Sri Lanka

காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதைத் தெரியப்படுத்த அரசு காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஐ.நா. ஆணையர் அலுவலகம்

இறுதிப்போரின்போது காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு என்ன நடந்தது, இருக்கிறார்களா இல்லையா என்பது தொடர்பாக இலங்கை அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து விபரங்களை வெளியிடவேண்டும். அத்தோடு இதற்குப் பொறுப்பானவர்களெனக் கருதும் பாதுகாப்பு படையினர் மற்றும் துணை இராணுவக்குழுவினரைக் கண்டுபிடித்து விபரங்களை அறிவிக்கவேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமெனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் மே 17 அன்று வெளியிட்ட அறிக்கை மூலம் இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

“காணாமலாக்கப்பட்ட இலங்கை மக்கள் ஒருவரையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவர்களது குடும்பங்களும் அவர்களை நேசிப்பவர்களும் அவர்களை எதிர்பார்த்து நீண்டகாலமாக ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. இக்குற்றங்கள் பூரண விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு உண்மைகள் அறிவிக்கப்படவேண்டும்” என ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையர் திரு ஃபோக்கெர் ரேர்க் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்ட காணாமலாக்கப்படுதலிலிருந்து அனைத்து மக்களையும் காப்பாற்றுவோம் என்ற சர்வதேச பட்டயத்தில் கையெழுத்திட்டமை, காணாமற் போனோருக்கான அலுவலகம் மற்றும் நிவாரணம் வழங்கும் அலுவலகம் போன்ற சில செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் காணாமலாக்கப்பட்ட தனிப்பட்டோர் தொடர்பாக காத்திரமாக இதுவரை எதுவுமே செய்யப்படவில்லை என்பது துர்ப்பாக்கியம் என அவ்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

1970 முதல் 2009 வரையில் பெரும்பாலும் இலங்கையின் பாதுகாப்புப் படைகளாலும் அவர்களோடு இணைந்தியங்கும் துணைப்படையினராலும் பரவலாக மக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். தனிப்பாட்டவர்களும், மக்கள் குழுக்களும் இவ்விடயம் தொடர்பாக மனித உரிமைகள் சபை அலுவலர்களால் செவ்விகாணப்பட்டிருந்தார்கள் எனவும் இதன்போது பெறப்பட்ட தகவல்களின்படி பெரும்பாலான காணாமலாக்கப்பட்டவர்கள் ஆண்கள் என்றும் இதனால் பெண்களே குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்கத் தள்ளப்பட்டார்கள் எனவும் இவர்களே பாதுகாப்பு படையினரின் துன்புறுத்தல்களுக்கும், பாலியல் தொல்லைகளுக்கும் தொடர்ச்சியாக உட்படுத்தப்பட்டார்கள் என்றும் அறியப்படுகிறது.

மக்கள் காணாமலாக்கபட்டு ஏறத்தாழ் 32 வருடங்கள் ஆகியும் வெகு சிலர் பற்றிய முடிவுகளே எய்தப்பட்டன அப்படியிருந்தும் அம்முடிவுகள் பிரசுரிக்கப்படவில்லை எனவும் இதில் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இன்னமும் சேவையில் உள்ளார்கள் எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களின்படி காணாமலாக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக ஒரு நாடு விசாரணைகளை மேற்கொண்டு தனது முடிவுகளை அறிவிக்காத பட்சத்தில் அந்நாடு இக்குற்றங்களைப் புரிந்துகொண்டிருக்கிறது என்றே கருதப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.