காங்கேசன்துறைக் கடலில் செயற்கை ‘பவளப் பாறை’ உருவாக்கம் – பாவனைக்குதவாத பஸ் வண்டிகள் கடலில் இறக்கப்படுகிறது

அருகிவரும் சிறு கடலுயிரினங்களை மீளவும் பெருக்குவதற்காக வட கடலில் ‘செயற்கை பவளப் பாறைகளை’ (coral reef) உருவாக்கும் திட்டம் காங்கேசந்துறை துறைமுகத்துக்கு அண்மையான கடற் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவின் ஆலோசனைக்கிணங்க முன்னெடுக்கப்பட்ட இத் திட்டத்தில், பாவனைக்குதவாது தரித்து நின்ற இ.போ.ச. பஸ் வண்டிகளைக் கடற்படையின் உதவியுடன் கடலின் அடியில் இறக்கப்பட்டன.

உயிரினங்களின் தோற்றத்தின் மூலமான கடலின் அடியில் ஒரு கலத் தாவரங்கள் முதல் பல்கலத் திமிங்கிலங்கள் வரை பல கோடி உயிரினங்கள் பல மில்லியன் வருடங்கள் இசைபட வாழ்ந்து வாழ்ந்து வருகின்றன. மனிதருக்கு எப்படி மரங்கள், வாழ் சூழலை இலகுவாக்கிக் கொடுக்கின்றனவோ அதுபோல கடல்வாழ் உயிரினங்களுக்கு பவளப் பாறைகள் எனப்படும் இயற்கை வளரிகளும், கடற் தாவரங்களும் ஆதரவு வழங்குகின்றன. கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவை வழங்கும் சூழலாக மட்டுமல்ல அவற்றின் இனப்பெருக்கத்துக்குத் தேவையான சூழலையும் பவளப் பாறைகள் வழங்குகின்றன. பெரும்பாலான நுண்ணிய உயிரினங்கள், பெரிய உயிரினங்களிடமிருந்து தப்பி வாழ்வதற்கேற்ற மறைவிடங்களாகவும் இவை உத்விபுரிகின்றன.

நவீன கால மனிதனின் அசுரப் பசிக்குத் தீனிபோடுவதற்காக வர்த்தக மீன்பிடித்தல் போன்ற முயற்சிகளின்போது இழுவைப் படகுகள் போன்றவற்றால் மேற்கொள்ளப்படும் பாரிய இயந்திர வலையிழுப்புகளின்போது இப் பவளப் பாறைகள் தரையினின்றும் பெயர்க்கப்பட்டு வழித்தெடுக்கப்படுவதால் கடல் வாழ் உயிரினங்கள் வாழும் சூழல் அகற்றப்பட்டு நிரந்தரமாக அவை ஒழிக்கப்பட்டு விடுகின்றன. இதைத் தவிர்ப்பதற்காக செயற்கையாக இப் பவளப்பாறைச் சூழலை உருவாக்கும் நடைமுறை உலகம் முழுவதும் கடந்த 70 -80 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.