World

“காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வழி செய்வேன்” – லண்டனில் அண்ணாமலை

1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதே இந்திய அரசின் நிலைப்பாடு. இது நான் சொல்லவேண்டியதின் அரைவாசி மட்டுமே. மீதியை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். தமிழரின் அரசியல் உரிமைகள் சிறிது சிறிதாகவே பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை

“2009 இல் ஈழத் தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களை நான் ஒருபோதும் மறவேன். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழருக்கான தீர்வொன்றை எந்த வகையிலாவது பெற்றுத் தருவார்” என நேற்று முந்தினம் மேற்கு லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். மேற்கு லண்டன், ஃபெல்தாமிலுள்ள நட்சத்திர மண்டபத்தில் குளோபல் தமிழ் சிவில் சொசையெட்டி என்னும் அமைப்பினால் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

“ஈழத் தமிழரும், மலையகத் தமிழரும் மிகவும் மோசமாகப் பாதிகப்பட்டிருகிறார்கள். உலக நாடுகளின் அரசியல் சதுரங்கப் போட்டியில் அவர்கள் காய்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். 2023 இல் 200 வருடங்களைக் கடக்கும் மலையகத் தமிழர் இலங்கையில் மிகவும் குறைந்த படிப்பறிவையும், வறுமை நிலையையும் கொண்டிருப்பவர்கள். இந்தியாவில் மிக நீண்ட காலமாக முகாம்களில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அகதிகள் எந்தத் தவறுகளையும் செய்தவர்களல்ல. அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான காலம் கனிந்துவிட்டது .

“2009 இல் இந்தியா கொஞ்சம் முன்னதாகவே செயற்பட்டு போரைத் தடுத்திருக்க முடியும். அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்த திரு. மோடி மே 10, 2009 நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது “எனது சகோதர சகோதரிகள் படுகொலை செய்யப்படும்போது இந்திய அரசாங்கம் என்ன செய்துகொண்டிருக்கிறது” எனக் கேள்வியெழுப்பியவர்.

“2014 இல் திரு மோடி ஆட்சிக்கு வந்ததும் நிலைமை மாறிவிட்டது. அவர் தமிழ்நாட்டு மக்களுக்கும் வட-கிழக்கு மக்களுக்குமிடையே ஒரு உறவுப் பாலத்தை உருவாக்க முயற்சிக்கிறார். தமிழ்நாட்டுக்கும் பலாலிக்குமிடையே விமான சேவையையும், காரைக்கால் – காங்கேசன்துறை, தமிழ்நாடு-மன்னார் துறைகளிடையே மிதவைப் படகுச் சேவைகளையையும் விஸ்தரிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அது மட்டுமல்லாது யாழ்ப்பாணம் சென்று மலையகத் தமிழரைச் சந்தித்த ஒரே ஒரு உலகத் தலைவர் திரு மோடி தான்.

“1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதே இந்திய அரசின் நிலைப்பாடு. இது நான் சொல்லவேண்டியதின் அரைவாசி மட்டுமே. மீதியை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். தமிழரின் அரசியல் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாகவே பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

“இலங்கை இப்போது அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் நலிந்துபோன நிலையில் இருக்கிறது. அதன் சவால்கள் ஏராளம். முள்ளில் போட்ட சீலை மாதிரியே அதன் நிலை. அவசரப்பட்டு, செப்பனிடமுடியாத உடைவைச் செய்யாமல் கொஞ்சம் கவனமாகவே அதைக் கையாள வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்தார். (படங்கள்: Tamil Guardian)