கழிவுக் குழாய்கள் மூலம் பரவும் கொறோனா வைரஸ்?

Spread the love
ஹொங் கொங் தொடர்மாடிக் கட்டிடத்தில் சம்பவம்!

பெப்ரவரி 12, 2020

ஹொங் கொங் தொடர்மாடிக் கட்டிடத்தில் இருவர் கொறோனாவைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்களது கட்டிடத்தில் வேறொரு மாடியில் இருக்கும் நோயாளியில் இருந்து அத் தொற்று வந்திருக்க முடியுமாவென அதிகாரிகள் ஆராய்வதாகவும் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஹொங் கொங்கிலுள்ள செங் ஹொங் எஸ்டேட்டிலிருக்கும் ஹொங் மே ஹவுஸ் தொடர்மாடிக் கட்டிடத்தில், நேற்று (11) இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இக் கட்டிடத்தில் இரு வேறு மாடிகளில் வசிக்கும் இருவரில் நோய்த் தொற்றுக் காணப்பட்டதால் அக் கட்டிடத்திலுள்ள நூற்றுக்கும் மேலான மாடி வாசிகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்த இரண்டு மாடிகளையும் தொடுக்கும் ஒரு குழாய் திறந்த நிலையில் இருந்ததாகவும் அதற்குள்ளால் வைரஸ் பரவியிருக்குமா என அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அறியப்படுகிறது.

கோவிட் -19 எனப் பெயரிடப்பட்டுள்ள கொறோனாவைரசிந் தொற்றுக்குள்ளான ஒருவர் வதியும் மாடிக்குப் பத்து மாடிகள் கீழே இருக்கும் ஒருவருக்கு இத் தொற்று வந்திருக்கிறது எனவும் இவ்விருவரிடையேயும் வேறெந்தத் தொடர்பும் இருக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இதே போன்றொரு சம்பவம் 2003 ம் ஆண்டு சார்ஸ் நோய்த் தொற்றுக் காலத்திலும் நடைபெற்றிருக்கிறது. அதுவும் ஹொங் கொங்கிலுள்ள அமோய் கார்டின்ஸ் எனப்படும் பிறிதொரு கட்டிடத் தொகுதியில், பழுதாகிய கழிவுக்குழாய் மூலம் தொற்றியதெனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சார்ஸ் வைரஸ் மலக்கழிவுகள் மூலம் பரவுவதால் அப்போது பழுதடைந்த கழிவுக் குழாய் மூலம் அது வேறொரு மாடிக்குப் பரவியிருந்தது.

குழாய்களில் இருந்து காற்றுக் கசிவு ஏற்பட்டாலும் அதன் மூலம் வைரஸ் காற்றுக்குத் தாவி மாடிவாசிகளின் சுவாசத்தில் கலந்துகொள்ள வாய்ப்புண்டு என, பால்ற்றிமோர், மேறிலாண்டிலுள்ள, ஜோன் ஹொப்கின்ஸ் சுகாதாரப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் டாக்டர் அமேஷ் அடல்ஜா கூறியதாக நியூயோர்க் ரைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

சார்ஸ் நோய்த் தொற்றின்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அம் கார்டின்ஸ் கட்டிடத்தில் பழுதாகிய கழிவுக்குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

பெரும்பாலான கட்டிடங்களில் மலக்கழிவு நடைபெறும் கழிவறைக் கொமோட்களின் கீழ் கழிவும் மணமும் திரும்பி வீட்டுக்குள் வராமல் இருப்பதற்காக ‘யூ ட்றாப்’ (U-Trap) என்னும் ஒருவகை நீர்ப்பொறி பொருத்தப்பட்டுள்ளது. கொமோட்டுகள் கழிவையகற்றும்போது சிறிதளவு நீரை இப் பொறிகள் பிடித்து வைத்திருந்து மணம், கழிவு போன்றவை மீண்டும் கழிவறைக்குள் வருவதைத் தடுக்கின்றன. 2003 ஆம் ஆண்டு சார்ஸ் தொற்றின்போது அமோய் கார்டின்ஸ் கட்டிடத்தில் சில மாடிகளில் ‘யூ-ட்றாப்’ கள் பழுதடைந்து அவற்றின் மூலம் கசிவுகள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, கழிவறிகளின் கதவுகள் மூடப்பட்டு, உள்ளே காற்றகற்றும் விசிறிகள் (exhaust fans) செயற்பட்டுக்கொண்டிருந்தால் அந்த வேளை கழிவறைகளில் ஏற்படும் வெற்றிடத்தினால் (negative pressure) பழுதடைந்த குழாய்களின் நீக்கல்கள் மூலமாக கழிவுக் காற்று அறைக்குள் இழுக்கப்பட வாய்ப்புண்டு. இப்படியாக ஒரு மாடியிலுள்ள நோய்த்தொற்றுக்காரரின் கழிவுக் காற்றில் இருக்கும் வைரஸ் இன்னுமொரு மாடிக்குப் பரவ முடிகிறது. கண்ணுக்குத் தெரியாத நீர்த்திவலைகளின் மூலம் பரவும் வைரஸ் நிலக் கம்பளங்கள், கைத் துவாய்கள் ஆகியவற்றின் மூலம் மனிதரில் தொற்றிக்கொள்கிறது.

புதிய கோவிட்-19 வைரஸ் மனித் மலக்கழிவுகளின் மூலம் தொற்றுகிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களில் வாந்தி, குமட்டல், வயிற்றோட்டம் ஆகிய அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.

இருப்பினும், இருமல், தும்மல் போன்ற வழிகளில் தான் பெரும்பாலான தடவைகளில் இப் புதிய வைரஸ் தொற்றிக்கொள்கிறதென டாக்டர் அடல்ஜா கூறுகிறார்.

ஹொங்க் கொங்கில் நேற்று நடைபெற்ற சம்பவத்தின்போது அக் கட்டிடத்தில் மேலும் ஐந்து பேருக்கு நோய்த் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதென ராய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>