Health

கழுதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன சம்பந்தம்?

ஒருவருடைய விவேகத்தை நையாண்டி செய்யும்போது கழுதையைத் துணைக்கழைப்பது தமிழர் கலாச்சாரத்துக்கு மட்டும் பொதுவானதல்ல. இவ்விடயம் பற்றி YouGov எடுத்த கருத்துக்கணிப்பில் 74% பேர் கழுதையை முட்டாளாகவே கருதுவதாகக் கூறியுள்ளனர். ஆனால் 2013 இல் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியொன்றின்போது டொல்ஃபின், நாய் ஆகியவற்றின் விவேகத்திற்கிணையாக கழுதையின் விவேகம் இருக்கிறது எனவும் தன் வாழ்வில் நடைபெற்ற வலிதரும் அனுபவங்களை அது நீண்டகாலத்திற்கு ஞாபகத்தில் வைத்திருக்கிறது; இந்நினைவுகள் அதன் குணாதிசயத்தில் பல விரும்பத்தகாத மாற்றங்களை உண்டாக்கிவிடுகின்றன எனவும் கண்டறியப்பட்டிருந்தது.

சமீபத்தில் கற்பூர வாசனைக்கும் புலனாட்சிச் செயற்பாட்டிற்குமுள்ள தொடர்பு பற்றி வாசித்ததும் அதைப் பற்றி மேலும் அறிய முற்பட்டதினால் எழுந்ததே இக் கட்டுரை.

கற்பூரவள்ளி, மிளகுக்கீரை (peppermint), கறுவாப்பட்டை போன்ற நறுமணம் தரும் மூலிகைகள் சீன, இந்திய பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவக் கலாச்சாரத்தில் ஒன்றிணைந்து வந்தாலும் மனித உடலின் ஆரோக்கியத்திற்கு அவை எந்தவித பங்களிப்பை வழங்குகின்றன என்பதை விஞ்ஞான ரீதியில், எளிய தமிழில் விளங்கப்படுத்தும் கட்டுரைகள் அரிதாகவே இருக்கின்றன. அக்குறையைப் போக்க இக்கட்டுரை ஓரளவு உதவி செய்யுமென நம்புகிறேன்.

சீன, சித்த-ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சைகளில் இவ்வாசனைத் திரவியங்கள் பல்லாயிரம் வருடங்களாகப் பாவிக்கப்பட்டு வருகின்றன. இவ்வைத்திய முறைகளில் பெரும்பாலான மூலப் பொருட்கள் தாவரங்களிலிருந்து பெறப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமிருக்கிறது. இப்பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களினதும் பிறப்பிற்கும் வாழ்தலுக்குமுரிய முக்கிய தேவை இனப்பெருக்கம் (procreation) ஒன்றே. அதைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு ஆரோக்கியமான உடல் அவசியம். அந்த ஆரோக்கியத்தைப் பேணுவதற்கேற்ற வகையில் பாதுகாப்பான சமூகங்கள், கூட்டு வாழ்க்கை ஆகியன அவசியம். இச்சமூகங்களின் அமைதியான பாதுகாப்பான வாழ்வுக்கு ஒற்றுமையும் புரிந்துணர்வும் அறமும் அவசியம். இதையே தான் திருக்குறள் அறம், பொருள், இன்பம் என வகைப்படுத்துகிறது என திருக்குறளை ஆராயும் நண்பர் ஒருவர் தெரிவித்தார். அறமும் பொருளும் இன்பத்தைத் தேடித்தந்தால் அடுத்ததாக காமம் பெருகி இனம் பெருகும் என்பது அவரது கணிப்பு.

தாவரங்களுக்கும் திருக்குறள் பொருந்தும். எமது பாரம்பரிய வைத்திய முறைகளில் மூலிகைகள், தாவர்ங்களின் பகுதிகள் ஆகியன மூலங்களாகப் பாவிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இத்தாவரங்களில் காணப்படும் சில வேதிப்பொருட்களே. தாவரங்கள் ஏன் இந்த வேதிப்பொருட்களைக் கொண்டிருக்கின்றன எனப் பலரும் கேட்பதாகத் தெரியவில்லை. அது மணத்தையும், சுவையையும் தருகிறது; வலியைப் போக்குகிறது என்பதோடு எமது தேடல்கள் முற்றுப்பெற்று விடுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல.

பக்டீரிய தொற்றினால் ஏற்படும் வலியைப் போக்க, நோய் நிவாரணியாக எமக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் ‘அன்ரிபயோட்டிக்’ ரகத்தைச் சேர்ந்த ‘பெனிசிலின்’ தென்னமெரிக்காவில் அமசோன் வனங்களில் வளரும் தாவரங்களின் பட்டைகளிலுருந்து ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்டது. அதன் கூட்டுப்பொருளை ஆய்கூடத்தில் ஆய்ந்தறிந்த பின்னர் அது இப்போது செயற்கையாக ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது என்பது வேறு விடயம்.

அமசோன் வனத் தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் பல. இதற்குக் காரணம், இவ்வனத் தாவரங்கள் மட்டுமல்ல இவ்வுலகில் வாழும் அனைத்துத் தாவரங்களும், தமது சூழலில் எதிர்கொள்ளும் ‘எதிரிகளிடமிருந்து’ தம்மைக் காப்பாற்ற எடுக்கும் இசைவாக்க முயற்சிகளின் பலனே அவை இவ்வேதிபொருட்கள். தாவரங்களின் உறுதியைப் பேணும் தண்டு விலங்குகளாலும் பூச்சிகளாலும் பாதிக்கப்படக்கூடாது எனபதற்காக இத்தண்டுகளைச் சுற்றிப் பட்டைகள் உருவாக்கப்பட்டதும் அவற்றில் எதிரிகளை விரட்டக்கூடிய மணம், சுவை கூடிய நச்சுப் பதார்த்தங்களை இப்பட்டைகளில் பொதித்திருப்பதும். இதை அறிந்த மனிதன் இப்பட்டைகளிலுருந்து பெறப்படும் சாறுகளைத் தனது பாதுகாப்பிற்காகப் பயன்படுத்த ஆரம்பித்தான். இத்தாவர, மூலிகைகளின் குணாதிசயங்கள் பற்றிய அறிவே சித்த, ஆயுர்வேத, சீன, மேற்கத்தைய வைத்தியங்களாக எமக்கு அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் எமது பாரம்பரிய வைத்திய முறைகள் பூடகமாகச் சொல்லப்பட்டதுடன் மேலதிக ஆய்வுகள் ஏதுமின்றி ஸ்தம்பித்த நிலையில் இருப்பதாக நான் எண்ணுகிறேன். அதற்கு வெவ்வேறு காரணங்களும் இருக்கலாம். ஆனால் மேற்குலகம் இவ்விடயத்தில் அசுர பாய்ச்சலைக் கண்டுவருகிறது என்பது மட்டும் உண்மை.

இவ்விடயம் தொடர்பாக சமீபத்தில் ஒரு கட்டுரை அமெரிக்க மருத்துவ சஞ்சிகை ஒன்றில் வெளியாகியிருந்தது. அதில் கற்பூரவள்ளி, மிளகுக்கீரை மற்றும் கற்பூர வாசனை (மெந்தோல் ) குணமுள்ள மூலிகைகளை நுகரக் கொடுத்தபோது அல்சைமர்ஸ் வியாதியால் பீடிக்கப்பட்ட எலிகளில் புலனாட்சித் திறமைகள் (cognitive abilities) முன்னேற்றம் கண்டதாக இவ்விடயம் பற்றி ஆய்வுகளைச் செய்த விஞ்ஞானிகல் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கும் மூலகாரணமாக இருக்கும் விடயங்களில் முக்கியமான ஒன்று உடலின் தானியக்க எதிர்ச்செயல். உதாரணமாக உடலின் செயற்பாடுகளில் சீர்த்தன்மை குறைபாடாக இருக்கிறது என உடலின் கட்டுப்பாட்டுத் தொகுதி (மூளை, நரம்புத் தொகுதி) தீர்மானித்தால் அது உடனேயே தனது பாதுகாப்பு இயக்கத்தை முடுக்கி விடுகிறது. அழற்சி எதிர்ச்செயல் (inflammatory response) எனப்படும் இச்செயன்முறை உடலின் பாதுகாப்புக்கென முடுக்கிவிடப்பட்டாலும் அதன் கட்டுப்பாடு முறையாக நிர்வகிக்கப்படாதபோது அவை பல தீமைகளுக்குக் காரணமாக ஆகிவிடுகின்றன. உதாரணத்திற்கு இப்படிப் பாதிப்படைவைளில் முக்கியமான உறுப்புக்கள் இரத்தக் குழாய்கள், நரம்புத் தொகுதி ஆகியன. இரத்தக்குழாய்களில் ஏற்படும் அழற்சி எதிர்செயலின் காரணமாகவே அவற்றின் உட்சுவர்கள் பாதிக்கப்பட்டு அடைப்புகள் ஏற்பட ஏதுவாகின்றது.

இதே அழற்சி எதிர்ச்செயல் மூளையின் நரம்புக் கலங்களில் மேற்கொள்ளப்படும்போது நரம்புக் கலங்களுக்குள் கழிவுகள் (amyloids) சேர்க்கையடைவதற்குக் காரணமாகின்றன. இதே போன்று நரம்புத் தொகுதிக்கு வெளியில் இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகலின் கலங்களிலும் இக்கழிவுகளின் சேர்க்கையால் (amyloidosis) இவ்வுறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. நரம்புக் கலங்களில் இக்கழிவுகள் சேர்க்கையடைவதால் தான் அல்சைமர்ஸ் போன்ற முதுமை மறதி நோய்கள் உருவாகின்றன.

எலிகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி கற்ஊரவாசனை ரக மூலிகைகளை நுகரக் கொடுப்பதன் மூலம் நரம்புக் கலங்களுக்குள் ஏற்படும் சில அழற்சி சம்பந்தமான மாற்றங்களைத் தாமதப்படுத்த முடியுமென விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மேலே கூறியபடி உடலில் ஏற்படும் அழற்சி எதிர்ச்செயலுக்குக் (inflammatory response) காரணமான இன்ரெலூக்கின் -1-பீற்றா (interleukin-1-beta (IL-1β) என்னும் புரதம் கற்பூரவாசனை தரும் மூலிகைகளை நுகரும்போது குறைக்கப்படுகின்றது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஏப்ரல் 2023 இல் வெளியிடப்பட்ட இவ்வாராய்ச்சியின் அறிக்கையின்படி எப்படியான வாசனைகள் அல்சைமர்ஸ் போன்ற முதுமை மறதி வியாதிகளுக்குச் சிகிச்சை தரவல்லன என ஆராய்ந்தபோது மெந்தோல் போன்ற கற்பூர வாசனையே சிறந்தது எனத் தீர்மானிக்கப்பட்டது.

Smell diagram
Scientists looked at how smell affected memory. (Casares et al., Frontiers in Immunology, 2023)

இவ்வாராய்ச்சியின்போது தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு கற்பூர வாசனை கொடுக்கப்பட்ட அல்சைமர்ஸ் வியாதியுடைய எலிகளின் புலனாட்சித் திறமைகளில் முன்னேற்றம் கண்டிருந்ததுடன் வியாதிகளற்ற எலிகளுக்கு இவ்வாசனை அளிக்கப்பட்டபோது அவற்றின் புலனாட்சித் திறமைகளும் குறிக்கப்பட்ட அளவு முன்னேற்றம் கண்டதாக இவ்வாராய்ச்சிகளில் ஈடுபட்ட ஸ்பெயின் நாட்டிலுள்ள பயன்பாட்டு மருத்துவ ஆராய்ச்சி நடுவத்தைச் சேர்ந்த நோயெதிர்ப்பு நிபுணர் ஹுவான் ஹோசே லசார்த்தே தெரிவித்துள்ளார்.

இவ்வேளை நோயெதிர்ப்பு விடயத்தில் ஒரு சிறிய வகுப்பு எடுக்கவேண்டியாகிறது. பொறுமையாக வாசியுங்கள்

எமது உடலில் நோயெதிர்ப்புக்குப் பொறுப்பான T-கலங்கள் (T-Cells) அல்லது வெண்கலங்கள் எலும்பு மச்சையில் உற்பத்தியாகின்றன. இவற்றில் இரண்டு பிரதான வகையுண்டு. Cytotoxic T-Cells முதலாவது வகை. நோய்வாய்ப்பட்ட கலங்களை நச்சுப்படுத்தி அழிப்பதுவே இவற்றின் வேலை (cyto=கலம் toxic=நஞ்சு). Helper T-Cells இரண்டாவது வகை. உடல் நோய்த்தொற்றுக்குக்குள்ளாகிவிட்டது என அறிந்ததும் இதர நோயெதிர்ப்புக் கலங்களுக்கு ‘எதிரிகளை’ அழிக்கும்படி கட்டளைகளை உடலெங்கும் அனுப்புகின்றன.

இத்தோடு வகுப்பு முடிந்தது.

நான் மேலே கூறிய அழற்சி எதிர்ச்செயல் விடயத்தில் தமது கடமையை அதீத விசுவாசத்துடன் கடமை புரியும் இந்த Helper T-Cells இன் கட்டளைகள் மிதமிஞ்சிப் போகும்போதுதான் உடல் அழற்சிக்குள்ளாகிறது. இதனால் தான் Immune suppression என்னும் நோயெதிர்ப்புக் கட்டுப்பாட்டு மருந்தை எடுத்த நோயாளிகளைத் தொற்றுநோய்கள் வராமல் பாதுகாப்பார்கள். இந்த எலி ஆராய்ச்சியின் போது அவற்றின் T-Cells ஐ வேண்டுமென்றே குறைத்து அவற்றின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்துப் பார்த்தபோது, கற்பூரவாசனையைக் கொடுத்தபோது கிடைத்த அதே பெறுபேறுகளை அவர்கள் மீளவும் பெற்றார்கள். அதாவது அழற்சி எதிர்ச்செயல் மூளையின் நரம்புக்கலங்களைப் பாதிப்பதனால்தான் ஞாபக மறதி போன்ற அல்சைமர்ஸ் வியாதிகள் ஏற்படுகின்றன என்பதை அவர்கள் அனுமானித்தார்கள். இதன் மூலம் இவ்வாராய்ச்சியாளர்கள் உய்த்துணர்ந்தது கற்பூரவாசனைக்கு அழற்சியைக் குறைக்கும் குணாதிசயமுண்டு என்பதுவும் இது பற்றி மேலும் ஆராய்ச்சிகள் தேவை என்பதுவுமேயாகும்.

ஆனால் இவைபற்றி எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளாமல் (எமக்குத் தெரியாது) கற்பூர வாசனை எமது பாரம்பரிய சிகிச்சைக் கலாச்சாராத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக எம்மோடு நடந்து வருகிறது. இப்போது என்னைப் பிடுங்கியெடுப்பது கழுதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன சம்பந்தம்? தெரிந்தவர்கள் கூறுங்கள். Photo by Virginia Long on Unsplash

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *