காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்கவேண்டும் – சீ.ஐ.டி.


காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்துவரும் பலருக்கு அவர்கள் மீதான விசாரணைகள் முடிவடையும்வரை வெளிநாடுகளுக்குப் போகக்கூடாது எனவும் அதுவரை அவர்களது கடவுச் சீட்டுகளை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் குற்ற விசாரணைப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

மே 09 அன்று நடைபெற்ற கலவரத்தின்போது பலர் மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரை விசாரிக்க கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த வேண்டுகோளையடுத்து குற்ற விசாரணைப் பிரிவு இக்கட்டளைகளை இட்டுள்ளது.

“இது போன்ற பயணத் தடைகள் விதிக்கப்படுவது இதுவே முதல் தடவை எனவும் சாட்சிகள் வெளிநாடு சென்றுவிட்டால் சந்தேகநபர்கள் தப்பிவிடலாமென்ற காரணத்தினாலேயே காவல்துறை இப்படியான நடவ்டிக்கைகளை எடுக்கிறது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் நுவான் போபகே தெரிவித்துள்ளார். இதன் மூலம் மேலும் புதிய சாட்சியங்கள் முனவரப் பயப்படுவார்கள் என்பதனால் இதை ஒரு அச்சுறுத்தல் நடவடிக்கையாகவே தாம் பார்ப்பதாகவும் இக் காரணங்களுக்காக இத் தடையை நீக்கும்படி தாம் நீதிமன்றத்தில் கேட்கவுள்ளதாகவும் போபகே, ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது தெரிவித்தார்.

இச் சந்திப்பில் உரையாற்றிய, பயணத்தடை விதிக்கப்பட்ட அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் மற்றும் தம்பிட்டிய சுகதானந்த தேரர் ஆகியோர் மக்கள் மீதான அரசாங்கத்தின் இந்த ஒடுக்குமுறைகளை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

“கடந்த 46 நாட்களாக நாங்கள் காலிமுகத் திடலில் சேர்ந்து கோதாபய-ரணில் அரசாங்கத்தை மாற்றிப் புதியதொரு ஆட்சியைக் கொண்டுவர முயற்சிக்கின்றோம். ஆனால் மே 09 ம் திகதி, அரசாங்கத்தினால் ஏவப்பட்ட குண்டர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை இரக்கமில்லாது தாக்கியதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகப் பொதுமக்கள் வீதிகளுக்கு இறங்கவேண்டி ஏற்பட்டது. இப்போது 14 பேர் மீது பயணத்தஹ்டை விதிக்கப்பட்டுள்ளதுடன் பலர் கைதுசெய்யப்பட்டும் , குற்றவிசாரணைப் பிரிவிற்கு விசாரணைக்கு வரும்படி கட்டளையிடப்பட்டும் பலவழிகளிலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கோதாபய அரசாங்கம் தோற்கடிக்கப்படும்வரை நாம் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான இப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. எந்த வழிகளினாலும் அவர்கள் எம் மனங்களில் பயத்தை ஊட்டப் போவதில்லை” என அருட் தந்தை பீரீஸ் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மாணவர் அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான லஹிரு வீரசேகர பேசுகையில் ” மே 09 கலவரங்களைத் தொடர்ந்து நாங்கள் கொழும்பு கோட்டை காவல்துறையிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்த காரணத்தால் குற்ற விசாரனைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. இவ் விசாரணயின்போது நாம் கொடுத்த வாக்குமூலத்தில் இச் சம்பவத்தின்போது தாக்குதல் நடத்தியவர்கள் யார் யார் என்பதை நாம் விளக்கமாக அவர்களுக்குக் கொடுத்திருந்தோம். எங்களது வழக்கறிஞர்களும், ஊடகவியலாளர்களும் தாக்குதல் நடத்தியவர்கள் மீதான படங்களையும் காணொளிகளையும் வைத்திருக்கிறார்கள். எனவே காவல்துறை இவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுப்பதுடன் இக் குண்டர்களை ஏவிவிட்டவர்கள் மீது பயணத்தடைகளை விதிப்பதுடன், அவர்களைக் கைது செய்யவும் வேண்டும். இல்லாது போனால் சாட்சியங்கள் மீது அவர்கள் தாக்குதல்களை நடத்தவும் முயற்சிக்கலாம்” எனத் தெரிவித்தார்.