Spread the love

இந்தியாவின் முதல் சூழல் செயற்பாட்டு இயக்கமான Save Silent Valley Movement இன் தீவிர செயற்பாட்டாளரும், கவிஞரும், அபயா அமைப்பின் ஸ்தாபகருமான சுகதகுமாரி, கோவிட் தொற்றுக்குள்ளாகி இன்று கேரளாவில் காலமானார்.

86 வயதுடைய சுகதகுமாரி, டிசம்பர் 22 அன்று நோய் தொற்றுக்குள்ளாகியிருந்ததாக உறுதிசெய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து திருவனந்தபுரம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காத காரணத்தால், இன்று காலமானார்.

கவிஞர், சூழற் போராளி சுகதகுமாரி காலமானார் 1
Silent Valley in Palakkaadu

1970 இல் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அமைதிப் பள்ளத்தாக்க்கில் (Silent Valley) அணையொன்றை நிறுவுவதற்கு எதிராகத் தோன்றிய மக்கள் இயக்கமான Save Silent Valley Movement என்ற இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்த கவிஞர் சுகதகுமாரி, திக்கற்ற மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புகலிடம் தரும் அபயா என்றொரு அமைப்பையும் உருவாக்கியிருந்தார்.

உலகின் பல சூழற் போராட்ட அமைப்புகளும் பங்குபற்றிய இந்தியாவின் முதற் சூழல் செயற்பாட்டு இயக்கம் இதுவாகும். இயற்கை எழில் கொஞ்சும் இம் மலைப்பள்ளத்தாக்குப் பிரதேசம் நீளவால்க் குரங்குகள் உட்படப் பல வன விலங்குகள் உறைவிடமாகும். மரத்தினு ஸ்துதி எந்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை இப்போராட்ட ஆர்ப்பாட்டங்களின்போது இசைக்கப்பட்டது.

இதைவிட, சுகதகுமாரியும் இன்னும் சிலரும் சேர்ந்து பாலக்காட்டிலுள்ள ஆட்டபட்டி என்னுமிடத்திலுள்ள வரண்ட பூமியை வளமாக்கி கிருஷ்ணவனம் என்ற பெயரில் பூங்காவாக்கியுள்ளார்கள்.எர்ணாகுளம் பிஷப் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாலியல் வன்செயலுக்கு எதிராக புனித கன்னியர் மேற்கொண்ட போராட்டத்தில் கலந்துகொண்டதே அவரது கடைசிப் போராட்டம்.

சுகதகுமாரியின் கவிதைகளுக்காக அவருக்கு 2006 இல் பத்மசிறீ விருது வழங்கப்பட்டிருந்தது. இவரது கவிதைகள் பெரும்பாலும் இயற்கையை ரசிப்பதாகவும், துதிப்பதாகவும் அமைந்தவை. 1960 களில் இவரது பத்திரப்பூக்கள் (Floweவிருது வழங்கப்பட்டs of Midnight) என்னும் கவிதைத் தொகுப்புக்கு கேரள சாஹித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டது. 1970 களில் இவரது ராத்திரிமழை (Night Rain) என்ற தொகுப்புக்கு கேந்திர சாஹித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. முத்துச் சிப்பி, பாவம் மாணவரிதயம், இருள் சிறகுகள், தூலாவர்ஷப்பச்சா, ராதா எவிடே ஆகிய சில கவிதைகள் மிகவும் பேசப்பட்டவை.

கவிஞர் சுகதகுமாரி தத்துவத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். கலாநிதிப் பட்டத்துக்கான கல்வியை ஆரம்பித்திருந்தாலும் அதை முடிக்கவில்லை. டாக்டர் வேலாயுதன் நாயர் (தற்போது காலமாகிவிட்டார்) என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அவரது ஒறெ மகளான லக்‌ஷ்மிதேவியும் ஒரு கவிஞர். தற்போது அபயாவை நிர்வகித்து வருகிறார். மாத்துருபூமி பத்திரிகையில் அவரது முதல் கவிதை வெளிவந்தது.

காந்தி, விவேகானந்தர் ஆகியோரைத் தனது ஆசிரியர்களாகக் கூறும் கவிஞர் சுகதகுமாரி அரசியலில் இந்திரா காந்தியின் தீவிர ஆதரவாளர்.

கவிஞர் சுகதகுமாரியின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதை ஒன்று:

Pity the human heart!

It sees a lonely star and forgets the long night,

It sees a passing drizzle and forgets the long drought;

Seeing a milky smile, it forgets death and rejoices.

Pity the human heart!


Print Friendly, PDF & Email