Sri Lanka

காணாமலாக்கப்பட்டவர்கள்: வழக்குப் பதியும்படி சர்வதேச நாடுகளிடம் ஐ.நா. கோரிக்கை

போர் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூரும் விடயத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டும், கைதுசெய்யப்பட்டும் வருவதை முன்னிட்டு சர்வதேச தலையீடு அவசையம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மே 23 அன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதே வேளை இலங்கை விடயத்தில் சர்வதேச தலையீடு தேவை என மே 17, 2024 அன்று ஐ.நா. மனித உரிமைகள் சபையும் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.

“போரின் போது தனது படைகள் புரிந்த அட்டூழியங்களை இலங்கை அரச படைகள் இதுவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவருவதோடு அவர்களுக்கு நீதியையும், பொறுப்புக்கூறலையும், நட்டஈடுகளையும் வழங்குவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது சமூகங்களையும் மிரட்டுவதன் மூலம் உண்மைகளை அவர்கள் சொல்லவிடாது தடுத்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுத்தர சர்வதேச தலையீடு ஒன்றினால் மாத்திரமே முடியும் என்பது இப்போது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் எலெய்ன் பியர்சன் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் மே 18 நினைவு கூரலுக்கு முன்பாகவே இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பொலிசார் நினைவுகூரல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முயற்சிகளை எடுத்திருந்தனர். திருகோணமலையில் கஞ்சி வழங்கியமைக்காக பொலிசாரால் நான்கு தமிழர்கள் ஏழு நாட்களுக்குத் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அத்தோடு காணாமலாக்கப்பட்டோரது உறவினர் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாதவாறு தடுக்கும் வகையில் நீதிமன்ற ஆணைகளையும் பொலிசார் பெற்றிருந்தனர். சில இடங்களில் நிகழ்வுகளுக்குச் செல்லும் மக்களைத் தடுத்தும் துன்புறுத்தியும் நிகழ்வுகளைக் குழப்பியும் செயலாற்றியிருந்தனர்.

எதிர்கால வழக்காடும் நோக்கத்தோடு இலங்கையில் நடைபெற்றதாகக் கருதப்படும் சர்வதேச குற்றங்களுக்கான ஆதாரங்களைத் திரட்டும் பணி 2021 இல் ஐ.நா. வினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இப்பணியின் முதலாவது அறிக்கை இவ்வருடம் மே 17 அன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. இதில் “போர் முடிந்து 15 வருடங்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் சார்பாக குறிப்பிடக்கூடியதாக எதுவித முன்னேற்றமும் காணப்படவில்லை என்பதோடு இவ்வட்டூழியங்கள் மீண்டும் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் உண்டு” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“பொறுக்குக்கூறல் திட்டம்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா.வின் ஆதாரத் திரட்டு முயற்சிகளின் பெறுபேறாக ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் ” பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், உண்மையும், நிவாரணமும் வழங்கப்படவேண்டுமென இலங்கை அரசுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், சர்வதேச நீதிபரிபாலன (Universal Jurisdiction) நியமங்களை அனுசரிக்கும் வகையில் இலங்கை மீது சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்பதோடு இலக்குவைக்கப்பட்ட பொருளாதார / பயணத் தடைகளை அறிவிக்கவேண்டும்” என அவ்வறிக்கை மூலம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிபரிபாலன நியமங்களின்படி எந்த ஒரு தனிப்பட்டவரும் சர்வதேச குற்றங்களைப் புரிந்தவரென நிறுவப்பட்டால் அவர் மீது எந்தவொரு நாடும் வழக்குத் தொடர அனுமதியுண்டு. உதாரணமாக கோதாபய ராஜபக்ச போர்க்குற்றங்களைப் புரிந்தமையை ஆதாரங்களுடன் நிரூபிக்கும் பட்சத்தில் அவரைக் கைதுசெய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு உண்டு. ஆனால் இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக இதுவரை எந்தவொரு நாடும் இக்குற்றங்களைப் புரிந்தவர்கள் எநக்கருதப்படும் எவர் மீதும் பிடியாணையை அறிவிக்கவில்லை. ஆனாலும் பல நாடுகளிலிருந்து வழக்குத் தொடுநர்கள் இக்குற்றவாளிகள் மீதான ஆதாரங்களைத் தருமாறு கேட்டு ‘பொறுப்புக்கூறல் திட்ட’ அலுவகத்தைத் தொடர்புகொண்டுவருகிறார்கள் என அவ்வலுவலகம் கூறியிருக்கிறது.

1970 களிலிருந்து இலங்கையில் பல்லாயிரக் கணக்கானோர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் இவர்களில் 90 வீதமானோரை அரச பாதுகாப்புப் படைகளே கடத்தியிருக்கின்றனர் எனவும் பரவலாக நம்பப்படுகிறது. 1988 முதல் 1990 வரையில் 27,000 பேர் வரை காணாமலாக்கப்பட்டிருந்தனர் என இலங்கை அரசாங்கமே ஒத்துக்கொண்டிருக்கிறது. இவர்களில் ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மற்றும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் அடங்குவர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட ‘பொறுப்புக்கூறல் திட்ட’ அறிக்கையின் பரிந்துரைப்புக்களை இலங்கை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டுமென மனித உரிமைகள் காப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் எலெய்ன் பியர்சமன் கோரிக்கை விடுத்துள்ளார். (Image Source: Eranga Jayawardena/AP Photo)