்போது தான் வெளிக்கிறது.

காஷ்மீரின் கதை

இந்தியா பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடையும் போது இருந்த 650 சிற்றரசுகளில் காஷ்மீரும் ஒன்று. காஷ்மீரின் அப்போதய ராஜா ஹரி சிங். இவர் ஒரு இந்து. சிறீநகரில் இருந்து ஆண்டு கொண்டிருந்தார். அவரது குடிமக்களில் பலர் இஸ்லாமியர்கள். 1947 இல் விடுதலை கிடைத்தபோது ஏனய சிற்றரசுகளைப் போலவே காஷ்மீருக்கும் மூன்று தேர்வுகள் கொடுக்கப்பட்டன. ஒன்று – இந்தியாவுடன் இணைவது, இரண்டு – பாகிஸ்தானுடன் இணைவது அல்லது தனி நாடாகவே இருப்பது. ஹரி சிங் தனியாகவே இருப்பது என்று முடிவெடுத்திருந்தார். ஆனால் பாகிஸ்தானின் உசுப்பேத்தலில் (?) பல பிரஜைகள் ஹரி சிங் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். ஹரி சிங் இந்தியாவுக்குத் தப்பி ஓடிப் போய் அங்கு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வைத்து விட்டார். ஒக்டோபர் 26, 1947 இல் இது நடந்தது. அன்றிலிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் மீதான பிணக்கு ஆரம்பித்தது.

1947-1948 காலத்தில் இரு நாடுகளுக்குமிடையேயான இராணுவ மோதல் இடம் பெற்றது. ஐ.நாவில் இந்தியா முறையிட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் படைகள் வெளியேற இந்தியப் படைகள் எண்ணிக்கை குறைக்கப் பட்டன. இதைத் தொடர்ந்து காஷ்மீரிய மக்களின் எண்ணத்தைக் கோருவதற்காக சுதந்திரமான தேர்தல் அங்கு நடத்தப்பட்டது. அப்போது காஷ்மீரி மக்களிடம் பிரபலமாகவிருந்த ஷேக் அப்துல்லா இந்திய தரப்பை ஆதரித்தவர். அவரே தேர்தலிலும் வென்று ஒக்டோபர் 30, 1948 இல் காஷ்மீரின் முதலமைச்சரானார். ஐ.நா. வின் பணிப்பை மதிக்காது பாகிஸ்தான் தொடர்ந்தும் சண்டையிட்டு வந்தது. ஜனவரி 1, 1949 அன்று இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தன. காஷ்மீரின் 65 வீதம் இந்தியாவுக்கும் மீதி 35 வீதம் பாகிஸ்தானுக்கும் வழங்கப்பட்டு இரண்டையும் பிரிக்கும் எல்லையை ‘லைன் ஒப் கொன்றோள்’ (Line of Control LOC) என அழைக்கைப் பட்டது.

இதன் பின் இரு நாடுகளிலும் இடையிடையே வந்த தலைவர்கள் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீரியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சித்தாலும் அவர்களின் அகால மரணங்களும், அகால கொலைகளும், அகால ஆட்சி மாற்றங்களும் தீர்வெதையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மாறாக 1989 இல் பாகிஸ்தானின் ஆதரவுடன் காஷ்மீரிய விடுதலைப் போராட்டம் வன்முறைப் பரிமாணத்தை எடுத்தது. இதன் எதிரொலியாக எல்லையில் இந்தியாவின் படைக் குவிப்பு 500,000க்கும் மேலாக அதிகரிக்கப் பட்டது. பிரிவினைவாதிகளுக்கும் இந்தியப்படைகளுக்குமிடையேயான மோதல்களினாலும், பழிவாங்கல்களினாலும் சுமார் 70,000 மக்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றனர். இலட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்க்கப் பட்டுள்ளனர். தற்போதய பிரச்சினை பெப்ரவரி 14, 2019 அன்று இந்திய துணைப்படையின் மீதான நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலுடன் ஆரம்பித்தது. 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

அடில் அஹ்மட் டார் – புல்வாமா தற்கொலைதாரி

ஆக்கிரமிப்பு இராணுவம் எதுவாக இருந்தாலும் அதன் மீதான எதிர்ப்பும் காழ்ப்புணர்வும் மக்களுக்கு வருவது இயல்பு. வங்காள தேசம் பிரிக்கப்பட்ட போது முக்தி பஹ்னி இயக்கத்தின் தலைவர் முஜிபுர் ரஹ்மானுக்கு இந்தியப் படைகள் ஆதரவு கொடுத்தன. வங்காள தேசப் போராட்டத்தின் போது (அப்போது கிழக்குப் பாக்கிஸ்தான்) அன்நாட்டு மக்களைப் பாகிஸ்தானிய படைகள் கொலை, சூறை, கற்பழிப்பு என்று பலவழிகளிலும் கொடுமைப்படுத்தினர் எனவும் அதுவே நாடு பிரிவதற்குக் காரணமாக அமைந்தது எனவும் அப்போதய எகிப்திய பத்திரிகை ‘அல் அஹ்ரம்’ தலையங்கம் எழுதியிருந்தது. இந்திய இராணுவம் ஈழத்தில் புரிந்த அட்டூழியங்கள் தெரியாதவையல்ல. காஷ்மீரிலும் இதே குற்றச்சாட்டு. பாக்கிஸ்தான் பிரதமர் விடுதலைப் புலிகளை உதாரணம் காட்டி “‘தற்கொலைப் போராளிகள்’ தமது மக்களின் மீது நடாத்தப்படும் அநியாங்களின் பால் எழும் கோபத்தின் காரணமாகவே உருவாகிறார்கள், மதங்களையும் இதர பேதங்களையும் குற்றம் சாட்ட முடியாது” என்ற கருத்துப்படப் பேசியிருந்தார். அதுதான் உண்மை. அவரது அரசியல் முதிர்ச்சி, அறிவு, யதார்த்தமான சிந்தனை இந்தியத் தரப்பிடம் இல்லாது போனது வருத்தம் தருவதே.

காஷ்மீரில் இந்தியப் படைகள் செய்கின்ற அட்டூழியங்களுக்கு தேசிய முலமைப் பூசி இந்திய விபசார ஊடகங்கள் இலகுவாக விற்பனை செய்கின்றன. அதைத் திரையுலக அரிதாரிகள் மேலதிக இலாபத்தோடு பாமரர்க்கு விற்றுவிடுகிறார்கள். ஒரு சில மனிதாபிமானிகளும், இடதுசாரிகளும், செயற்பாட்டாளர்களும் காஷ்மீரிய மக்கள் பார்க்கும் இந்திய முகத்தை அம்பலப்படுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் குரல்களை விபசார ஊடகங்கள் நசுக்கினாலும் சமூக ஊடகங்கள் எதிரொலிக்கின்றன.  சமீபத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய ‘The Ministry of Utmost Happiness’ என்ற நூலை வாசித்தேன். காஷ்மீரிய மக்களின் மன உணர்வுகளையும் இந்திய ஆகிரமிப்பு படைகளின் அட்டூழியத்தையும் இந் நாவல் மூலமாக வெளிப்படுத்தியிருந்தார். ஷம்மி கபூர், ஷார்மிலா தாகூர் காட்டிய காஷ்மீர் அல்ல அது. மிகவும் வேதனையைத் தந்த, காஷ்மீரிய மக்களின் விடுதலை வேட்கையின் பின்னணியை நான் முதல் தடவையாக உணர வழி செய்த நாவலது. ஈழத்தில் நடந்த, நான் பார்க்காத இந்திய இராணுவத்தின் அட்டூழியத்தைக் காஷ்மீரியக் கண்ணாடி துல்லியமாகக் காட்டியது.

காஷ்மீரியத் தீர்வுக்கு இந்தியா மட்டும்தான் காரணமென்று நான் சொல்லவில்லை. ஐ.நா. வின் தலையீட்டை மீண்டும் கொண்டுவருவதற்கான பலம் இந்தியாவிடம் தான் இருக்கிறது. பாகிஸ்தான் ஒரு ‘தோற்றுப்போன நாடு’. மிக நீண்ட காலத்துக்குப் பிறகு நாட்டின் மீது அக்கறையுள்ள ஒரு பிரதமரைப் பாகிஸ்தானிய மக்கள் கண்டெடுத்துள்ளார்கள். அப்படியான ஒரு தலைவரை இந்தியர்களும் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்தியாவின் பெரிய பிரச்சினையே அயலவர்களுடன் நட்பு பேண முடியாத தன்மை. அயல் நாட்டு மக்களின் மனங்களை வெல்லும் எந்த வகையான திட்டங்களும் இந்தியாவிடம் இல்லை. பாகிஸ்தான், வங்காள தேசம், சிறீலங்கா, காஷ்மீரம் – எதுவும் நல்லுறவைப் பேண விரும்பும் நாடாக இந்தியா இல்லை. வளர்ந்து வரும் சீனா தனது அயல் தேசங்களின் உதவித் திட்டங்களுக்காக 1.4 ட்ரில்லியன் டாலர்களைச் செலவழிக்கிறது. தன் நற்பெயரை உருவாக்கும் பிரசாரத்துக்காக  அது வருடத்துக்கு 10 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கிறது (அமெரிக்கா $666 மில்லியன்). இந்தியா $3.2 பில்லியன்களை உதவியாகப் பெற்று அதில் $1.6 பில்லியன்களப் பிறநாடுகளுக்கு உதவியாக வழங்குகிறது. அதில் 67% பூட்டானுக்குப் போகிறது. 5% சிறீலங்காவிற்குப் போகிறது. ஏதோ ‘நானும் இருக்கிறேன்’ பேர்வழி.

காஷ்மீரின் மீதான தற்போதய போரின் ஆரம்பம் அடில் அஹ்மட் டார் ரின் தற்கொலையோடு ஆரம்பித்தது.

டார் காஷ்மீரத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவன். உயர் கல்வியைத் தொடர முடியாது அவன் அயலவர் ஒருவரின் மரக்காலை ஒன்றில் தொழில் பார்த்து வந்தான். தன் குடும்பத்தைப் பராமரிப்பதற்காக அவன் இதர தொட்டாட்டு வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது. ஒரு நாள் பாடசாலை முடிந்து வீடு வரும் வேளையில் பொலிஸ் படையினர் அவனை நிறுத்தி மூக்கை நிலத்தில் உரஞ்சியபடி பொலிஸ் வாகனத்தைச் சுற்றி வரும்படி கட்டளையிட்டார்கள். 2016 நடந்த மக்கள் போராட்டத்தின் போது பொலிஸ் சுட்டபோது டாரின் காலில் சூடு விழுந்தது. அப்போது 100 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தார்கள். மார்ச் 2018 இல் அவன் தீவிரவாதிகளுடன் இணைந்தான். இந்தியத் துருப்புக்கள் அவனது வீட்டை முற்றுகையிட்டுத் தேடின. குடும்பத்தினரை வீட்டின் உள்ளே வைத்துப் பூட்டிப்  தீவைத்தனர். பெப்ரவரி 14 2019 இல் அவன் தற்கொலைப் போராளியானான். இதுவும் ஒரு பக்கத்துக் கதை. நாம் பாராத பக்கத்துக் கதை. ‘ஜெய் ஹிந்த்’ குரல்களுக்குள் அமிழ்ந்துவிட்ட கதை.

நமது கதையிலும் இப்படியான சம்பவங்கள் குறுக்கிட்டிருக்கின்றன. இந்தியா இல்லாது ஈழ விடுதலை இந்தளவு பரிமாணத்தை எடுத்திருக்க முடியாது, உண்மை.  நடந்து முடிந்த சம்பவங்களின் வலிகளும் வடுக்களும் அந்த இந்திய பங்களிப்பை ஈழத்தவர் நட்புடன் பார்க்க வைப்பதற்கான சூழலை இன்னும் ஏற்படுத்தவில்லை. இந்தியாவை நம்ப சிங்களவர் மட்டுமல்ல தமிழரும் தயாராகவில்லை. காஷ்மீர மக்களும் அப்படித்தான். இந்தியா அமைதியாக வாழ்வது இந்தியாவின் கைகளில் தான் இருக்கிறது. காஷ்மீரத்தில் ‘ஜெய் ஹிந்த் ம் ஒலிக்க வேண்டாம். ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ தும் ஒலிக்க வேண்டாம்.

இந்திய வெறுப்பின் எல்லை மீறிய செயல் தான் தற்கொலைத் தாகுதல் என்று இம்ரான் கான் நம்புவாரானால் அந்த நம்பிக்கையைப் பொய்ப்பிப்பது இந்தியாவாகவே இருக்க வேண்டும்

பேதமான கருத்துக்களுமிருக்கலாம். வரவேற்கிறேன்.

சிவதாசன்

மார்ச் 3, 2019