UncategorizedWorld

காசா மருத்துவமனை குண்டுத்தாக்குதல்: பாலஸ்தீனிய ஏவுகணையால் ஏற்பட்டதல்ல – நிபுணர்கள்

தொலைபேசி உரையாடல் ‘வெட்டி ஒட்டப்பட்டது’

காசாவில் சில நாட்களின் முன்னர் நடைபெற்ற அல்-அஹ்லி மருத்துவமனைக் குண்டுத்தாக்குதல் குறி தப்பிய பாலஸ்தீனியர்களின் ஏவுகணையால் ஏற்பட்டது என இஸ்ரேல் தரப்பினால் கூறப்படுவதை நிரூபிக்க முடியாது என சம்பவத்தின் போது பெறப்பட்ட ஒலி (audio) மற்றும் ஒளி (video) பகுப்பாய்வுகளை மேற்கொண்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

போர்கள் நடைபெறும் இடங்களில் நடைபெறுவதாகக் கருதப்படும் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களை தீர ஆராய்ந்து ஆதாரங்களைத் திரட்டும் அரசு சாரா நிறுவனமான ‘இயர்ஷொட்’ (Earshot) என்னும் அமைப்பும், லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தடயவியல் ஆய்வுக்கான அமைப்பும் மேற்கொண்ட பகுப்பாய்வுகளின் காரணமாக இரு அமைப்புகளும் இம்முடிவை எட்டியுள்ளன.

கடந்த செவ்வாயன்று பப்டிஸ்ட் மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலின் காரணமாக 500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர் என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

மருத்துவமனைக் கட்டிடம் மீதான தாக்குதலுக்கு பாலஸ்தீனியர்களின் ஏவுகணையே காரணம் எனத் தமக்கு இரண்டு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக இஸ்ரேலிய தரப்பு கூறிவருகிறது. இவாதாரங்களில் ஒன்று கிழக்கிலிருந்து மேற்குநோக்கிய பாதையில் புறப்பட்ட பல பாலஸ்தீனிய ஏவுகணைகளில் ஒன்று பாதை மாறிப் போவதைக் காட்டும் காணொளிப்பதிவு மற்றது இஸ்ரேல் மீது ஏவப்பட்ட தமது ஏவுகணை ஒன்று தவறுதலாக இடையில் விழுந்து வெடித்துவிட்டதென இஸ்லாமிக் ஜிஹாட் போராளிகளிடையே இடம்பெற்ற உரையாடல் பதிவு.

இச் சம்பவம் பற்றி இஸ்ரேலிய அதிபர் பெஞ்சமின் நெட்டன்யாஹு செவ்வாயன்று சமூக ஊடகங்களில் தெரிவித்த கருத்துப்படி “காசா மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காட்டு மிராண்டிப் பயங்கரவாதிகளாலேயே மேர்கொல்ளப்பட்டது என்பதை முழு உலகமுமே அறிய வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.

இருப்பினும் ஏவுகணை வெடிப்புகள் பற்றிய காணொளிப் பதிவுகளை ஆராய்ந்த கட்டாரைத் தளமாகக் கொண்டால் ஜசீரா குழுவினரும் பிரித்தானிய ஊடகமான சனல்-4 இன் குழுவினரும் இஸ்ரேல் கூறுவதாகக் கருதப்படும் வானில் காணப்பட்ட பெருவெளிச்சம் பாலஸ்தீனிய ஏவுகணையை நடுவானில் இடைமறித்து அழித்த இஸ்ரேலிய பாதுகாப்பு அரணின் செயற்பாட்டின் விளைவு எனக் குறிப்பிட்டுள்ளன. ‘இரும்பு கூடாரம்’ என வர்ணிக்கப்படும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் ஏவுகணை மறிப்பு மருத்துவமனைக்கு மேல் நடைபெற்றிருக்கிறது என இவ்வூடகக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

அதே வேளை சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட இன்னுமொரு காணொளிப் பதிவை ஆராய்ந்த ‘இயர்ஷொட்’, மருத்துவமனையைத் தாக்கியதாகக் கருதப்படும் ஏவுகணை இஸ்ரேலிய தரப்பு கூறுவதைப் போல் மேற்கிலிருந்து புறப்படவில்லை எனவும் மாறாக வட-கிழக்கு அல்லது தென்-கிழக்கு திசையிலிருந்தே புறப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறது.

ஏவுகணை இஸ்ரேலின் திசையிலிருந்துதான் வந்தது என்ற ‘இயர்ஷொட்’ டின் முடிவை லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ‘ஃபொறென்சிக் ஆர்க்கிரெக்‌ஷர்’ (Forensic Architecture) அமைப்பும் உறுதி செய்துள்ளது. மருத்துவமனை மீது இக்குண்டுத்தாக்குதல் ஏற்படுத்திய பள்ளம் (crator) குண்டின் திசையை உறுதிப்படுத்தியிருக்கிறது என ‘ஃபொறென்சிக் ஆர்க்கிரெக்‌ஷர்’ தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தரப்பினால் முன்வைக்கப்பட்ட ‘இடைமறிக்கப்பட்ட தொலைபேசி உரையாடலை’ ஆராய்ந்த ‘இயர்ஷொட்’ அது இரண்டு வெவ்வேறு உரையாடல்களைச் செயற்கையாகப் பொருத்திய ஒன்றுபோலத் தெரிகிறது எனவும் அதில் காணப்படும் இரண்டு குரல்களும் மிகவும் கெட்டித்தனமாக ‘எடிட்’ பண்ணப்பட்டுள்ளன எனவும் இதை நம்பக்கூடிய ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

இதே வேளை இக்குண்டுத்தாக்குதல் நடைபெற்ற கையோடு இஸ்ரேலிய அரசாங்க ஆலோசகர் ஹனன்யா நஃப்ராலி “காசா மருத்துவமனையினுள் ஹமாஸ் பயங்கரவாதிகள் வைத்திருந்த படைத்தளமொன்றை இஸ்ரேலிய வான்படை வெற்றிகரமாகத் தாக்கியழித்துள்ளது” எனத் தனது ருவிட்டர் (எக்ஸ்) பதிவில் குறிப்பிட்டிருந்தார். சில நிமிடங்களில் இப்பதிவு அழிக்கப்பட்டுவிட்டது.

இருப்பினும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் உட்படப் பல மேற்குலக அரசியல் தலைவர்கள் இக்குண்டுவெடிப்புக்கு பாலஸ்தீனிய அமைப்பே காரணம் எனக் கூறிவருகின்றனர்.mage Source: Screen Capture: Forensic Architecture)