World

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுவீச்சு – 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கலாம்

காசாவின் வட பகுதியில் அமைந்திருக்கும் அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசியதில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் செவ்வாய் அதிகாலை நடைபெற்ற இக்குண்டுத்தாக்குதலுக்கு தாம் பொறுப்பில்லை எனவும் காசாவிலுள்ள இன்னுமொரு போராளி அமைப்பான பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிஹாட் என்னும் அமைப்பின் ஏவுகணை தவறி முன்கூட்டியே வெடித்தமையே காரணம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இத் தாக்குதலுக்கு பல உலக நாடுகள் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தாலும் பிரான்ஸ் அதிபர் மக்றோனைத் தவிர ஏனைய மேற்குலக தலைவர்கள், கனடிய பிரதமர் உட்பட, தமது வருத்தங்களை மட்டுமே தெரிவித்துள்ளனர். இதுவரை எவரும் போர் நிறுத்தமொன்றுக்காக அழைப்பு விடுக்கவுமில்லை.

இஸ்ரேலிய படைகள் காசா மீது தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன்னர் தென் காசாவிலிருந்த சுமார் 1.1 மில்லியன் மக்களைப் பாதுகாப்பாக இடம் பெயரும்படி அறிவித்திருந்தது மட்டுமல்லாது அவர்கள் குறிப்பிட்ட மத்திய காசாவிலுள்ள பாதுகாப்பு பிரதேசத்தினுள்தான் குண்டுவீசப்பட்ட அல்-அஹ்லி மருத்துவமனை இருக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். இதனால் இக்குண்டு வீச்சில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலோர் உள்ளக இடம்பெயர்ந்தவர்களாவர். இம்மருத்துவமனை பப்டிஸ்ட் கிறிஸ்தவ மிசனரியினரால் நடத்தப்படும் ஒன்றாகும். இடம் பெயர்ந்த பெரும்பாலானோர் தங்குமிடமில்லாமையால் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்திருந்தனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடைபெற்ற இப்படுகொலைகள் போர்க்குற்றத்துக்குச் சமமானவை எனப் பல உலகத் தலைவர்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டித்து வருகின்றன. பெரும்பாலான அரபு, இஸ்லாமிய நாடுகள் தமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது உறுதியான ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு இஸ்ரேலுக்குப் பயணம் செய்திருந்தார். புறப்படுமுன்னர் கூட அவர் தனது X பதிவில் ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளக் கண்டித்ததுடன் இஸ்ரேலுக்கான தமது நட்பை வெளிப்படுத்தியிருந்தார். இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாகுவைச் சந்தித்த பின்னர் அவர் பாலஸ்தீனிய நிர்வாகத்தின் அதிபர் அபாஸ், ஜோர்தான் நாட்டின் மஹாராஜா அப்துல்லா ஆகியோரைச் சந்திப்பதாகவும் ஜோர்தானில் கூட்டப்படவிருந்த அரபு நாடுகளின் உச்சிமாநாட்டில் பைடன் பேசுவதாக இருந்தார் எனினும் குண்டு வெடிப்பின் காரணமாக எவரும் பைடனைச் சந்திக்க விரும்பவில்லை எனத் தெரிகிறது.

இஸ்ரேல் தரப்பு

அல் அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதல் பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிஹாட் அமைப்பினால் ஏவப்பட்ட ஏவுகணை தவறாகப் பயணம் செய்து மருத்துவமனையைத் தாக்கியது என இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார். இருப்பினும் இவ்வேவுகணை மருத்துவமனையை நேரடியாகத் தாக்கவில்லை எனவும் அருகேயிருந்த வாகனத் தரிப்பிடத்தில்விழுந்து வெடித்தது எனத் தமது வேவு விமானங்களின் பதிவுகளால் அறிந்துகொண்டதாகவும் இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் டானியல் ஹகாரி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதற்கு முன்னரும் பல தடவைகள் இஸ்ரேலிய தரப்பு பலவிதமான பொய்களைச் சொல்லித் தப்பிவந்திருக்கிறது எனவும் இதே போன்று கடந்த வருடம் இஸ்ரேலிய படையினர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட அல் ஜசீரா ஊடகவியலாளர் ஷ்றீன் அபு அக்லே விடயத்திலும் இஸ்ரேல் முதலில் மறுப்புத் தெரிவித்து அது ஹிஸ்பொல்லா படையினரால் மேற்கொள்ளப்பாட்டது எனப் பொய் கூறிப் பின்னர் உண்மையை ஒத்துக்கொண்டதையும் இஸ்லாமிக் ஜிஹாத் நினைவு படுத்தியிருக்கிறது.

முன்னெச்சரிக்கை

இதே வேளை மருத்துவமனையின் உயரதிகாரி ஒருவரது கருத்துப்படி சனிக்கிழமை மாலை இரண்டு இஸ்ரேலிய ஷெல் குண்டுகள் மருத்துவமனை மீது வீழ்ந்து வெடித்திருந்தன எனவும் அதற்கு மறுநாள் இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் மருத்துவமனைப் பணிப்பாளரை அழைத்து “நேற்று நாங்கள் இரண்டு ஷெல் குண்டுகளைப் போட்டு எச்சரித்திருக்கிறோம். நீங்கள் இவ்விடத்திலிருந்து நகரவேண்டும்” என எச்சரித்திருந்தார் எனவும் அறியப்படுகிறது.

ஐ.நா. வின் நிலைப்பாடு

ஆரம்பத்தில் ஐ.நா. சபை மெளனத்தைக் கடைப்ப்டித்திருந்தாலும் மருத்துவமனைப் படுகொலைகளின் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் குத்தரெஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஃபோக்கெர் ரேர்க் ஆகியோரது அறிக்கைகள் சற்று காட்டமானவையாக உள்ளன. “மருத்துவமனைகள் புனிதமானவை. இதற்குப் பொறுப்பானவர்கள் இனம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என ஆணையர் ரேர்க் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் கண்காணிப்பமைப்பு, அம்னெஸ்ரி இன்ரெர்நாஷனல் ஆகிய மனித உரிமை அமைப்புக்களும் இப் படுகொலைகளை வன்மையாகக் கண்டித்துள்ளன. (Image Credit: Dawood-Nemer / AFP)