காற்றிலுள்ள நுண்துணிக்கைகள் திடீர் மாரடைப்பை ஏற்படுத்தலாம் – ஆய்வு
காற்றில் மிதந்துகொண்டிருக்கும் நுண்துணிக்கைகள் சுவாசிக்கப்படும்போது அவை மனிதரில் மாரடைப்பை (heart attack) ஏற்படுத்தும் சாத்தியங்கள் இருப்பதாக சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த பத்து வருடங்களாக சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட வளி மாதிரிகளை (samples) நிபுணர்கள் ஆராய்ந்தனர். ஒரு மனித தலைமுடியின் தடிப்பைவிட 25 மடங்குகள் சிறிய அளவினைக் கொண்ட (2.5 மைக்குரோ மீற்றர் விட்டமுடைய) வளித்துணிக்கைகள் இவ்வாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. PM 2.5 எனப் பெயரிடப்பட்ட இத் துணிக்கைகள் சுவாசத் துவாரங்கள் மூலம் இலகுவாக மனிதக் கலங்களில் நுழைந்துகொள்கின்றன எனவும் இதனால் பலவிதமான நோய்களும் ஏற்படுகின்றன எனவும் இந்நிபுணர்குழு முடிவு செய்திருக்கிறது.
2010 முதல் 2018 வரையிலான காலப்பகுதியில் மருத்துவமனைக்குச் செல்லாமல் வீடுகளிலோ வெளியிடங்களிலோ மாரடைப்பு காரணமாக இறந்தவர்களில் 18,000 பேரது இறப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது இவர்களில் 492 பேர் PM 2.5 காரணமாக இறந்திருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்குள் இத்துணிக்கைகளின் செறிவு சுவாச உறுப்புகளில் அதிகரிக்கும்போது பலர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமாகிறார்கள் என்பதைத் தம்மால் தீர்க்கமாக உறுதிசெய்துகொள்ள முடியுமென இவ்வாய்வுகளை மேற்கொண்ட சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Duke-NUS Medical School நிபுணரான ஜோயல் ஐக் தெரிவித்திர்க்கிறார்.
இத் துணிக்கைகளினால் ஏற்படும் மாரடைப்பு சடுதியானதாக இருப்பினும் இத்துணிக்கைகளினால் பாதிக்கப்பட்டு 3-4 நாட்களின் பின் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் கூரைவு எனவும் இதன் காரணமாக மாசடைந்த வளியைத் தவிர்ப்பதும் வளியை மாசடையச் செய்வதைத் தவிர்ப்பதும் மிக முக்கியமானவை என இந் நிபுணர்குழு வலியுறுத்துகிறது. இந் நடவடிக்கைகளின் மூலம் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிவதைத் தவிர்த்து இதர சிகிச்சைகள் இலகுவாக மேற்கொள்ளப்படுவதற்கு வசதியாகவிருக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.
மாரடைப்பை விடவும் சுயநிப்பீடன வியாதி (autoimmune decease) போன்ற பல்வேறு வியாதிகளையும் இம்மாசுற்ற வளி ஏற்படுத்துகிறது. இவ்வியாதியின்போது உடலின் நோயெதிர்ப்பு சக்தி புறக்கிருமிகள் என நினைத்துக்கொண்டு தனது உடலுறுப்புக்களையே தாக்கியழிக்கிறது. இப்படியான வியாதிகள் உயிருக்கு ஆபத்தானவை மட்டுமல்ல நீண்டகாலமாக இருந்து நோயாளிகளைத் தாக்கவல்லன.
உலகின் வேறு பல நகரங்களிலும் இவ்வாய்வுகளை மேற்கொள்ளும் முயற்சிகள் உலக சுகாதார நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.