காத்து வாக்கில…
மாயமான்
இது சினிமா விமர்சனம் அல்ல. இலங்கை அரசியல் பற்றியது. ‘காற்றுள்ளபோது தூற்றிக்கொள்’ என்றொரு பழமொழி இருக்கிறது. அதற்குப் புதிய அர்த்தமொன்றை இங்கு பாவிக்கிறேன். காற்று வீசும்போது தூற்ற (திட்ட) வேண்டிய எல்லாவற்றையும் தூற்றுங்கள், காற்று அதைச் சேரவேண்டிய இடத்துக்கு விரைவாகக் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்பதுவே அந்த புதிய அர்த்தம்.
மஹிந்த ராஜபக்சவுக்கு வேண்டாமென்று போய்விட்டதாம். தம்பி என்ன முடிவை எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் எனக் கூறியதாகக் காத்து வாக்கில வந்தது. ஆமாம், விடவே மாட்டேன் என்று தனது நாற்காலியைக் கட்டிக்கொண்டு அடம்பிடித்துக்கொண்டிருந்த அதே இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தான்- அறிவித்திருக்கிறார்.
இந்தக் காலத்தில் எந்தவொரு அரசியல்வாதியும் சொன்னதைச் செய்வதில்லை என்ற ஆழமான நம்பிக்கை மக்களின் மனதில் வேர்விட்டுக் கிளைபரப்பிய பின்னர் இதையும் நம்புவதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். குறிப்பாக இரட்டை நாக்கு ராஜபக்ச விடயத்தில். ‘என்னை ஜனாதிபதியாக்குங்கள். நீங்கள் வேண்டியதைத் தருகிறேன்’ என்று விடுதலைப் புலிகளுக்கும், “போரை முடித்துத் தாருங்கள், தமிழர் விரும்பியதைக் கொடுக்கிறேன்” என்று வெளிநாடுகளுக்கும், ‘என்னை ஜனாதிபதியாக்குங்கள் பயங்கரவாதிகளை ஒழித்துக் காட்டுகிறேன்’ என்று சிங்கள மக்களுக்கும் பேசிவந்த மஹிந்தவுக்கு உண்மையில் இரண்டு நாக்குகள் இருந்தனவென்பதைப் பொதுசனங்கள் இப்போதுதான் உணர்ந்திருக்கிறார்கள். மஹிந்த பிடிபட்டுவிட்டார். இனி அவர் இடத்தைக் காலிபண்ண வேண்டியது தான் என்பதைத் தம்பி கோதாபய முடிவெடுத்துவிட்டார். காத்துவாக்கில வந்தது.
வியாழனன்று (ஏப்ரல் 28) மோடர் கூடத்தை – அதுதான் மொட்டுக் கட்சியின் மோட்டுப் பங்காளிகள் – அவசரம் அவசரமாக அழைத்து கோதாபய பேசியிருந்தார். அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசப் போவதாகவே முதலில் செய்தி வந்தது. ஆனால் தமக்குத் தனியாகத் தரிசனம் தரவேண்டுமென்று மோடர் கூடம் அடம்பிடித்ததால் அவர்களை ஜனாதிபதி முதலில் சந்தித்தாராம். இதன் முடிவில் “நாட்டின் நன்மை கருதி சர்வகட்சி ஆட்சியொன்றை ஜனாதிபதி அமைக்கவிருக்கிறார். அப்படி அமையப்போகும் அரசுக்கு என்னையே பிரதமர் ஆக்குவதாக ஜனாதிபதி தீர்மானித்திருக்கிறார்” என சிறிசேன கூறியதாகக் காத்துவாக்கில வந்தது. ஆனால் இதர மோடர்கள் இதுபற்றி வாய் திறக்கவில்லை. கொதித்தெழுந்த மஹிந்தர் “நான் பதவியை விட்டு ஒரு போதும் விலகப் போவதுமில்லை. விலகும்படி என்னை ஒருவரும் கேட்கப்போவதுமில்லை” என்று வழமையான திமிருடன் ஓலமிட்டார். இதைத் தொடர்ந்து “விரைவில் அதிர்ச்சி தரும் முடிவொன்றை நான் எடுக்கப் போகிறேன்” என கோதாபயர் மறுத்தான் விட்டார். முடிவில், “ஜனாதிபதி தம்பி என்ன முடிவை எடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்ளத் தயார்” என இப்போது மஹிந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டாராம். காத்துவாக்கில வந்தது.
‘ஜனாதிபதி பதவி விலகவேண்டும்’ என்று நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓலமிட்டுக்கொண்டிருக்கும்போது மஹிந்தரை வீட்டுக்கு அனுப்புவதால் என்ன பிரயோசனம் எனத் திருவாட்டி மொதுமகள் கேட்கலாம். அதுவே ‘பிரித்து’ ஓதியவர்களின் மகிமை. ஆரம்பத்தில் கோதாபயவை வீட்டுக்கு அனுப்பவேண்டுமென ஓலமிட்டு வந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் கடந்த சில நாட்களாக மஹிந்தரின் அலரிமாளிகையின் முன்னால் முகாமிட்டுக்கொண்டு ‘MynaGoHome’ என்ற புதிய முழக்கத்தை ஓதிக்கொண்டிருந்தார்கள். இதை மூழ்கடிக்க மஹிந்தர் தனது காவற்படையான மஹா சங்கிகளை அழைத்து ஒலிபெருக்கிகளின் துணையோடு இரவு பகலாக ‘பிரித்’ ஓதி வருகிறார். அத்தோடு முட்கள் பதித்த கம்பளங்களை இரும்பு வேலிகளில் தொங்கவிட்டு பாகுபலி சாகசங்களையும் செய்துவருகிறார்.
ராஜபக்ச மூவரசர்களிலும் மேல்மாடி கொஞம் குறைந்தவர் எனப்படுபவர் கோதாபயர். அதை அவரே ஒப்புக்கொண்டுமிருக்கிறார். இதனால் அவர் அதிகம் பேசி மாட்டிக்கொள்வதில்லை. மஹிந்தர் தன்னை மாட்டிய முதலாவது நாக்கை இரண்டாவது நாக்கினால் அவிழ்த்துக்கொள்ளக்கூடியவர். பசிலர் ஒருதரம் மாட்டிவிட்டால் ஓடி ஒளிந்து கொள்பவர். அவர் நிதியமைச்சராக வந்ததும் டெய்லி மிரர் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டி இவரது வண்டவாளத்தை உடைத்துப் போட்டது. அத்துடன் ஓடியவர் மீண்டும் வரவேயில்லை. மஹிந்தர் தனது புதுவருடச் செய்தியில் ‘ஆர்ப்பாட்டக்காரர் தனது எதிரிகள்’ எனப் பறைசாற்றினார். அவர்களை இயக்குபவர்கள் வெளிநாட்டுத் தமிழர் என அவரது ஒரு நாக்கு விஷத்தைக் கக்கியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘தமிழர்கள்’ என்பதை அவர் மக்கள் மனதில் இறுக்க முயற்சிக்கிறார். மீண்டுமொரு இனக்கலவரத்தை உருவாக்கினால் தாம் தப்பிவிடலாம் என அவர் கனவு காண்கிறார். அதற்கான பொறி ஒன்றும் தெரிப்பதாக இல்லை. ஏமாற்றமடைந்த அவர் இப்போது மஹா சங்கிகளிடம் தஞ்சமடைந்திருக்கிறார். வழக்கமான மஹாவம்ச playbook.
அதிகாரங்கள் முழுவதும் ஜனாதிபதியிடமிருக்கும்போது பிரதமரை மாற்றுவதானால் என்ன பிரயோசனம் என அறிவுள்ள, என்னையும் உங்களையும் போல, ஒருவர் கேட்கலாம். மோடரான ஒரு சகோதரருக்கு அதிகாரங்களைக் கொடுத்திருந்தாலும் அவற்றை இதுவரை பாவித்து / அனுபவித்து வந்தவர் மஹிந்தர். மஹிந்தரின் சகல திருகுதாளங்களையும் தம்பி என்ற முறையில் சகித்துவந்தவர் கோதா. நாட்டை இந்த நிலைக்குக் கொண்டுவருவதற்குக் காரணமான, அண்ணர் தம்பி முதல் அஜித் நிவாட் கப்ரால், பி.பி.ஜயசுந்தர வரை அனைவரும் கோதாபயரின் ‘இயலாமையை’ முதலீடுகளாக்கியவர்கள். இவர்கள் சுற்றிவர இல்லாத நிலைமையில் கோதாபயருக்கு உண்மை விளங்கியிருக்கிறது அல்லது விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. மகா சங்கிகளிடம் நேரடியாகப் போகாமல் கோதாபயர் கடிதங்கள் மூலம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறார். ஆனால் அலரிமாளிகையிலோ ‘பிரித்’ வெளுத்து வாங்குகிறது. இதுவே மகா சங்கிகளின் கடைசி முயற்சியாகவும் இருக்கலாம். கோதாபயர் ஞானா அக்காவிடம் தஞ்சம் அடைந்திருக்கலாம். முடிவு இப்போது எடுக்கப்பட்டிருக்கிறது. அது ‘பிரதமர் மாற்றம்’. ‘பிரித்’தையும் பிரித்துக்கொண்டு அது காத்துவாக்கில் அலரிமாளிகையை எட்டிவிட்டது. மஹிந்தர் சோர்ந்துவிட்டார்.
இதற்குள் இந்திய சங்கிகள் புகுந்து விளையாடவில்லை எனக் கூறுவதற்கு ஆதாரங்கள் அதிகமில்லை. மஹிந்தரின் தலை எப்போதும் சீனா பக்கம் தான். சீனாவினால் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து கட்டுமானத் திட்டங்கள் மூலமும் நிரம்பக் கறந்தவர் மஹிந்தர். அவரை அகற்றுதில் இந்தியா இரவுபகலாக உழைத்திருக்க வாய்ப்புண்டு. அதில் கொஞ்சம் வெற்றியைப் பெற்றுவிட்டதாக இந்தியா நினைக்கலாம். கோதாபயரை வைத்துக்கொண்டு மஹிந்தரை வீட்டுக்கு அனுப்புவதன் மூலம் நிறையச் சாதிக்க முடியும். அதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையுடன் கூடிய கோதாபய என்ற மோடரும் அதற்கு வேண்டும். புதிய ‘பிரதமரின்’ கீழ் புதிய அரசாங்கம் அமைவது கோதாவுக்குக் கொஞ்ச கால அவகாசத்தைப் பெற்றுத் தரும். அதற்குள் இந்திய நிவாரணத்தாலும், சர்வதேச நாணைய நிதியத்தாலும் இலங்கை மக்கள் ‘காப்பாற்றப்படுவார்கள்’. அதற்குப் பிறகு ஆர்ப்பாட்டக்காரரும் சலித்துப் போய் வீடேகுவார்கள் என்ற ‘பிரித்’ இந்திய சங்கிகளால் ஓதப்படலாம்.
இப்போதுள்ள நிலையில் பலமான எதிர்க்கட்சி ஒன்றில்லை. சஜித் போன்ற ஒரு ‘சலவைத்தொழிலாளி’ கையில் ஆட்சியைக் கொடுக்க சர்வதேச தரகர் ரணில் விக்கிரமசிங்க ஒத்துக்கொள்ளப் போவதில்லை. அதற்குப் பதில் ராஜபக்சக்களிடம் மீண்டும் ஆட்சி ஒப்படைக்கப்படுவதையே அவர் விரும்புவார். ஜே.வி.பி. இன்னும் தன் அரிவாள் சுத்தியல்களை விட்டுவரத் தயாரில்லை. அதன் இந்திய எதிர்ப்பு தமிழினத் துவேசம் என்ற நாணய்த்தின் மறுபக்கம். எனவே இந்தியா இந்த இரண்டு தரப்புடனும் சமரசம் செய்யத் தயாரில்லை. அதைவிட மோடர் கோதாபயரே அதற்குப் போதுமானது. எனவே அவரைப் பதவியிலிருந்து இறக்குவதற்கான எந்த அவசியமும் இந்தியாவுக்கு இப்போதைக்கு இல்லை. எனவே மஹிந்தரே fall guy. நியாயமானதும்கூட.
இந்த நிலையில் மஹிந்தருக்கு டாட்டா காட்ட விரும்புபவர்கள் #Myna GoHome வரிசையில் சேர்ந்துகொள்ளுங்கள்.