Spread the love
11,000 விஞ்ஞானிகள் பொய் சொல்வார்களா?
மாயமான்

விஞ்ஞானிகளுக்கு ஒரு கடமையிருக்கிறது. அவர்களது முன்னோர் சீரழித்த உலகைத் திரும்பவும் இயற்கையிடம் கையளிப்பதற்கு. அவகாசமிருக்கிறதோ தெரியவில்லை, ஆனாலும் முயற்ச்சிக்கிறார்கள்.

காத்திருக்க மறுக்கும் காலநிலை 1
பூமியைக் காப்பற்றப் புறப்பட்டவர்கள்

“உண்மையை உண்மையாய்ச் சொல்லுங்கள்” எனப் பணித்திருக்கிறது ‘உயிர் விஞ்ஞானம்’ (BioScience) சஞ்சிகை. அதில் 153 நாடுகளிலிருந்து 11,258 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டிருக்கிறார்கள். “பூமி அதிக காலம் வாழப்போவதில்லை, ஏதாவது செயய்யுங்கள். இது ஒரு காலநிலை அவசரம்” எனக் குரலெழுப்புகிறது.

பூமி மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது என்பதைப் பழமைவாதிகளைத் தவிர மற்றெல்லோரும் உணர்கிறார்கள். ஆனால் ஒரு சில செயற்பாட்டாளர்களே அதைக் காப்பாற்ற வெண்டுமென்று துடிக்கிறார்கள். அந்த ஒரு சிலரின் முயற்சியால்தான் உலகம் கூடிக் கதைக்கிறது.

அவர்கள் கூடிக் கதைத்த முதலாவது உலகச் சூழல் மாநாடு 1979இல் நடந்தது. அதிலிருந்து தொடர்ந்து கூக்குரலிட்டு வருகின்றார்கள். நாற்பது வருடங்கள் கழித்து இப்போதுதான் இத்தனை விஞ்ஞானிகள் கூடி நின்று கூக்குரலிடுகின்றார்கள். Better late than never.

நியூ யோர்க் நகராட்சியிலிருந்து ஐக்கிய இராச்சிய அரசுவரை பல அரசாங்கங்கள் பிரகடனம் செய்திருக்கின்றன. இன்னும் பல பிரபலங்கள் இணைந்துகொள்ள வெண்டுமென்று இவ் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றார்கள். உடனே செயற்படவேண்டிய அவசியம் பற்றி அவர்கள் ஆதாரங்களுக்கு மேல் ஆதாரங்களோடு கூறுவதற்குக் காத்திருக்கிறார்கள்.

சமூகத்தின் பிணிகளை அவர்கள் தரவுகளோடு பட்டியலிடுகிறார்கள். அதிகரிக்கும் புலாலுண்ணல், கரியெரிபொருட் பாவனை, கடல் நீர் அமிலமாதல், காடுகளெரிதல் என்று பல பிணிகள் முன்நிலைப் படுத்தப்படுகின்றன. பழமைவாதிகளுக்கு அதில் நம்பிக்கையில்லை. பாடசாலைகளையும், நூல் நிலையங்களையும் மூடுமளவுக்கு கல்மனம் கொண்டவர்களிடம் வேறெதை எதிர்பார்ப்பது?

பூமியைக் காப்பாற்ற 6 படிநிலை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென விஞ்ஞானிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

  • வலுவுற்பத்திக்கு கரியெரிபொருளில் தங்கியிருப்பதை விடுத்து மீள்பாவனை வலுவைப் (renewable energy) பாவிக்கும் உத்திகளைக் கையாளுதல், பெருமளவில் வலுச் சேமிப்பிற்கான (energy saving) நடைமுறைகளைக் கையாள்ளுதல்
  • மீதேன், கருங் கரி (Black Carbon) போன்ற கால நிலையில் குறுங்காலப் பாதிப்புக்களைத் தரும் மாசுகளைக் குறைத்தல்
  • மாந்தோப்புகள் முதல் புற்தரை வரையில் இயற்கையைப் புதுப்பித்தல் மூலம் கரியமிலவாயுவை (CO2)த் தனிமைப்படுத்தல்
  • புலாலுண்ணுதலைக் குறைத்தல், உணவு வீணாக்குதலைத் தவிர்த்தல்
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) மனித மேம்பாட்டின் அளவுகோலாகக் கொள்ளாது, மனித நலத்தையே முன்னிலைப்படுத்தும் கரியற்ற (carbon-free) பொருளாதாரத்துக்கு மாறுதல்
  • நற் கல்வி மூலம் உலகம் முழுவதும் இளம் பெண்கள் சனப் பெருக்கம் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ள வசதி செய்தலும், குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமாக பெண்களுக்கு இயன்றளவு உதவிகளைச் செய்துகொடுத்தலும்

தனித் தனியாக இவையொன்றும் புதிய விடயங்களேயல்லவெனினும் மாற்றத்துக்கான ஒரு முழுமையான அணுகுமுறையைத் தருவதன் மூலம் காலநிலை மாற்றத்துக்கான அடிப்படைக் காரணியான கரியமில வாயு எப்படி சாதாரண வாழ்வுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவருவதே இதன் நோக்கம் என அவ் விஞ்ஞானிகளின் பேச்சாளரான றிப்பிள் கூறுகிறார்.

Print Friendly, PDF & Email
Related:  வேதராஜன் பாலாஜி | சதுப்பு நிலப் பேணலுக்கான ஒரு தனி மனிதனின் பயணம்