காணி அபகரிப்பு வழக்கில் தமிழ் வழக்கறிஞர் குழுவுக்குத் தற்காலிக வெற்றி
மிக நீண்ட காலமாகத் தமிழர்களால் பாவிக்கப்பட்டுவந்த அரசுக்குச் சொந்தமான நிலங்களை அரசாங்கத்தினால் அபகரிக்கப்படும் நிகழ்வுகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க தமிழ் வழக்கறிஞர்கள் பலர் இணைந்து ஒரு வக்காலத்துக்குழுவை (advocacy group) உருவாக்கியுள்ளனர்.
பா.உ. திரு எம்.ஏ.சுமந்திரன், றொஷாந்தினி உதயகுமார், கேசவன் சயந்தன் உள்ளிட்ட 27 தமிழ் வழக்கறிஞர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ள அமைப்பு ஏற்கெனவே காணிகளைப் பறிகொடுத்த தமிழர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்திருந்தார்கள்.
திருகோணமலையில் பொதுமக்கள் பாவித்துவந்த காணிகளை அரசாங்கம் சுவீகரித்ததை எதிர்த்து இருவர் சார்பில் வழக்கறிஞர் றொஷாந்தினி உதயகுமார் திருகோணமலை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இதே போன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் தமிழரசுக் கட்சி அங்கத்தவருமான கேசவன் சயந்தன் இன்னுமொருவருக்காக ஆஜராகியிருந்தார்.
திருகோணமலை, குச்சவெளி பிரதேச சபைப் பிரிவிலுள்ள காணியொன்றைப் புத்த கோவில் ஒன்றைக் கட்டுவதற்காக அரசாங்கம் சுவீகரித்திருந்தது. தமிழ் மக்கள் நீண்டகாலமாகப் பயிர்செய்து வந்த இந்த 354 ஏக்கர் நெற்காணியை அபகரித்தது தவறு எனச் சுட்டிக்காட்டி இவ் வழக்கறிஞர்கள் திருகோணமலை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று (நவ. 10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ் வழக்கை விசாரித்த நீதிபதி எம்.இளஞ்செழியன் அரசாங்கத்தின் காணிச் சுவீகரிப்பிற்குத் தற்காலிகத் தடை விதித்ததுடன், வழக்குத் தொடுத்தவர்கள் தமது நிலங்களுக்குச் செல்வதற்கு அரசாங்கம் விதித்த தடையை நீக்கியதுடன் அவர்கள் தமது காணிகளுக்குள் செவதை எவரும் தடுக்கக்கூடாது எனவும், புத்த கோவிலுக்கு இக் காணி வழங்கப்படுதை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.