IndiaNews & Analysis

‘காவி உடைத்’ திருவள்ளுவர் படம், கோவை பலகலைக்கழக நூலகத்திலிருந்து அகற்றப்பட்டது

தமிழ்நாடு, கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழக நூலகத்தில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின்போது வைக்கப்பட்ட, காவி உடையிலிருக்கும் திருவள்ளுவரின் படமொன்றை, வியாழன்று (17), அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக வெள்ளை உடை தரித்திருக்கும் ‘அய்யன் திருவள்ளுவரது’ படம் வைக்கப்பட்டுள்ளது.

காவி உடைத் திருவள்ளுவர் படத்தைத் தான் மாற்றி விட்டதாக, தி.மு.க. விவசாய மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்ச்செல்வம் வியாழனன்று ருவீட் செய்திருந்தார்.

8ம் வகுப்பு இந்திப் பாடப் புத்தகத்தில் பிராமணராகக் காட்டப்படும் திருவள்ளுவர்-வாசுகி படம்: தி நியூஸ் மினிட்

கறுப்பு முடியுடனும், காவி உடையுடனும், திருவள்ளுவர், திருக்குறள் சுவடியைக் கையில் வைத்திருப்பது போன்ற சுவரொட்டி தரத்திலான படம் இப் பல்கலைக் கழகத்தில் 2017-2018 காலப் பகுதியில் வைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. அமைச்சர் பன்னீர்ச்செல்வத்தினால் மாற்றீடு செய்யப்பட்ட படத்தில் தமிழ்நாடு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை உடை தரித்திருக்கும் ‘அய்யன் திருவள்ளுவரது’ உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

திருவள்ளுவரை இந்துமத துறவியாகக் காட்ட இதற்கு முன்னரும் பல தடவைகள் முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. 8ம் வகுப்பு இந்தி பாடப் புத்தகத்தில் நெற்றியில் வீபூதியணிந்து, தலையில் ஒற்றைக் குடுமி, உருத்திராட்சம் மாலை ஆகியவற்றுடன், காவியணிந்த திருவள்ளுவரை ஒரு பிராமணராகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

“திருவள்ளுவரை ஆரியராக்கும் இந்த முயற்சியை பா.ஜ.க. அரசு முன்னெடுக்க அதை அ.இ.அ.தி.மு.க. அரசு பார்த்துக்கொண்டிருக்கிறது. இதை நாம் அனுமதிக்கப்போவதில்லை ” என அப்போது தி.மு.க. தலைவர் எம்.கே.ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.

டிசம்பர் 2020 இல், பாடசாலை மாணவர்களுக்கான, மாநில அரசுக்குச் சொந்தமான ‘கல்வி’ என்னும் தொலைக்காட்சி காவி உடையுடனான திருவள்ளுவரை ஒரு நிகழ்ச்சியின்போது காட்டியிருந்தது.