ColumnsWorld

காசா போர் நிறுத்தம்: ‘காலாட் படைகளுக்கு’ தற்காலிக வெற்றி

48 நாட்களுக்குப் பிறகு சுடு குழல்களுக்கு மட்டுமல்ல கதறி வெந்துபோகும் நெஞ்சங்களுக்கும் தற்காலிக இடைவேளை கொடுக்கப்பட்டிருக்கிறது. விருப்பத்தோடு அல்ல இயலாமையால். போரினால் அங்குமிங்கும் அலைக்கழிந்த பாலஸ்தீனிய ‘காலாட்படைகளுக்கு’ மூச்சு வாங்க ஒரு இடைவெளி. ஓரளவு மனச்சாட்சியுள்ள ஒரே அரபுநாடான கட்டாருக்கு நன்றி.

13 இஸ்ரேலியரை விடுவித்தமைக்காக 39 பாலஸ்தீனியரை இஸ்ரேல் விடுவித்திருக்கிறது. காசிலும் கணக்கிலும் அவர்கள் எப்போதுமே கறார். ஒரு இஸ்ரேலியனுக்கு ஒரு பலஸ்தீனியன் ஈடில்லை என்பதில் அவர்கள் எப்போதும் குறி. இறுதிக் கணக்கு 50 இஸ்ரேலியருக்கு 150 பாலஸ்தீனியர் – போர் நிறுத்தம் தொடர்ந்தால். இதில் ஹமாஸினால் விடுவிக்கப்பட்ட 11 இதர கைதிகளில் 10 பேர் தாய்லாந்து நாட்டுக்காரர். ஒருவர் பிலிப்பைன்ஸ் தேசத்தவர். இவர்களை ஹமாஸ் தாமாக முன்வந்து விடுவித்திருக்கின்றனர். இஸ்ரேல் அவர்களைப்பற்றிக் கணக்கில் எடுக்கவில்லை.

விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் மூதோரும் குழந்தைகளும். பாலஸ்தீனியர்களில் இளம் பெண்களும் பால்ய வயது ஆண்களும். இவர்களில் பலர் மேற்குக்கரையில் அதிரடி நடவடிக்கைகளின்போது சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்கள். இது அங்கு நாளொரு மேனியென நடந்துவருவது. இக்கைதிகளை விடுவிக்க முன்னர்கூட சிலரது வீடுகளை இஸ்ரேலிய படைகள் தேடுதலுக்குட்படுத்தியிருக்கின்றன. ஹமாஸின் கைதிகளோ அல்லது இஸ்ரேலின் கைதிகளோ அனைவரும் சுகமாக விடுவிக்கப்படவேண்டும்.

கடந்துபோன 48 நாட்களில் உலகம் வெகுவாகப் பாலஸ்தீனியர்களின் பக்கம் சரிந்திருக்கிறது. இப்போரின் ஆரம்பத்திற்கு ஹமாஸ் காரணமாக இருந்தும்கூட அது நடைபெற்றிருக்கிறது. இதற்கு நெட்டன்யாஹுவின் கொடுங்கோல் அரசு மட்டும் காரணமல்ல. உலகம் முழுவதும் வாழும் யூத மக்களும் உரிமை கோரவேண்டும். சில நீதி விரும்பும் யூத மக்கள் தெருக்களில் இறங்கியிருக்கிறார்கள் எனினும் பணத்தையும், அதிகாரத்தையும், அரசியலையும் தமது கைகளில் வைத்திருக்கும் சில தனி மனிதர்களும், நிறுவனங்களும், அமைப்புகளும் பேச்சு, எழுத்துச் சுதந்திரங்களை அனுமதியாது போர்நிறுத்தமொன்றிற்காகக் குரலெழுப்புவர்களைக்கூடத் தண்டிக்கும் குரூரமான மனநிலையைக் கொண்டிருப்பது நியாயம் அவர்கள் பக்கம் இல்லை என்பதையே காட்டி நிற்கிறது. இப்பழிவாங்கல்களுக்கு அஞ்சி, நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக வீதிகளுக்கு இறங்க முடியாமல் அல்லது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாமல் இன்னும் எத்தனை கோடிக்கணக்கானோர் கூனிக் குறுகிக் கொண்டிருக்கவும் கூடும். இச் சுதந்திர மறுப்பாளர்களுக்கு ஆதரவாக ‘ஜனநாயக’ அரசுகளும் அவர்களது ஊதுகுழல்களும், ஏன் நாணயம் போதிக்கும் கல்வி வளாகங்களும்கூட, வரிந்துகட்டிக்கொண்டு நாட்டாண்மை காட்டுவதுதான் மிகவும் கொடுமை.

இப்போரில் மிக மோசமாக மூக்குடைபட்டிருப்பவர் நெட்டன்யாஹு. ஹமாஸ் அவரின் உற்பத்தி. அப்பாஸின் பாலஸ்தீனிய நிர்வாகம் மேற்கு கரையிலும் காசாவிலும் பலமாக இருக்கும்போது இரு-தேச தீர்வு முனைப்பெடுத்து வந்தது. பில் கிளின்ரன் போன்றோரது முயற்சி வெறிபெறும் நிலையை எட்டியபோது குட்டையைக் குழப்பியவர் இந்த நெட்டன்யாஹு. இப்போது ஹமாஸின் தாக்குதல் விடயத்தில் நெட்டன்யாஹுவின் வேவுக்காரர் தவறிழைத்துவிட்டனர் என்பதற்காக அவரது கால்களின் கீழ் குழிகள் பல தோண்டப்பட்டுவிட்டன. போர் முடிய அவரது அரசியலும் முடிந்துவிடும்.

ஈழத்தவர் இஸ்ரேலியரைப் பின்பற்றிக் காரியங்களைச் சாதிக்கவேண்டுமென்ற குரல்கள் பல தசாப்தங்களாக ஒலித்துக்கொண்டு வருகின்றன. எனக்கு அதில் உடன்பாடில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக நாடோடிகளாக இருந்த ஒரு இன மக்களுக்காக இரக்கப்பட்டு, இன்னுமொரு பூர்வகுடிகளின் வேர்களை அறுத்து வெளியேற்றிவிட்டு, உலகம் ஒரு நிலத்தைப் பிடித்துக் கொடுத்திருந்தது. அப்படியான, பாதிக்கப்பட்ட ஒரு இன மக்களிடம் நாம் எதிர்பார்ப்பது தர்மத்தை, நீதியை, நியாயத்தை. ஈழத்தவர் அப்படியான மனநிலை கொண்டவர்களல்ல. தெற்கில் பஞ்சம் வந்தபோதும் எதிரிக்கு அரிசி அனுப்பியவர்கள்.

வெற்றிக்காக மட்டும் புரியப்படும் போர்கள் தோல்வியையே தழுவும். சமாதானத்துக்காகப் புரியப்படும் போர்களே உறுதியான வெற்றியைத் தரும். மத்திய கிழக்கில் இதுவரை நடைபெற்ற போர்கள் அனைத்தும் சமாதானத்துக்கான போர்களல்ல. இதுவும் அப்படியானதொன்று தான். அனைத்துப் பாலஸ்தீனியர்களையும் இஸ்ரேலை விட்டு வெளியேற்றுவதே இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு என இஸ்ரேலியர்கள் எண்ணுகிறார்கள். அரபு தேசங்களின் முதுகுகளில் பாலஸ்தீனியர்களைக் கட்டிவிட்டுத் தப்பிக்கலாமென்பதே இஸ்ரேலின் திட்டம். இஸ்ரேலின் ‘திங்க் ராங்க்’ அப்படித்தான் ஆலோசனை கூறியிருக்கிறது.

பாலஸ்தீனியர்கள் இதர அரபுக்களை விட வித்தியாசமானவர்கள். அரபு தேசங்களிலேயே அதிகமான படித்தவர்கள் பாலஸ்தீனியர்கள் தான். அவர்களில் பலரும் இடதுசாரிப் போக்குடையவர்கள். தீவிர மதப் போக்குகள் இவர்களிடம் குறைவு. குலங்களின் ஆட்சி நடைபெறும் அரபு நாடுகள் இவர்களுக்குத் தஞ்சமளிக்காது. 1948 இல் இஸ்ரேலிலிருந்து புலம்பெயர்க்கப்பட்ட அகதிகள் இன்னமும் ஜோர்தானிலும், லெபனானிலும் வாடுகிறார்கள். இவர்களால் தமது அரசுகளுக்கு ஆபத்து என அந்நாடுகளின் குலத் தலைவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் தான் அரபு நாடுகள் பாலஸ்தீனியரைக் கைவிட்டு இஸ்ரேலைக் கட்டியணைக்க முயல்கிறார்கள். இந் நிலையில் பாலஸ்தீனியர்கள் போராடித் தமக்கான இடமொன்றை நிறுவிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே இப்போராட்டம் அவர்களது சமாதான வாழ்வுக்கானது. அது தொடரும்.

தற்போதைய போர் நிறுத்தம் தற்காலிகமானது. கடத்தப்பட்ட இறுதி இஸ்ரேலியர் விடுவிக்கப்படும் வரை பல நாடகங்கள் அரங்கேறும். சர்வதேச அரசியல் நடிகர்கள் கண்ணீர் வடிப்பார்கள், வெற்றிக்கு உரிமை கொண்டாடுவார்கள். உள்ளூர்த் தேர்தல்களில் வெற்றி பெறுவார்கள் ஆனால் பாலஸ்தீனியர்கள் மீண்டும் கைவிடப்படுவார்கள். இப்போர் வித்திட்ட அடுத்த தலைமுறை பாலஸ்தீனியர்கள் இன்னும் மூர்க்கத்துடன் போராடுவார்கள். போர் சமாதானத்தைத் தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கும் – இயற்கை தலையிட்டு நீதி பரிபாலிக்கும்வரை ஓட்டம் தொடரும். (Image Credit: Ibraheem Abu Mustafa/Reuters)