Spread the love

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலிலுள்ள மருத்துவமனையொன்றின் மகப்பேற்றுப் பிரிவில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது, புதிதாகப் பிரசவமான இரு குழந்தைகள், அவர்களது தாய்மார்கள், தாதியர்கள் என 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் அப் பகுதியைச் சுற்றி வளைத்து 80 பெண்களையும், குழந்தைகளையும் காப்பாற்றினர். 100 கட்டில்களைக் கொண்ட இந்த மகப்பேற்றுப் பிரிவை, எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு நடத்திவந்தது என அறியப்படுகிறது. காப்பாற்றப்பட்டவர்களில் 3 வெளிநாட்டுக்காரரும் அடங்குவர் என உள்ளக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளில் மூவர் பொலிஸ் சீருடையில் மருத்துவமனைக்குள் நுழைந்து கைக்குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கிப் பிரயோகங்களையும் செய்ததாக அங்கிருந்து தப்பிய ஒருவர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இப்பகுதியில் இஸ்லாம் மதத்தின் ஷியா பிரிவினரே அதிகம் வாழ்வதால் ஐசிஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் இங்கு அதிகம் நடைபெறுவதாக உள்ளூர்வாசி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்தார். சமீபத்தில் ஷியா மதத் தலைவர் ஒருவரது மரணச்சடங்கின்போது ஐஸிஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருந்தனர்.

“மருத்துவமனையையும், மரணச் சடங்கு போன்றவற்றையும் தாக்குவது ஒரு போர்க்குற்றம். இதைப் புரிந்தவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படவேண்டுமென” சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கிறது.

பிரித்தானியா, ஜேற்மனி, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இக் கொலைகளைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை மீளப்பெற்றுக்கொள்ளும் இந் நிலையில் அங்குள்ள தலிபான்களும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் தாம் அரசாங்க படைகளைத் தவிர நகர்ப்புறங்களில் தாக்குதல்களை மேற்கொள்வதில்லை எனத் தலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கைக்குத் தலையிடியைத் தரப்போகும் சீன நிறுவனங்கள் மீதான அமெரிக்க வர்த்தகத் தடை
காபுல் மருத்துவமனை மகப்பேற்றுப் பிரிவில் துப்பாக்கிச் சூடு

காபுல் மருத்துவமனை மகப்பேற்றுப் பிரிவில் துப்பாக்கிச் சூடு