காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டங்களின் பின்னால் ஜே.வி.பி. – ஒத்துக்கொண்டார் செயலாளர் ரில்வின் சில்வா

“காலிமுகத் திடல் போராட்டங்கள் ஆரம்பித்த நாளிலிருந்தே எங்கள் கட்சி அதில் இணைந்து போராடி வருகிறது. எங்கள் இளைஞர்கள், கலாச்சார, மாணவர், பெண்கள் அமைப்புகள் எனப் பல இப்போராட்டத்தில் இணைந்துள்ளன. இப் போராட்டத்துக்கு முத்திரை குத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக எங்கள் தலைவர்கள் அங்கு போவதைத் தவிர்த்து வந்தார்கள்” என ஜே.வி.;பி. கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மே 09 அன்று காலிமுகத் திடலுக்குச் சென்ற பொதுஜன பெரமுன குண்டர்கள் அங்கு மேற்கொண்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து #கோதாகோகம கிராமத்தில் கலவரம் வெடித்திருந்தது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தவர்களுக்கு ஆதரவாக மேலும் பலர் களமிறங்கியதைத் தொடர்ந்து குண்டர்கள் பேர ஆற்றில் தூக்கி வீசப்பட்டதோடு அவர்களைக் கொண்டுவந்திருந்த வாகனங்கள் சேதமாக்கப்பட்டும், தீயிடப்பட்டும், ஆற்றில் தூக்கி வீச்ப்பட்டுமிருந்தன.

இக் களேபரத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பரிவாரமும் ஆர்ப்பாட்டக்காரர்களால் துரத்தப்பட்டிருந்தனர். இது குறித்து வினவியபோதே ரில்வின் சில்வா, இவ்வார்ப்பாட்டங்களின் பின்னால் ஜே.வி.பி. இருப்பதை முதல் தடவையாக ஒத்துக்கொண்டுள்ளார்.

இதே வேளை இச் சம்பவ இடத்துக்கு ஜே,வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்காவும் சென்றிருந்தபோதும் அவருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காதது இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னால் ஜே.வி.பி. இருப்பதை வெளிக்காட்டி விட்டது. இதுபற்றி விசாரித்தபோது “நிலைமை மோசமாக இருக்கிறது என அறிந்ததுவுடன் எங்கள் தலைவர் அங்கு உடனடியாகச் சென்றிருந்தார். அது தான் தலைமைத்துவப் பண்பு. சஜித் பிரேமதாச போன்றவர்களைப் போல் அவர் உத்தியோகபூர்வ ஆடம்பர வாகனங்களில், பாதுகாப்பு அதிகாரிகள், பரிவாரங்கள் சகிதம் போகவில்லை. சஜித் போன்றவர்கள் அங்கு போனதன் மூலம் அரசியல் ஆதாயத்தைத் தேட முனைந்தார்கள். அது தான் வித்தியாசம்.

தெருக்களில் இறங்கிப் பாருங்கள். ஆத்திரமுற்றிருக்கும் மக்கள் ஆடம்பர வாகனங்களையே மறித்து விசாரிக்கிறார்கள். உணவின்றி வாடும் மக்களுக்கு இருக்கும் ஆத்திரம் நியாயமானது. இந்த நேரத்தில் அரசியல்வாதிகள் தமது ஆதரவாளர்களுடன் பெற்றோலை விழுங்கும் ஆடம்பர வாகனங்களில் வந்திறங்குவது அவர்களது ஆத்திரத்தை மேலும் அதிகரிக்கும். எதிர்க்கட்சித் தலைவருக்கு இது தெரிந்திருக்க வேண்டும். அதே வேளை மக்களது ஆத்திரம் அவருக்கு எதிராக நிரம்ப இருக்கிறது என்பதும் உண்மை” என ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.