Technology & Science

களை கொல்லிகளின்றி களைகளைக் கொல்லும் தானியங்கி இயந்திரம்!

மணித்தியாலத்துக்கு ஒரு இலட்சம் களைகளைக் கொல்கிறது இத் தானியங்கி இயந்திரம்

தொழில்நுட்பம்விவசாயம் செய்யும் கிராமங்களில் நெல் விதைத்து முளைத்து பூப்படையும் பருவத்தில் வயல்வெளிகளில் வரிசையாக நின்று, பெரும்பாலும் பெண்கள், களை பிடுங்குவதைப் பார்த்த அனுபவம் சிலருக்கு இருக்கலாம். ஆனால் பெரும் வணிகர்களால் இலாபநோக்கோடு செய்யப்படும் விவசாயத்தில் களைகளை அழிக்கவென வேதிபொருட்கள் பின்னாட்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. அது இலாபத்தைக் கூட்டியதெனினும் மக்களின் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதித்தது.

தானியங்கி லேசர் களைகொல்லி

இலங்கையின் தென்பகுதிகளில் கணிசமான மக்கள் சிறூநீரக வியாதிகளைக் கொண்டிருப்பதற்கு இப்படியான அவேதன உரங்களும், களைகொல்லிகளுமே காரணமென்பது மிக நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருமொருவிடயம். இதனால் தான் ஜனாதிபதி கோதாபய தான் ஆட்சிக்கு வந்ததும் அவேதனப் பசளையை முற்றாக ஒழிப்பேன் எனச் சபதமெடுத்திருந்தார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மொன்சான்ரோ என்னும் நிறுவனம் உற்பத்திசெய்யும் களைகொல்லி விஷம் மனிதரில் புற்றுநோயை உருவாக்குகிறது எனச் சென்ற வருடம் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. கிளிஃபொஸ்ரேட் (glyphostate) போன்ற வேதிப் பொருட்கள் மனிதரில் புற்ருநோய், பார்க்கின்சன்ஸ் போன்ற நோய்களை உருவாக்குவதாக வதந்திகள் உண்டு. இவற்றைத் தயாரிக்கும் பாரிய பல்தேசிய நிறுவனங்கள் அரசியல்வாதிகளைக் கையில் போட்டுக்கொண்டு இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, பல உண்மைகளை மறைத்து விடுவதுமுண்டு.

விவசாயத்தில் களை கொல்லி விஷங்களைப் பாவிப்பதன் மூலம், கடந்த இரண்டு தசாப்தங்களில், தாவர உணவின் ஊட்டச்சத்து 40% குறைவடைந்துள்ளது எனவும், மண்ணின் வளம் தொடர்ச்சியாகக் குறைந்து வருகின்றது எனவும் ‘கார்பன் றோபோட்டிக்ஸ்’ நிறுவனர் போல் மைக்செல் கருதுகிறார். தமது வயல்களில் வீசும் வேதிப் பொருட்களால் மனிதரது உடல் நலத்துக்கு தீங்கு விளைகிறது என்பதை விவசாயிகளும் உணர்கிறார்கள். ஆனால் களைகளைக் கொல்லாது விட்டால் விளைச்சல் அரைவாசியாகும், இலாபமும் குறைந்துவிடும். இதிலிருந்து தப்புவதற்காக ஒரு புதிய தொழில்நுட்பம் உதவிக்கு அழைக்கப்படுகிறது.

லேசர் என்னும் ஒளிக்கற்றையால் களைகளைக் கொல்லும் இச் செயலை ஒரு தானியங்கி (robot) இயந்திரம் செய்கிறது.லேசர் என்னும் அதி சக்தி வாய்ந்த ஒளிக்கற்றையின் மூலம் அறுவைச் சிகிச்சை முதல் துல்லியமாக ஒரு பொருளை அழித்தல், வெட்டுதல் போன்ற செயல்களைச் செய்ய முடியும். களைகளைத் துல்லியமாக இனம்கண்டு அவற்றில் இவ்வொளிக்கற்றையைப் பாய்ச்சுவதன் மூலம் அவற்றை அழிப்பதே கார்பன் றோபோட்டிக்ஸ் நிறுவனம் கண்டுபிடித்த றோபோ செய்யும் தொழில். இந் நடைமுறை மூலம், செயற்கை விவேக உத்திகளைப் பாவித்துக் கணனி களைகளை இனம்கண்டு அறிவித்தவுடன் லேசர் கற்றை ஏவப்பட்டு களைகளைக் கொன்றுவிடுகிறது.

களைகளில் உள்ள விசேட வாழும் தன்மை என்னவெனில், மனிதரால் கண்டுபிடிக்கப்படும் களைகொல்லி விஷங்களின் தொடர் பாவனைக்கு அவை பழக்கப்பட்டுவிடுவதுமல்லாமல் அவற்றுக்குத் தப்பி வாழும் பரிணாம மாற்றங்களையும் செயற்படுத்திவிடுகின்றன. இதனால் விவசாயிகளும் புதிய, பலமான களைகொல்லிகளை அறிமுகப்படுத்தவேண்டியவர்களாகிறார்கள்.

எமது உடலில் (குடலில்) வாழும் நட்பான பக்டீரியாக்களைப் போலவே மண்ணிலும், குறிப்பாக தாவரங்களின் வேர்களில், நட்பான பக்டீரியாக்கள் வாழ்கின்றன. இவை இயற்கைப் பசளைகளை உடைத்து தாவரங்களுக்குத் தேவையான, உறிஞ்சக்கூடிய வடிவில் மாற்றிக் கொடுக்கின்றன. இதனால் தாவரங்களுக்கும், இப் பக்டீரியாக்களுக்குமிடையில், ஒன்றுக்கொன்று உதவி செய்யும் சமரசமான சக வாழ்வு ஏற்படுகிறது. இப் பூமியில் உயிரினங்கள் தோன்றியகாலத்திலிருந்து நடந்துவரும் இம் முறையைத் தகர்த்தெறிந்தது அவேதனக் களைகொல்லிகள், பசளைகள் போன்றவற்றின் பாவனை. இக் களைகொல்லிகள் இந்த நட்பான பக்டீரியாக்களையும் அழித்துவிடுவதால் தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உரிய அள்வில் கிடைப்பதில்லை. இதனால் அவற்றை உண்ணும் மனிதருக்கும் போதுமான ஊட்டச்சத்துக் கிடைப்பதில்லை.

இதைவிட களை பிடுங்குவதற்காக மனிதரை உபயோகிப்பதில் ஆகும் செலவைக் குறைப்பதற்காகவும் வணிக விவசாயிகள் களைகொல்லிகளைப் பாவிப்பதுண்டு. இதற்கெல்லாம் விடையாக கார்பன் றோபோட்டிக்ஸ் இந்த தானியங்கி ‘களையகற்றியை’ உருவாக்கியிருக்கிறது.

10,000 இறாத்தல் எடையுள்ள இக் களைகொல்லி இயந்திரம் 8 தனித்தனியான, 150-வாட் வலுவைக் கொண்ட லேசர் கருவிகளைக் கொண்டிருக்கிறது. வலு அதிகரிக்க அதன் எரிக்கும் தன்மை அதிகரிக்கிறது. உதாரணத்திற்கு, பூனைகளுடன் விளையாடுவதற்கென அல்லது சுவர்ப் பலகைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாவிப்பதற்கெனத் தயாரிக்கப்பட்ட லேசர் (pointers) கருவிகளது வலு 1-1.5 மில்லிவாட்ஸ் வலுவைக் கொண்டவை. அறுவைச் சிகிச்சைக்குப் பாவிக்கும் லேசர்கள் சுமார் 100 வாட்ஸ் வலுவைக் கொண்டவை. உலோகங்களை வெட்டுவதற்குப் பாவிக்கும் லேசர் கருவி 150 வாட் வலுவைக் கொண்டது. ஒரு செக்கண்டுக்கு 20 தடவைகள் லேசர் கற்றையைப் பாய்ச்சுவதன் மூலம் குறிவைக்கப்பட்ட பொருட்கள் அழிக்கப்படுகின்றன.கார்பன் றோபோட்டிக்ஸ் தயாரித்திருக்கும் இந்த லேசர் களையகற்றி இயந்திரம், GPS தொழில்நுட்பத்தைப் பாவித்து போகுமிடத்தைத் தீர்மானிக்கிறது. LIDAR என்னும் தொழில்நுட்பத்தைப் பாவித்து தன் முன்னாலுள்ள தடைகளைத் தீர்மானிக்கிறது. 12 துல்லியமான காமெராக்கள் களைகள் இன்ன இன்னவென்பதை அடையாளம் காண்கின்றன. செயற்கை விவேகத்தின் மூலம் திரட்டிய தரவுகளை (deep learning) வைத்து களைகள் இனம் காணப்படுகின்றன. மணித்தியாலத்துக்கு 5 மைல்கள் வேகத்தில் நகரும் இவ்வியந்திரம் ஒரு நாளில் 15-20 ஏக்கர்களைச் சுத்தமாக்குகிறது.

“சில விவசாயிகள் சுழற்சி முறையில் பயிர் செய்கிறார்கள். அப்போது இரண்டு விதமான பயிர்கள் ஏககாலத்தில் விளையும் சாத்தியமுமுண்டு. இப்படியான தருணங்களில் எதை அழிக்க வேண்டுமென்பதை இவ்வியந்திரத்துக்கு அறிவித்துவிட்டால் போதும் அது தேவையற்ற எந்தத் தாவரத்தையும் அழித்துவிடும்” என்கிறார் மைக்செல்.

விவசாயிகளின் பாதுகாப்புக்கென, இத் தானியங்கி களைகொல்லி இயந்திரம் வேலிகளைத் தாண்டாது பாதுகாக்கவென Geo Fence எனப்படும் மென் வேலிகளை GPS மூலம் புரோகிராம் (GPS coordinates) செய்துவிடலாம். அதற்கப்பால் இவ்வியந்திரம் படி தாண்டாது.

இவ்வியந்திரம் இரவிரவாகக் களைக்காமல் வேலை செய்யும். அதி சக்தி வாய்ந்த வெளிச்சத்தைப் பாய்ச்சுவதன்மூலம் அதன் காமராக்கள் களைகளை இனம்கண்டுகொள்ள வசதிசெய்யப்பட்டிருக்கிறது.

பரீட்சார்த்த ரீதியில் சில விவசாய நிலங்களில் பாவனையிலிருக்கும் இவ்வியந்திரம் பல பருவங்களைத் தாண்டிவிட்டது. பாவித்த விவசாயிகளுக்கு இலாபத்தையும், சிறந்த பலனையும் தேடிக்கொடுத்திருக்கிறது என்கிறார் மைக்செல். ஆனால் இன்னும் பொதுமக்கள் பாவனைக்கென விடப்படவில்லை. இதன் பலாபலன்களையும், பாதுகாப்பையும் உறுதிசெய்த பின்னரே அது சாத்தியமாகும். ஆனாலும் நஞ்சு களைகொல்லிகளைவிட இதனால் ஆபத்து குறைவு என்பது நம்பக்கூடியது.