காணி விடுவிப்பு பற்றிய முடிவு 2018 இல் எடுக்கப்பட்டது – த.தே.கூட்டமைப்பு
அறிவிக்கப்பட்டபடி 14 அரசியல் கைதிகளுக்குப் பதிலாக 2 பேருக்கு மட்டுமே மன்னிப்பு வழங்கப்பட்டது
சுதந்திர நாளை முன்னிட்டு 108 ஏக்கர்கள் காணிகள் விடுவிக்கப்படும் என நேற்று (02) விடுக்கப்பட்ட ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தீர்மானம் 2018 இலேயே எடுக்கப்பட்ட ஒன்று எனவும் இக்காணிகளிலிருந்து இராணுவம் எப்போதோ வெளியேறியிருந்தும் ஆட்சி மாற்றம் காரணமாக காணிகள் உரியவர்களிடம் கையளிக்கப்படாமல் இழுபறியில் இருந்து வந்ததெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
“இக் காணிகள் இப்போதுதான் மக்களிடம் கையளிக்கப்படுகின்றன. புதிதாக எதுவும் கையளிக்கப்படவில்லை. இது 2019 இல் நடைபெற்றிருக்க வேண்டும். இருப்பினும் நாம் அதை வரவேற்கிறோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த திரு. சுமந்திரன் “ஆரம்பத்தில் 14 பேருக்குப் பொதுமன்னிப்பு வழங்குவதென வாக்களித்திருந்த ஜனாதிபதி தற்போது இரண்டு பேரை மட்டுமே விடுதலை செய்வதாக அறிவித்திருக்கிறார். மொத்தமாக 31 அரசியல் கைதிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 பேரை விடுவிக்கப்போவதாகக் கூறினார்கள். இவர்களில் 5 பேரை டிசம்பர் 22 அன்று விடுதலை செய்வதாக உறுதிகூறப்பட்டது. தற்போது இரண்டுபேரை மட்டுமே விடுதலை செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்றுமுகமாக நாளை (04) நடைபெறவிருக்கும் சுதந்திர நாட் கொண்டாட்டங்களுக்கு முன்பதாக, வடக்கில் இராணுவம் வசமிருக்கும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 108 ஏக்கர் காணிகளை விடுவிக்கப்போவதாகவும் அவற்றை 197 குடும்பங்களுக்குப் பிரித்து வழங்கவுள்ளதாகவும் அத்தோடு இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளார்கள் எனவும் நேற்று (02) ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. ஆனால் இவ்விருவரின் விடுதலையும் சுதந்திர நாள் பொதுமன்னிப்பு இல்லை, மாறாக இது விசேட பொது மன்னிப்பு என சிறைச்சாலை ஆனையாளர் சந்தன ஏகநாயக்கா தெரிவித்ததாக ‘தி மோர்ணிங்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.