HealthInternational Medical Health Org. (IMHO)

கல்வி | நெடுங்கேணி மாணவர்களின் பரிதாபகரமான நிலைமை

IMHO Update | Januray 27, 2020

படம்: IMHO USA, நடுவில், டாக்டர் தவம் தம்பிப்பிள்ளை

நெடுங்கேணி, ஓமந்தை, மாந்தை மேற்கு பிரதேசங்களின் முற்பள்ளி மாணவர்கலின் கல்விச் சூழல் மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் இருப்பதாகச் சமீபத்தில் இப்பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் (IMHO USA ) உப தலைவர் டாகடர் தவம் தம்பிப்பிள்ளை தெரிவித்தார்.

இங்குள்ள 26 பள்ளிகளில் இரண்டில் ஆசிரியர்களே இல்லை; ஒரு பள்ளியிலாவது மாணவர்களுக்கான மல சலகூடங்கள் இல்லை; அங்குள்ள 625 மாணவர்களில் 332 பேர் பெண் பிள்ளைகள்; 11 பாடசாலைகளில் தண்ணீர்க் குழாய் வசதிகளில்லை எனப் பெரிய பட்டியலையே தரலாம் என அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள அனைத்துலக மருத்துவ நல அமைப்பு அங்குள்ள மருத்துவர்கள், நலம் விரும்பிகள் பலர் இணைந்து வட- கிழக்கு மக்களுக்குப் பணி புரியும் நோக்கத்தோடு 2004 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2004 இன் ஆழிப் பேரலை அனர்த்தத்தின்போது இவ்வமைப்பு அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது பணிகளை வழங்கியிருந்தது.

அமெரிக்காவில் பதியப்பட்ட தர்ம ஸ்தாபனமான இவ்வமைப்பு, கடந்த 15 வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் பாதிக்கப்படும் மக்களுக்குத் தனது சேவைகளைச் செய்து வந்தாலும் பெரும்பாலான அதன் பணிகள் இலங்கையின் வட -கிழக்கு சார்ந்ததாகவே இருக்கின்றன. டாக்டர் தவம் தம்பிப்பிள்ளை ஆரம்ப காலத்திலிருந்து அதன் பணிப்பாளர்களில் ஒருவராக இருந்தது வருபவர். சமீபத்தில் அவர் இலங்கையின் பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மன்னாரில், மாந்தை மேற்கிலுள்ள புனித அந்தோனியார் முன் பள்ளியைப் பார்வையிடச் சென்றபோது மேலுள்ள படம் எடுக்கப்பட்டது. படத்தில் அவருடன், அமைப்பின் இலங்கைக்கான நாடு சார் பணிப்பாளர் (IMHO Country Director for Sri Lanka) திரு கிருஷ்ணகுமார், கலப்பு பணியாளர் (IMHO Field officer) திரு யசோதரன், வடக்கு கல்வி வலயத்துக்கான அரச கல்வித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் (Asst. Director of Education) திரு ராஜேஸ்வரன் ஆகியோருடன் பள்ளி ஆசிரியர்கள்.