காசா திரைப்படம்: 25 நிமிடங்கள் எழுந்துநின்று வரவேற்பு!
மாயமான்
83 ஆவது சர்வதேச திரைப்படவிழா இவ்வருடம் (2026) செப்டம்பர் 2 முதல் 12 ஆம் திகதி வரையில் வெனிஸ் நகரத்திலுள்ள லிடோ டி வெனேசியா அரங்கத்தில் திரையிடப்பசுகிறது. இவ்விழாவில் இவ்வருடம் காண்பிக்கப்பட்ட ‘நாசா’ என்னும் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா வரலாற்றில் புதிய வரலாறொன்றைப் படைத்திருக்கிறது.
ஹீப்றூ மொழியில் ‘நாசா’ என்னும் வார்த்தை தூவுதல் / தெளித்தல் என்னும் பதத்துடன் பாவிக்கப்படும் வினைச்சொல். கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாட்டில் பெரும்பாலும் சடங்குகளில் இரத்தம் / நீர்/ எண்ணை போன்ற பதார்த்தங்கள் தெளிக்கப்படுவது பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இந்து மற்றும் பல உலகளாவிய தொன்மையான சமூகங்களில் அப்போதைய சந்ததிகளின் எதிர்கால நன்மை கருதி பலி கொடுக்கும் சடங்குகள் இதே முறையில் நடத்தப்படுவது வழக்கம்.
வெனிஸ் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட ‘நாசா’ திரைப்படம் பாலஸ்தீனிய காசாவில் இஸ்ரேலினால் ‘பலி கொடுக்கப்படும்’ சடங்குகள் பற்றியது. ஒரு தாக்குதலில் காசாவின் எத்தனை உயிர்கள் பலியாகப்போகின்றன என்பதைத் தீர்மானிக்கும் சடங்கு பற்றியது இப்படம்.
யுவால் ஏப்ரஹாம் மற்றும் றேச்செல் சோர் ஆகிய ஒஸ்கார் விருது பெற்ற இரு திரைப்படத் தயாரிப்பாளர்களினால் உருவாக்கப்பட்டது இப்படம். சுமார் 25 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் மற்றும் ஒற்றர்களிடமிருந்து மூன்று வருடங்களாகப் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது இத்திரைப்படம். ரெல் அவிவ் நகரத்து வீடுகளின் கூரைகளில் முகங்கள் ‘மாற்றப்பட்ட’ நிலையில் இவ்வதிகாரிகள் தாம் மேற்கொண்ட அநியாயங்களை விபரிக்கிறார்கள். போராளிகளைக் குறிவைக்காமல் குடும்பங்கள் நிறைந்து வாழும் வீடுகளையே தாம் குறிவைத்துத் தாக்குவதாக அவர்கள் கூறுகிறார்கள். வழமையாக போர்களின்போது தற்செயலாக கொல்லப்படும் மனிதர்கள் பற்றியதல்ல இது மாறாக இது திட்டமிட்டுச் செயற்படுத்தப்பட்ட கொலைகள் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள். இரண்டு வருடங்களாக ஊடகவியலாளர்களை அனுமதிக்க மறுத்துவிட்டு கதறக் கதறக் கொலைசெய்யப்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை சுமார் 73,000 பேர். இக்கொலைகளைச் செய்தவர்கள் முன்னின்று அளித்த சாட்சியங்களைக்கொண்டு உருவாக்கப்பட்டதே இத் திரைப்படம்.
வெனிஸ் விழாவில் இத்திரைப்படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் சுமார் 25 நிமிடங்களாக எழுந்து நின்று கைதட்டி வரவேற்றிருக்கிறார்கள். வெனிஸ் திரைப்பட வரலாற்றில் இது ஒரு சாதனை எனப்படுகிறது. இதற்கு முன்னர் சாதனை படைத்த இன்னுமொரு திரைப்ப்டமும் காசா பற்றியது தான். வாகனமொன்றின் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாக இறந்து கொண்டிருந்த தனது பெற்றோர்களுடன் சிறைப்பட்டிருந்தபோ அம்புலன்ஸ் வண்டியையும் நெருங்கவிடாமல் தடுத்த பாதகர்கள் பற்றிய படம் அதிக நேரம் எழுந்து நின்று வரவேற்பதில் சாதனை படைத்திருந்தது.
அரசாங்கங்கள் கண்டு கொள்ள மறுத்தாலும் மக்கள் அறிய /பார்க்கப் புறப்பட்டு விட்டார்கள். குறிப்பாக இக்கொலைகளை நிகழ்த்துபவர்களே இப்போது பார்வையாளர்களாக மாறிக்கொண்டு வருகிறார்கள்.
தூவப்பட்ட வித்துடல்கள் உலகத்தை விழித்தெழ வைத்திருக்கிறது. இதுவும் ஒரு சடங்குதான்.
(Image Credit: Prince Taofeek Ajibade FB Page
