Sri Lanka

காணி விடுவிப்பு பற்றி விசேட சந்திப்பு

உரிமைப்பத்திரங்களை வைத்திருக்கும் வெளிநாடுகளில் வாழும் காணிகளின் உரிமையாளர்களும் விண்ணப்பிக்கலாம்.

செப்டம்பர் 13, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவின் காணி விடுவிப்புத் திட்டத்தின் முதற் கட்டமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் அரசினால் கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிப்பதற்காக ஆளுனர் சுரேன் ராகவன் தலைமையில் சந்திப்பொன்று நேற்று (12) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பில் ஆயுதப்படைகளின் அதிகாரிகள், காவற்துறை அதிகாரிகள், காணி அமைச்சு அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலானந்தன், ஷாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் சிறீதரன் சிவஞானம் ஆகியோர் பங்குபற்றினர்.

இச் சந்திப்பின்போது, வடமாகாணத்திலுள்ள ஒவ்வொரு பாதுகாப்பு படைகளின் பிரிவுகளிலும் தனித் தனியே பிரத்தியேகமான குழுக்களை அமைத்து படைகளின் வசமிருக்கும் தனியார் காணிகளை அடையாளப்படுத்துமாறு ஆளுனர் பணித்தார்.

அதே வேளை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களது காணிகளுக்கு உரிமைப் பத்திரங்கள் இருந்தால் அவற்றைச் சமர்ப்பிக்கும்படியும் ஆளுனர் கேட்டுக் கொண்டார். இதற்கான விண்ணப்பப் பத்திரங்களை வட மாகாணசபை இணையத்தளத்தில் np.gov.lk பெற்றுக்கொள்ளலாம்.

இச் சந்திப்பின் தொடர்ச்சியாக, கிளினொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் காணி விடுவிப்பு தொடர்பான இரண்டாவது கூட்டமொன்று புதிதாக அமைக்கப்பட்ட குழுக்களுடன் செப்டம்பர் 26 இல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி விடுவிப்பு சம்பந்தமான கலந்துரையாடல் இம் மாத்ம் 14ம் திகதி, யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மூன்றாவது கட்டமாக, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள காணிகள் விடுவிப்பு பற்றிய கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.