ColumnsEnvironmentசிவதாசன்

காலநிலை|குழந்தைகளின் புரட்சி

உலகைக் காப்பாற்றுவதற்கான உலகப் பணிநிறுத்தம். பல இலட்சம் பேர் பங்கேற்பு

சிவதாசன்

கிறெட்டா துண்பேர்க்

பல இலட்சக்கணக்கான குழந்தைச் செயற்பாட்டாளர்கள் பாடசாலைகளைப் புறந்தள்ளிவிட்டுப் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். உலகைக் காப்பாற்றுவதற்காக உலகெங்கும் இளையவர்கள் திரண்டது இது தான் முதல் தடவை.

குவாட்டமாலாவில் மாணவர் ஆர்ப்பாட்டம்

கால நிலை பிழைத்து வருகிறது என்பதற்குப் புதிதாகச் சாட்சியங்கள் எதுவும் தேவையில்லை. உணவில்லாமல் எலும்பும் தோலுமாய் ஒட்டி உலர்ந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் துருவக்கரடியின் படம் ஒன்றே போதும்.

இந்த இளையவர்களின் இதயங்களை உருக்கும் இந்தக் காட்சி அரசியல்வாதிகளை அசைக்கவில்லை. காரணம் அழிவைக் காதலிக்கும் இந்த அரசியல்வாதிகளை மீண்டும் மீண்டும் இந்தக் குழந்தைகளின் பெற்றோர் தான் ஆசனங்களில் அமர்த்துகிறார்கள்.

சுயநலம். வேறொன்றுமில்லை.

அறுபதுகளில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த மாவியக்கத்துக்குப் பிறகு எழுகின்ற உலகளாவிய மாவியக்கம் இதுவாக இருக்கவேண்டுமென்று விரும்புவோம்.

பனி உருகியதால் பஞ்சத்தில் நலிந்த துருவக் கரடி

ஐ.நா.வின் காலநிலை மாற்ற உச்சி மாநாடு செப்டம்பர் 23ம் திகதி நடைபெறவிருக்கிறது. மீண்டுமொரு தடவை அரசியல்வாதிகள் கூடிக் கும்மாளமடிக்கப் போகிறார்கள். எரியும் காடுகளையோ, உருகும் பனிமலைகளையோ பற்றி இன்னுமொரு தடவை அவர்கள் பேசலாம் ஆனால் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை.

இந்த வேளையில் தான் இன்னுமொரு அழுத்தம் தேவை. அது குழந்தைகளினதும், இளையவர்களினதும் வடிவத்தில் வரும்போது அரசியல்வாதிகள் நிச்சயம் பயப்படுவார்கள். காரணம் அவர்களது வாக்கு வங்கிகளின் சாவிகள் அந்தப் பிள்ளைகளிடமே இருக்கப்போகின்றனவென்பது அவர்களுக்குத் தெரியும்.

நியூ யோர்க் முதல் குவாட்டமாலா நகரம் வரை, சிட்னி முதல் காபுல் வரை, கேப் ரவுண் முதல் லண்டன் வரை நூற்றுக் கணக்கான நகரங்களில் சூழல் போராளிகளால் தெருக்கள் நிறைந்திருக்கின்றன. இயற்கையின் அனர்த்தங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றுமாறு அரசாங்கங்களை வற்புறுத்துகிறார்கள் அவர்கள்.

வடக்கு, தெற்கு அமெரிக்கா தவிர்த்து, நேற்றய பணி நிறுத்தத்தில் சுமார் 3 மில்லியன் போராளிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள் என கிறெட்டா துண்பேர்க் டுவீட் செய்திருக்கிறார்.

கிறெட்டா ஒரு பதின்ம வயதுப் பெண் போராளி. சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர். தற்போது நியூ யோர்க்கில் தங்கியிருந்து நடைபெறப்போகும் உச்சிமாநாட்டைத் தன் போராட்டக் களமாக்கிக் கொள்வதற்காந தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

நியூ யோர்க் உச்சிமாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் பலரும் வரப்போகிறார்கள். காலநிலை மாற்றத்தை நிறுத்த அவர்கள் என்ன திட்டங்களை வைத்திருக்கிறார்கள் எபாடியான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறார்கள் என்பதை அவர்கள் சொல்ல வேண்டுமென அழுத்தங்கள் கொடுக்கப்படுவதற்காகவே உலகம் முழுவதுமான இந்தப் பணி நிறுத்தம்.

பொகோட்டாவில் மாணவர் ஆர்ப்பாட்டம்

பணி நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் முதலில் பசிபிக் தீவுகளில்தான் ஆரம்பித்தது. அவையும் காட்டுத் தீ போல் அவுஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, வடக்கு, தெற்கு அமெரிக்கா என்று உடனடியாகவே பரவிவிட்டது.

கடும் மழைக்கும், பெரும் புயல்களுக்கும், வெள்ளப்பெருக்கு, வரட்சி என்று எல்லாவற்றுக்கும் முகம் கொடுப்பவை சிறிய, வறிய நாடுகள் தான். அவர்களிடம் எச்சரிக்கை மணிகள் இல்லை. செய்தி ஊடகங்கள் கரைகளைத் தாண்டுவதில்லை. அழிவுகளின் ஆழம் பற்றி அறிவதற்கு மேற்குலகத்துக்கு நேரமே கிடைப்பதில்லை. சமீபத்தில் பஹாமாஸ் தீவுகளைச் சூறாவளி சுழற்றியடித்தது. ஆயிரக்கணக்கானோர் உயிர்களையும் பல்லாயிரக்கணக்கானோர் உடமைகளையும் இழந்தனர். இருந்தும் உலகம் எதுவுமே நடக்காதது போலவே தன்பாட்டில் இருக்கிறது.

நேற்றய போராட்டம் பசுபிக் தீவுகளில் ஆரம்பமாகியது. கிரிபாதி நகரில் நடந்த ஊர்வலத்தில் பங்குபற்றிய மாணவர்கள் பிடித்திருந்த பதாகைகளில் காணப்பட்ட வாசகங்கள் – “நாங்கள் தாளவில்லை. போராடிக்கொண்டிருக்கிறோம்” என்பது.

சொலமன் தீவுகளில் குழந்தைகள், பயிர்ப் பாவாடைகளுடன் மரத்தினாலான கேடயங்களுடன் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தார்கள்.

உலகைக் காப்பாற்றுவதற்கான உலகப் போராட்டம் ஆரம்பித்துவிட்டது. மூலை முடுக்குகளிலெல்லாம் அதன் முழக்கங்கள் கேட்கவாரம்பித்து விட்டன.

பசுபிக்கிலிருந்து கேட்ட முழக்கம் பாங்கொக்கில் எதிரொலித்தது வேறு வடிவில். 200 இளயவர்கள் தாய்லாந்தின் சூழல் அமைச்சின் அலுவலகத்துக்குள் புகுந்து நிலத்தில் இறந்தவர்கள் போல் படுத்துக்கொண்டார்கள். காலநிலை மாற்றத்துக்கு நீங்கள் எதுவும் செய்யாவிடில் இது தான் நடக்கும் என எச்சரித்தார் 21 வயது நனிச்சா ஒச்சரொஎன்சை என்ற மானவர் தலைவர்.

அவுஸ்திரேலியாவில் 300,000 பேர் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகில் அதிகளவு நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயுவை ஏற்றுமதி செய்யும் நாடு அவுஸ்திரேலியா. 110 நகரங்களில் நடைபெற்ற இப் பணி நிறுத்தத்தில் கலந்துகொண்டவர்கள் அரசுக்கு விடுத்த நிபந்தனை – 2030 க்குள் கார்பனீரொக்சைட் வெளியேற்றுவதைப் பூச்சியமாக்க வேண்டும் என்பதை.

கான்பெராவில் 12 வயது ஆரம்பப்பள்ளி மாணவி 10,000 பேர் கலந்துகொண்ட ஊர்வலத்தில் சொன்னது – ” தானும் தன் சக மாணவர்களும் தீர்மானித்திருப்பது பூமி வகுப்புகளை விட முக்கியமானது” என்று.

“அரசியல்வாதிகள் நாம் பாடசாலைகளுக்குப் போவதில்லையெ என்றுதான் கவலைப்படுகிறார்கள். ஆனால் நாங்கள் உலகைப் படிக்கிறோம். அதஹிக் காப்பாற்ற நாம் என்ன செய்யவேண்ட்மென்பதைப் படிக்கிறோம். பாடசாலை முக்கியம்தான் ஆனால் அதைவிட முக்கியம் நாம் அடுத்த சந்ததிகளுக்கு விட்டுப்போகும் இந்தப் பூமி” என்கிறார் அலிசன் என்ற மாணவி.

கான்பெரா ஆர்ப்பாட்டத்தில் ஒரு மானவி பிடித்திருந்த பதாகையில் எழுதப்பட்டிருந்த வாசகம் – “ஒரு குளிர்மையான இறப்பை எதிர்பார்க்கிறேன்”

“நான் இங்கு நிற்கிறேன் ஏனெனில் நான் வாழ் விரும்புகிறேன். நாங்கள் எல்லோரும் பிறந்த் நோக்கத்தை அடைவதற்காக வாழும் உரிமையைக் கொண்டவர்கள். நான் இளமையில் இறப்பதை விரும்பவில்லை” என அந்தச் சிறுமி கூறினார்.

“மாணவர்கள் பாடசாலையில் இருக்க வேண்டியவர்கள். இந்த மாதிரி ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் வியாபாரிகளுக்கு இடைஞ்சல் கொடுக்காமல், பல்கலைக் கழகங்களுக்கு இடைஞ்சல் வார இறுதி நாட்களில் வைக்கப்பட வேண்டியவை” என உதவிப் பிரதமர் மைக்கல் மக்கோமாக் கூறியிருக்கிறார்.

அவர் அரசியல்வாதி. அதுவும் ஒரு கன்சர்வேட்டிவ் அரசியல்வாதி. சூழலை விடப் பணத்தைத் தொழும் அரசியல்வாதி. குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளமுடியாத வக்கிரம் கொண்ட அரசியல்வாதி. உலகம் அவரைப்போல் நிறையப்பேரைக் கொண்டிருக்கிறது.

இந்தக் குழந்தைகளுக்காகவாவது அடுத்த புயல் அவர் வீட்டை முகர்ந்து போகட்டும்.

சீனா எந்தவித ஆர்ப்பாட்டத்தையும் அனுமதிக்கவில்லை. உலகின் அதிகளவிலான மாசு வாயுக்களை உற்பத்தி செய்யும் நாடு அது. சூறாவளியையும், எரி காற்றையும், பூகம்பத்தையும் கூட அது அனுமதிக்காதவரையில் மக்களுக்குப் பாதுகாப்புத் தான்.

கென்யா, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளிலும் பணி நிறுத்தமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன. கால நிலை மாற்றத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் 7 ஆபிரிக்க கண்டத்திலேயே உள்ளன. கென்யாவில் மட்டும் ஒரு நாளைக்கு 200 உயிரினங்கள் இப் பூமியிலிருந்து நிரந்தரமாக நீங்கி வருகின்றன.

லண்டன் தெருக்களில் 100,000 பேர் திரண்டனர். நாடெங்கிலும் 200 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அடுத்த 12 வருடங்களில் மாசு வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் காலநிலை மார்றத்தை ஓரளவு சமநிலைக்குக் கொண்டுவரலாம் என ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

ஆனால் டொனால்ட் ட்ரம்ப் போன்றவர்கள் காலநிலை மாற்றத்துக்கும் மனித நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமில்லை என நம்புபவர்கள். பொதுவாகப் பழமைவாதிகள் எல்லோரும் இப்படிபட்டவர்களே. துர்ப்பாக்கியமாக அவர்களைத் தான் மக்களும் ஆட்சியில் அமர்த்துகிறார்கள்.

எனவேதான் இந்தக் குழந்தைப் புரட்சி அவசியமானது. தானம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பார்கள். குழந்தைகள் தானே வீடு!

Photos: Al Jazeera / National Geographic