NewsWorld

காசா போர் நிறுத்தம்: அவசியமான இடை வேளை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பின் முயற்சியின் விளைவாக அக்டோபர் 09, 2025 இல் அறிவிக்கப்பட்ட காசா – இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் வெள்ளி நள்ளிரவன்று நடைமுறைக்கு வந்திருக்கிறது. இவ்வொப்பந்தத்தின் முதலாவது கட்டமாக காசாவின் ஒரு பகுதியிலிருந்து அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள், ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைகளுக்குப், பின்னகர வேண்டுமெனவும். இது நடந்து அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் ஹமாஸ் போராளிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இஸ்ரேலியர்களில் உயிருடன் இருப்பதாகக் கருதப்படும் மீதியான சுமார் 20 பேரையும் ஹமாஸ் விடுதலை செய்யவேண்டுமெனவும் அதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சுமார் 250 பாலஸ்தீனியர்களையும் 2023 அக்டோபர் 07 முதல் கைது செய்யப்பட்ட, பெண்கள் குழந்தைகள் உடப்ட, சுமார் 1,700 காசா வாசிகளையும் இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டுமெனவும் ஒப்பந்தம் கூறுகின்றது. இருப்பினும் காசாவின் தென்புலத்தில் நிலை கொண்டிருக்கும் இஸ்ரேலிய இராணுவம் , நிலைமை சீராகும்வரை, பின்வாங்க மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் பிற்பகுதியில் ட்றம்பினால் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த முயற்சியின்படி இப்போர் நிறுத்தம் 20 அம்சங்களைக் கொண்டது எனவும் காசாவிலிருந்து இஸ்ரேல் முற்றாகப் படை நீக்கம் செய்ய வேண்டும், ஹமாஸ் இயக்கம் முற்றாக ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும், ஒரு தற்காலிக நிர்வாகம் ஆட்சியைப் பொறுப்பேற்பதுடன் ஹமாஸ் பங்கு பெறாத, அடிப்படை வாதமற்ற, பயங்கரவாதத்திற்கு இடமளிக்காத ஒரு ஆட்சி அங்கு நிறுவப்படவேண்டுமென்பது சில நிபந்தனைகளாக இருக்கிறது.


இப் போர் நிறுத்த அறிவிப்பை காசா வாசிகள் மிகவும் மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாது “ஹாசாவின் போர் முடிந்து விட்டது. ட்றம்பின் திட்டத்தின்படி நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்று இங்கு நிலைகொள்ளப் போகிறது; இனிமேல் இங்கு இரத்தக்களரி ஏற்படாது” என மூத்த ஹமாஸ் அதிகாரியான களீல் அல்-ஹய்யா தெரிவித்திருக்கிறார். ஈரானைத் தவிர்ந்த அனைத்து அரபு / முஸ்லிம் நாடுகளும் இப்போர் நிறுத்தத்தை வரவேற்றுத் தன்னை வாழ்த்துகின்றன என ட்றம்ப் தம்பட்டமடிக்கிறார்.

அமெரிக்காவின் பல முன்னாள் இராணுவ தலவர்கள் உட்படப் பல ஆய்வாளர்களுக்கு இப் போர் நிறுத்த அறிவிப்பும், இதற்கு முன்னர் முறிக்கப்பட்ட பல போர் நிறுத்தங்களைப் போலவே இதுவும் முறிக்கப்படும் என எதிர்வு கூறுகிறார்கள். கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட சமாதானத்திற்கான நோபல் பரிசைத் தட்டிக்கொள்வதற்காக ட்றம்ப் ஆடிய ஒரு நாடகமே இதுவென அவர்கள் இவ்விடயத்தைப் புறந்தள்ளுகிறார்கள். இப் போர் நிறுத்தம் வெற்றி பெறும் பட்சத்தில் இது தனது ஏழாவது வெற்றிகரமான சமாதான முயற்சியெனவும் இதன் காரணமாக இவ்வருடத்துகுரிய சமாதானத்துக்குரிய நோபல் பரிசு தனக்கே வழங்கப்படுமென ட்றம்ப் பகிரங்கமாகவே அறைகூவல் விடுத்திருந்தார். ஆனால் அது நடைபெறவில்லை. இந்நிலையில் இப்போர் நிறுத்தத்தினால் காசா வாசிகள் பலனடைவார்களா என்பதே பலரது கேள்வி.

முன்னைய போர் நிறுத்த அறிவிப்புகளைப் போலவே இம்முறையும் இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டு பொறியொன்றை வைத்திருக்கிறது. முன்னைய காலங்களில் ஹமாஸ் அமைப்பிற்குத் துணையாகவிருந்த ஹிஸ்புல்லா பலவீனப்படுத்தப்பட்டதன் பின்னர் அதன் மூலம் உதவிகளைப் புரிந்துகொண்டிருந்த ஈரான் தனது சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. இதர அரபு நாடுகளும் வழக்கம்போலவே பராமுகமாக இருக்கின்றன. காசாவின் எல்லை நாடுகளான லெபனான் மற்றும் எகிப்து ஆகியன அமெரிக்க மிரட்டலுக்கும் பணத்துக்கும் அடிபணிந்து பாலஸ்தீனியர்களைக் கைகழுவி விட்டுவிட்டன. இந் நிலையில் மரணத் தறுவாயில் இருக்கும் காசா வாசிகளுக்கு ஒரு இடைவெளி தேவை. இது நிரந்தரமானதா அல்லது ஏமாற்று வேலையா என முடிவு செய்ய அவர்களுக்கு தேர்வு இல்லை. அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

இஸ்ரேலைப் பொறுத்த வரையில் காசாவில் தரைப்படைகளை அனுப்பி, கைதிகளை விடுவித்து முழுமையான வெற்றியைப் பெறுமளவுக்கு போதுமான ஆளணிகள் இல்லை. இதுவரை அதன் வெற்றி குண்டு வீச்சுகளில் தான் தங்கியிருக்கிறது.

இந்நிலையில் உலக அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளால் கைவிடப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் மேற்கு நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் மேற்கு நாடுகளில் பலமுற்று வரும் பாலஸ்தீனிய ஆதரவு மற்றும் இஸ்ரேலைத் தனிமைப்படுத்தும் போராட்டங்கள். இஸ்ரேலின் பொருளாதாரம் படு வேகமாக சீரழிந்து போகிறது. உலக அரங்குகளில் இஸ்ரேலும், யூதர்களும் காழ்ந்துமிழப்படுகிறார்கள். எழுபதுகளில் வீச்சோடு எழுந்த வியட்நாம் போருக்கு எதிராக உலக மனச்சாட்சி முன்னெடுத்த வீதிப் போராட்டங்கள் மீண்டும் பிந்திய தலைமுறைகளால் முன்னெடுக்கப்படுகிறது. இம்மனசாட்சிகள் அரபு / முஸ்லிம்களிடையே காணக்கிடைக்காதமை துரதிர்ஷ்டமானாலும் அதைக்கூட இன்னுமொரு மேற்குநாட்டினால் தான் தூண்டிவிட முடியுமென்ற நிலை. எனவே பாலஸ்தீனியர்களுக்குக் கிடைத்த இந்த தற்காலிக இடைவேளை பாலஸ்தீனியர்களுக்கானதா அல்லது மேற்குநாடுகளின் தெருக்களை வெறுமையாக்குவதற்காகவா என்பதில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. இவ்விடைவேளையின்போது பாலஸ்தீனியக் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு கிடைக்குமானால் அதற்காக ட்றம்பிற்கு நன்றி சொல்லலாம்.

இவ்விடைவேளையைப் பெற்றுக்கொடுப்பதற்காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்களில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரோணி பிளையர் ஒருவர் என்பது இதன் பின்னால் மோசமான சதியொன்று அரங்கேறலாமென்ற ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது. இதற்கு முன்னர் “பாலஸ்தீனியர்களை அப்புறப்படுத்திவிட்டு நான் காசாவை ஒரு விடுமுறைத் தலமாக்குவேன்” என ட்றம்ப் ஒரு தடவை அறைகூவியிருந்தார். அப்போது இப்பணியை மேற்கொள்ளும் பொறுப்பை ரோணி பிளையரிடம் கொடுக்கவிருந்ததாகப் பேசப்பட்டது. இரண்டாம் வளைகுடாப் போரில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் அடியாளாகப் பணியாற்றிய இவரது வருகை தான் இச்சந்தேகத்திற்கான காரணம்.

காசா வாசிகளில் எஞ்சியிருக்கும் பாலஸ்தீனியர்கள் உடற் திடம் இல்லாவிட்டாலும் மிகுந்தளவு மனோதிடம் கொண்டவர்கள். கொன்றொழித்தாலொழிய அவர்கள் இதர பலஸ்தீனியர்களைப் போல் லெபனானுக்கோ, எகிப்திற்கோ அல்லது ஜோர்டானுக்கோ இடம்பெயர மாட்டார்கள். அதே வேளை எந்தவொரு அரபு நாடும் அவர்களை ஏற்றுக்கொள்ளவும் மாட்டாது. எனவே வேறு வழியின்றி அப்பாஸின் கீழ் பாலஸ்தீன அதிகார சபையின் ஆட்சியிலுள்ள மேற்குக்கரைப் பாலஸ்தீனத்துடன் இணைந்த, இஸ்ரேலின் அதிகாரத்தின் கீழான ஒரு தனியாட்சியை வழங்கி அடுத்த வருடத்திலாவது தனது நோபல் பரிசைப் பெற்றுவிட ட்றம்ப் முயசிக்கிறார் எனவே படுகிறது.

எப்படியானாலும் இத் தற்காலிக இடைவேளையில் பாலஸ்தீனக் குழந்தைகள் பசி தீர்த்து, பயமற்று அமைதியாக உறங்க வேண்டும்.