News & AnalysisSri Lanka

காணாமற் போனவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர் – அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா

இலங்கையில் காணாமற்போனதாகக் கூறப்படுபவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வேறு பெயர்களில் வாழ்கின்றனர் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தநா தெரிவித்துள்ளார்.

“இவர்கள் மாற்றுப் பயண வழிகள் மூலம் நாட்டைவிட்டுத் தப்பியோடி வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். காணாமற் போனதாகக் கூறப்படும் நூறுக்கணக்கானவர்கள் புதிய பெயர்களில் வேறுநாடுகளில் வாழ்ந்துவருவதை நிரூபிக்க எங்களிடம் ஆதாரங்களுண்டு. இவர்களுக்கு அபயம் கொடுத்த நாடுகள் பல அவர்களைப் பற்றிய தகவல்களைத் தர மறுக்கின்றன. இலங்கையுடன் பரஸ்பர ஒப்பந்தங்களைச் செய்த நாடுகள் மட்டுமே சட்டப்படி இவ்விடயங்களைப் பரிமாற முடியும்” என அமைச்சர் குணவர்த்தனா தெரிவித்தார்.

“அதே வேளை, காணாமற் போனோர் பட்டியலை வைத்துக்கொண்டு பல மனித உரிமை அமைப்புக்களும் தொண்டு நிறுவனங்களும் சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கு எதிராக கேள்வியெழுப்புகிறார்கள். உண்மையில் காணாமற் போனவர்கள் என அவர்கள் குறிப்பிடும் நபர்கள் அவர்களது நாடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு “இல்லார் சான்றிதழ்களை” (Certificates of Absence) வழங்குவதன் மூலம் அக்குடும்பங்கள் நட்டஈடுகளைப் பெற வழிசெய்ய நாம் முயற்சித்தோம் இருப்பினும் அக் குடும்பங்கள் அதை நிராகரித்து “அரசாங்கம் காணாமற் போனவர்கள் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு அவர்கள் இறந்து போனார்களா அல்லது உயிரோடு இருக்கிறார்களா என்பதை நிரூபிக்க வேண்டும்” எனக் கோருகின்றனர். ஆனால் காணாமற் போனவர்களை அரசினால் கண்டுபிடிக்க முடியாதுள்ளது அதே வேளை அவர்கள் இறந்துபோனதற்கான நிரூபணமுமில்லை. அதனால் மரணச் சான்றிதழையும் எம்மால் கொடுக்க முடியாமலுள்ளது. 1988 இலிரிருந்து ‘காணாமற் போன’ பலர் கடந்த சில வருடங்களாக நாடு திரும்புகின்றனர். அவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கியிருந்தால் என்ன நடைபெற்றிருக்கும்?” என அமைச்சர் குணவர்த்தனா கேள்வியெழுப்பினார்.