காப்பான் – திரை விமர்சனம்

காப்பான் – திரை விமர்சனம்

Spread the love

நேற்று கே.வி.ஆனந்த் இயக்கிய ‘காப்பான்’ முதல்நாள் ஷோ பார்த்தேன். (ஈழத்தமிழர் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் இன்னொரு பெரிய படம்.) கே.வி. ஆனந்த் எப்போதுமே வித்தியாசமான கதைக்களத்தை தமிழ்நாட்டு சராசரி ரசிகனுக்கு பிடித்தவிதமாக இருக்கத்தக்கதாக படமாக்குபவர். படங்கள் விறுவிறுப்பாக இருக்கும். கதை வித்தியாசமாக இருக்கும். மசாலாவும் இருக்கும். அரசியல் இருக்கும். கூடவே விஞ்ஞானம், கொம்பியூட்டர் என்பனவும் இருக்கும். அழகான காட்சிகள் நிச்சயமாக இருக்கும்.

காப்பான் - திரை விமர்சனம் 1
‘காப்பான்’ சூர்யா

கே.வி.ஆனந்த் பத்திரிகைத்துறையில் இருந்துவிட்டு, பிறகு ஒளிப்பதிவாளராகி (‘போய்ஸ்’, ‘சிவாஜி’), அதன்பிறகு திரைப்பட இயக்குனராக மாறியவர். இவர் இயக்கிய படங்களில் அரசியல் த்ரில்லரான ‘கோ’ எனக்கு மிகவும் பிடித்த படம். எப்போதும் தனது படங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயராக வைப்பார். (‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’, ‘கவண்’, ‘காப்பான்’)

இந்த ‘காப்பான்’ படமும் கே.வி.ஆனந்தின் கடும் உழைப்பிற்கு சாட்சி. ஏறக்குறைய 3 மணி நேரப்படம். ஒரு ரகசிய உளவாளி.. இந்தியாவை, இந்தியாவின் பிரதமரைக் காப்பாற்ற செய்யும் சாகச சம்பவங்கள்தான் கதை. இந்தியாவை புகழ்வதாயும், பாகிஸ்தானுக்கு எதிரானதாயுமுள்ள (முஸ்லிம்கள்?) காட்சிகள் மிக அதிகம்.

காங்கிரஸ் ஆட்சியின்போது ஸ்ரீலங்காவிற்கு அனுப்புவதற்காக கொண்டு வரப்பட்ட இரசாயன ஆயுதங்களை கதாநாயகன் சூர்யா டைம்பொம் வைத்து தகர்க்கும் ஆரம்பக்காட்சி பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.. ஆனால் தொடர்ந்து வந்த திரைக் கதையில் குறிப்பிடத்தக்க பெரிய திருப்பங்கள் இல்லை. எந்தத் திருப்பங்களும் இல்லாமல் ஹைவேயில் நேராக வேகமாக கார் ஓடுவதுபோல படம் ஓடியது. துப்பாக்கி சண்டைகள், சண்டைகள், குண்டு வெடிப்புக்கள் என பல ஜிகினாக்கள் இருந்தாலும் படம் கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனால் படத்தில் ஒவ்வொரு பிரேமும் அழகான ஒளிப்பதிவு.

காப்பான் - திரை விமர்சனம் 2
‘இந்தியப் பிரதமர்’ மோகன்லால்

இந்தியப்பிரதமராக மோகன்லால்.. மலையாள வாசம் தரும் பேச்சு.. மோகன்லால் பாதிப்படத்தில் கொல்லப்பட்டுவிடுவார். அதன்பின் விளையாட்டுப் பையனாக இருந்த மோகன்லாலின் மகன் ஆர்யா பிரதமராகிவிடுவார். இருவரையும் காப்பாற்றும் காப்பான் கதாநாயகன் சூர்யா. One Man Show.. சூர்யா படம் முழுக்க விறைப்பாக இருக்கிறார். (கொஞ்சம் ஓவரோ?) நாயகன் உளவாளி மட்டுமல்ல.. இயற்கை விவசாயியும்கூட.. உளவாளி அவ்வப்போது விவசாயிகளுக்காக குரல் கொடுக்கிறார்.

பாதுகாப்பு அதிகாரியாக சமுத்திரக்கனி வருகிறார். படத்தில் என்னைக் கவர்ந்தவர் வில்லனாக வரும் ஹிந்தி நடிகர் போமன் இரானி (Boman Irani). கலக்கீட்டாரு.. அப்டி ஒரு ஸ்டைலிஷ் வில்லன். போமன் இரானி ஒரு பெருந்தொழிலதிபர். Bio-Weapon மூலம் பாகிஸ்தானை தாக்க நினைக்கிறார். பிறகு இந்தியாவை.. ‘செலிபிரா’ என்ற பூச்சியை பரவ விட்டு நாட்டை அழிப்பதாக..! இந்தப்படத்தில் கே.வி.ஆனந்த் எடுத்திருக்கும் விஞ்ஞான எடுகோள் இது.

படம் பார்த்து முடிக்கும்போது ஏனோ நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைப்புத்தான் வந்தது. ஹூம்.. அந்தக் காலத்தில் அந்த மனிதன் எத்தனை விதவித கதைகளை ஏற்று, வித்தியாசமான பாத்திரங்களை நடித்து எத்தனை படங்களை வெற்றிப்படங்களாக்கித் தந்து கொண்டிருந்தார். இன்று திரைத்தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் எத்தனையோபேர் விதவிதமாக படம் எடுக்க, நடிக்க நினைத்தாலும், ஒட்டுமொத்தமாக மனதில் நிற்கும் படங்கள் வருவதாகக் காணவில்லையே…

Print Friendly, PDF & Email